மனநல மருத்துவம்

பகுதி 8: இப்போதே போடுங்கள் அஸ்திவாரம்!

மாலதி சுவாமிநாதன்


இது வரையில் குழந்தைகளின் ஆரம்ப கால நலனைப் பற்றிப் பேசி வந்தோம். குழந்தை, கருவில் இருக்கும் போதும், பிறந்த பின்னும் ஐம்புலன்களால் கற்பது, மற்றும் உடல்-மனம் நலன்களைப் பற்றியும் விவரித்தோம். ஒழுங்குமுறை, அடம் பிடிப்பது, உணவு முறை கட்டுப்பாடுகள் சென்ற வாரம் பார்த்தோம். பிறந்த முதலிருந்து மனநல வளர்ச்சிக்கு இத்தனைக் கவனம் தருவது அவசியமா என்ற கேள்விகளுக்கு இந்தப் பகுதியில் பதில்கள் அளிக்கப்படுகிறது.

ஆரம்பக் கால வளர்ச்சி

குழந்தைகளின் ஆரம்பக் காலகட்டங்களில் அவர்கள் இருக்கும் சூழல், பராமரிப்பின் தரம், மனநல வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. ஏதோ காரணத்திற்காக இவை இரண்டும் குறைவாக இருந்தால் பிற்காலத்தில் மனநலக் குறைபாடுகள், போதைக்கு அடிமைத்தனம், உடல் பருமன், பயந்த சுபாவம், பாதுகாப்பின்மை இத்யாதி என நேர வாய்ப்புண்டு. இப்படி நேராமல் இருக்கவே குழந்தைகளின் ஆரம்பக் காலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது முக்கியமாகிறது. பிஞ்சு மனதில், ஆரம்பகால அனுபவங்கள் ஆழ்ந்து படியும். மனப்பான்மை, குணாதிசயங்களின் அஸ்திவாரம் இப்போதுதான். வளர்ப்பின் ஆரம்பக்  காலகட்டத்தைச் சுமுகமாக அமைத்து விட்டால் 'வரும் முன் காப்போம்' அமல்படுத்த முடியும். 

பிறந்ததிலிருந்து ஆரம்ப வருடங்களில் குழந்தைகள் வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும். கற்றலின் வேகத்தைக் காப்பாற்ற, கற்றுக் கொள்ள பல்வேறு வாய்ப்புகள் அமைப்பதும், வளர விடுவதும் மிக அவசியமானது. இதற்கேற்ற சூழல் ஏற்படுத்துவது, கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்களை நிலைநாட்டுவது போன்றவை குழந்தைகளுடன் இருப்பவரின் பொறுப்பாகும். 

இப்போதும் சரி, அதன் பிறகும், அன்பு, ஆதரவு, அரவணைப்பு, நல்ல ஊட்டச்சத்து அனைத்தும் தேவையான கலவை. மிக முக்கியம், அவசியம்.
 
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், பிறந்த குழந்தைக்கு மூளையின் செல்களில் பொருள்-தன்மைகள், செயல்-விளைவுகள் என்று ஒன்றுக்கொன்று இணைப்புகள் உண்டானால் தான் பயன்படும். நிறைய, அடர்த்தியான இணைப்புகள் ஏற்படுவதுதான் சாமர்த்தியத்தின் அடிப்படை. இதற்கு குழந்தை நகர்ந்து, அசைந்து, மற்றவர்களுடன் தொடர்பு வைத்து, பேசுவதைக் கேட்டு, பார்த்து, பலவற்றைச் செய்து, நல்லது-தவறு உணர்ந்தால் தான் செல்கள் இணையும், வளரும். 
 
உடல் வளர்ச்சியை ஒவ்வொரு கட்டத்திலும் பார்க்க முடியும், கவனித்தால் அறிவின், குணத்தின் மலர்ச்சியும் தெளிவாகத் தென்படும். அவர்களின் சொந்த செயல்பாட்டினால் வளர்வது ஒரு பாகம் ஆகும். வளர வளர மற்றவர்களின் பங்களிப்பு மற்றும் குழந்தையின் உணர்வுகளும், சமூக திறன்களின் தாக்கமும் உண்டு. 

அதனால்தான் வளர்ச்சி எப்போதும் முழுமை வடிவம் (உடல்-மனம்-மற்றவர்களுடன் பழகுவது-உணர்வு) கொண்டது என்பது. ஆரம்பக் காலகட்டத்தில் உடல் வளர்ச்சி கண்ணுக்குத் தென்படுவதால் அதைச் சுலபமாகப் பார்க்கலாம், ஆனால் கூடவே அறிவாற்றலின் வளர்ச்சி அதனினும் வேகமானது. 

உடல்நலம் 

குழந்தைகள் தங்கள் வளர்ச்சி முன்னேறுவதற்குத் தேவையானவற்றை அந்த நிலைக்கு ஏற்றவாறு செய்வார்கள். அப்படிச் செய்யத் தேவை. இவ்வாறு செய்வதால் எலும்புகளும் தசைகளும் வளர்ச்சி அடைய முடியும். வளர்ச்சி ஒன்றோடு ஒன்று இணைந்து இருப்பதால் இப்போதையை வளர்ச்சிக்கும் மற்றும் பிற்காலத்திற்கும் பெரிய அளவில் உதவும். 

முதல் முதலில் குழந்தைகள் தலையைத் தூக்குவதில் ஆரம்பித்து, பிறகு திரும்ப, குப்புறப் படுக்க, உட்கார, நிற்க, நடக்க, ஓடுவதும் ஆகும். குழந்தைகளின் பெரிய எலும்புகள் முதலில் வளர, க்ராஸ் மோட்டார் (gross motor) வளர்ச்சிக்கு முக்கியமான பங்குண்டு. இந்தப் படிப்படியான வளர்ச்சி எலும்புகளை வலிவு அடையச் செய்கிறது. கூடவே மூளையும் நிற்பதற்கு, நடப்பதற்கு எவ்வாறு தன் உடல் உறுப்புகளை இயக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறது.

குழந்தைகள் பிறந்த முதல் அவர்கள்  நிற்கவும், நடக்கவும் ஆகக் கூடிய காலம் வரையில் படுத்துக் கொண்டு இருந்தாலும், கைகாலை ஆட்டி அசைத்துக் கொள்வது, சோம்பல் முறிப்பது போல் செய்கைகள், கால் விரலைப் பிடித்துத் தூக்குவது, பக்கவாட்டில் இருப்பதைத் தொட முயல்வது என்ற ஒவ்வொன்றும் குழந்தையின் வளர்ச்சிக்காக சரிவர உதவுகிறது. இது க்ராஸ் மோட்டாரில் அடங்கும். பெரிய எலும்புகள், நரம்புகள் நடக்க, ஓட, தூக்கி ஏறிய உதவும். இது நன்றாக அமைந்தால் அடுத்தபடியான ஃபைன் மோட்டார் திறன்கள், அதாவது சிறிய நரம்புகளை நுணுக்கமாகப் பயன்படுத்தல் ஆரம்பமாகிறது. 
 
பொருட்களைப் பிடித்துக் கொள்வதிலிருந்து, எழுதுவது வரை பல செயல்களைச் செய்வது இதில் அடங்கும். இந்தத் திறன்கள் மலர்வதற்கு அடுத்த இரண்டு மூன்று வருடங்கள் தேவைப்படும். இதன் பிரதிபலிப்பைக் குழந்தைகள் பிடிப்பதில் பார்க்கலாம். ஆரம்பத்தில் பெரிய பந்தை உபயோகிப்பது, முதல் முதலில் எழுத தங்கள் பென்சில் பிடிப்பதின் விதம், சின்னக் குழந்தைகள் எழுத்துக்கள் பெரிதாக எழுதுவார்கள் எனப் பல. 
 
உடல் நலன் குறைபாடு, வளர்ப்பில் பங்கம், சூழல் பிரச்னை என்ற ஏதாவது ஒன்று ஏற்பட்டிருந்தால் அது வளர்ச்சியின் பாதிப்பில் தென்படும். இந்த பாதிப்புகளால் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் மேலும் கோளாறுகள் ஏற்படக் கூடும்.
 
அறிவாற்றல், மற்றவருடன் பழக அஸ்திவாரம்
 
பிறந்தவுடன் குழந்தைக்கு எல்லாம் புதிது. பார்ப்பதைப் பரிச்சயம் கொள்வதற்குத் தீவிரமாக முயல்வார்கள். இதை நாமும் பார்த்திருக்கிறோம்: கைகளுக்கு எட்டியதைத் தொட்டுப் பார்ப்பது, முகர்வது, சுவைப்பது எனப் பலவற்றை. குழந்தைகள் இவ்வாறே தங்களைச் சுற்றி உள்ள உலகை அறிந்து கொள்ளும் விதமாகும்.

இதை மறுமுறை வலியுறுத்திச் சொல்கிறேன், குழந்தைகள் பிறந்த முதல், அவர்களின் ஐந்தாறு வயது வரையான கால கட்டம் வரை மூளை வளர்ச்சி மிக மிக விரைவாக இருக்கும். அதே சமயத்தில் அவர்கள் கற்றலுக்கும், ஞாபக சக்திக்கும், உணர்வுகளுக்கும், உறவுகள் உருவாக்குதல் முறைகளுக்கும் இந்தக் காலகட்டம் தான் அஸ்திவாரம். அதனால்தான் இதை மிக முக்கியத்துடனும் பிரதானமாகவும் கருதுகிறோம். ஏன் இப்படி?

ஒவ்வொன்றையும் பார்த்து, கேட்டு, முகர்ந்து, சுவைத்து, கைகளால் ஸ்பரிசித்து அந்த ஒவ்வொன்றுடன் பரிச்சயம் கொள்வது மூளையில் இணைப்புகள் உருவாகச் செய்கிறது. குழந்தை 'இது என்ன?' என்று அணுகுவதால் அந்த தருணங்களில் அவர்களின் மூளையின் ந்யுரோன்ஸ் ஒன்றோடொன்று இணைந்து கொள்கின்றன. பெரும்பாலும் அவர்கள் பல புலன்களை உபயோகித்து தங்களின் அனுபவங்களைச் சேகரித்துக் கொள்வார்கள், உலகைப் பற்றிப் புரிதல்கள் ஏற்படும்.
 
அனுபவங்கள் வெவ்வேறு விதமாக இருந்தால், அதிலிருந்து பல விஷயங்கள் புரிய வரும், மேலும் கற்பதற்கு ஊக்கமூட்டல் ஏற்படுகின்றது. மேலும் செய்யச் செய்ய, அதன் மூலம் வரும் திருப்தி மேலும் ஊக்குவித்து, கற்றுக் கொள்ளச் செய்கிறது. மறுபடி மறுபடி அதே அனுபவங்கள் தான் கிட்டுகிறது என்றால் உற்சாகம் இழந்து, துருதுருவென்று புதிதாக எதுவும் செய்யாமல், குழந்தை சாந்தமாக, மௌனமாக இருந்து விடக்கூடும்.  இது கஷ்டப்படுத்தாத நன்னடத்தையின் அறிகுறி அல்ல, வாய்ப்புகள், தூண்டுதல்கள் தேவை என்பதைக் குறிக்கும்.

இங்கு எந்தவித அனுபவத்திலும் குழந்தையின் சிந்தனை செய்தால் அறிவாற்றலின் முதல் ஆரம்பக் கட்டமாகிறது. குழந்தைகளுடன் இருப்பவர்கள் குழந்தை தொடும் பொருட்களின் பெயரைச் சொல்வது, அதுவும் அறிவாற்றல் தூண்டுவதின் பங்காகும். அதே நேரத்தில், சொல் கேட்பதிலிருந்து வரும் உணர்வினால் உணர்ச்சிகள், தன்னுடன் மற்றொருவர் இருப்பதால் மற்றவர்களுடன் பழகும் விதங்கள், நடைமுறைகள் கற்றுக்கொள்ளும் இடமாக அமைந்து, உணர்வு மற்றும் சமூகத் திறமைகள் பழகிக் கொள்ள அஸ்திவாரமாகிறது.
 
வாய்ப்பு மூலமாகக் குழந்தைகளுக்கு அனுபவம் கிடைப்பதால் அவர்கள் இருக்கும் சூழல் முக்கியம். வாய்ப்புகளை அமைப்பது குழந்தைகளின் பெற்றோர், பள்ளிக்கூடம், டே கேர் ஸென்டர் பொறுப்பாகும். அப்பொழுதுதான் குழந்தைகளின் ந்யூரோன்ஸ் விருத்தி ஆகும். இவற்றை அடைவதற்கு இடம், பொருட்கள், நடைமுறைகள் எல்லாம் உறவுகளைச் சேர்க்க வளர்க்கத் தூண்டிவிடும் விதமாக இருக்க வேண்டும். அவர்களுடன் வாழும் மனிதர்களும் அவர்களுடன் செயல்படுவதால் அதில் ஆனந்தம் உணர்வார்கள். நல்ல உணர்வுகள் நியுரான்களை மேலும் மேலும் இணையச் செய்யும். அதனால் தான் வெற்றி பெற்றால் தான் சந்தோஷம் என்பது இல்லை. கற்பதின் சந்தோஷத்தின் நிலவினாலேயே வெற்றி மாலை என்றும் நம் கழுத்தில்தான்!
 
அது போலவே குழந்தையின் ஆர்வத்தில் சுறுசுறுப்பாக இருக்கையில், உன்னிப்பாகக் கவனிப்பார்கள், இந்த நிலையில் ந்யூரான்ஸ் ஒன்றுக்கொன்று இணைவதைக் காணலாம்! ஆம், ஆராய்ச்சியாளர்கள் மூளைக்குள்ளே நிகழும் இதைப் படம் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். இதனால் என்ன லாபம்? இவ்வாறு அவர்கள் செயல்பட்டுக் கொண்டே இருந்தால் குழந்தையின் மூன்றாவது வயதில் இந்த நியூரான்கள் இரு மடங்காகும்..
 
குடும்பத்தின், மற்றும் சூழலின் பங்களிப்பு

கவனிப்பில், குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள்

நன்றாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதில் ஊட்டச் சத்து உணவு, இருக்க இடம், வெயில் மழையிலிருந்து காப்பாற்ற உடைகள், உறவாட உறவுகள். இத்துடன், அரவணைப்பு, பரிச்சயமான சூழல் இருந்தால்தான் பரிபூரண ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். குழந்தைகளுடன் இருப்பவர்கள் அவர்களுக்குத் தீங்கு வராமல், தேவையில்லாத தண்டனை கொடுக்காமல், கடிந்து கொள்ளாமல் பாதுகாக்க வேண்டும். இத்துடன் குழந்தைகளுக்கு நடமாட, விளையாட, பேசக்-கேட்கக் கற்றுக் கொள்ள இடமும் தேவை.
 
பாதுகாப்பு, பத்திரமாக இருக்கும் சூழல் குழந்தைகளுக்கு மிக முக்கியமானதாகும். இப்படி இருந்தால் தான் அங்கு அன்பு இருப்பது உணர முடியும். பக்கத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது குழந்தைகளைப் பாதிக்கும். குழந்தைகள் முழு நலனுடன் வளர, கற்றுக் கொள்ள, அவர்களுக்குப் போஷாக்கு, அன்பு, கவனம், ஊக்கம் தேவை. இவை இருக்கையில் தங்களுக்கு ஆதரவு இருப்பதை உணர, மன தைரியத்துடன் தன்னை சுற்றி இருப்பதில் கவனத்தைச் செலுத்த முடிகிறது. தன்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கையில் மற்றவர்களை நம்புவது ஆரம்பமாகிறது. விளைவு? குழந்தைகள் தாங்கள் செய்வதை ஆவலுடன் உற்சாகமாகச் செய்வார்கள். உடல் -மனம்- உணர்வுகள்- மற்றவர்களுடன் பழகுவதும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணைந்து இருக்கிறது என்பதற்கு இது அத்தாட்சி.
 
யாரெல்லாம் குழந்தையுடன் நேரம் கழிக்கிறார்களோ அவர்கள் விளையாடுவது, பேசுவது, பாடுவது குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை பின்னுள்ளதாக வைக்க வேண்டும். ஏனென்றால் ஆரம்ப வளரும் வயதில் குழந்தைகளின் வளர்ச்சி உச்சக்கட்ட நிலையில் இருப்பதால் பல விதமான தூண்டுதல் தருவது தேவை, முக்கியம், அவசியம். பலமுறை சொன்னது போல, குழந்தைகள் பல முறை செய்வதும், செய்து பார்ப்பதும் இந்த வயதின் பிரதிபலிப்பே. பல வகையான எழுப்புதலை உருவாக்கி தந்தால் அது குழந்தையின் முழு வளர்ச்சியில் தென்படும். 
 
இதற்கு நேர்மாறாக குழந்தையுடன் எந்தவிதமான ஈடுபாடு இல்லாமல் இருந்தாலோ இல்லை குழந்தைகளை அடித்து, துன்புறுத்தி, எந்தவிதத்திலும் அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களையும் தராமல் இருந்தால் அது குழந்தை வளர்ச்சியைக் குன்றி விடும்.
 
இந்த குழந்தைகள் உடல் வளர்ச்சியில் குட்டையாக இருப்பார்கள். மந்த நிலையில் நிலவுவதால் ஒன்றைச் சொன்னால் புரிந்து கொள்ளப் பல நிமிடங்கள் ஆகும். குழந்தைகளிடம் இருக்கும் அந்த ஈர்ப்பு இருக்காது. குழந்தையும் தன்னை புறக்கணிப்பதைப் புரிந்து கொள்வதால், "ஏன் பிறந்தேனோ?" என்ற வாடிய முகமாகவே இருப்பார்கள்.
 
இதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது! இதே குழந்தைகளை அரவணைத்து, நல்ல ஊட்டச்சத்து கொடுத்து, ஊக்குவித்து, அவர்களின் ஐம்புலன்களையும் சிலிர்க்க வைக்கப் பொருட்களுடன் விளையாடி, ஊக்கமளிக்கும் சூழல் உருவாக்கித் தந்தவுடன் அவர்களின் குன்றிய வளர்ச்சி வேகமாக முன்னேறும். வறண்டப் பூமியில் மழைநீர் படப் பட, குளிர்வது போல்.
 
குடும்பம் தான் குழந்தைகளுக்கு மிகப் பெரிய ஊக்குவிப்பும், தூண்டுதல் தருவதும் ஆகும். குடும்பங்கள் வெளி உலகை அறிமுகம் செய்வது, உறவாடச் செய்வதால் குடும்பத்திற்குக் குழந்தை வளர்ப்பில் பெரிய பங்குண்டு.
 
ஆதரவாக ஊக்கவிக்க: பெற்றோர், கூடப்பிறந்தவர்களுடன் பல வகையானவை செய்ய வேண்டும், விதவிதமான விளையாட்டு, வயதுக்கு ஏற்ற விளையாட்டு. கூடிய வரையில் அவ்வப்போது வீடு மாற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமாகக் கற்றுக்கொள்வார்கள்.
 
இப்படித்தான் தான் எதிர்கால கற்றலுக்கு அஸ்திவாரம் இப்போதே போடத் தேவை. அப்பொழுது தான்
 
மிகச்சிறந்ததைப் பெற,
மிகச்சிறந்ததைக் கொடு!
மேலும் பார்ப்போம் 

மனநலம் மற்றும் கல்வி நிபுணர் மாலதி சுவாமிநாதன்     malathiswami@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT