பகுதி 7: உங்கள் குழந்தை அடம் பிடிக்கிறார்களா? சரியாக சாப்பிட மறுக்கிறார்களா?

அடம்பிடிப்பின் காரணிகள், அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து, என்ன செய்யலாம் என்பதைச் சென்ற வாரம்
பகுதி 7: உங்கள் குழந்தை அடம் பிடிக்கிறார்களா? சரியாக சாப்பிட மறுக்கிறார்களா?

அடம்பிடிப்பின் காரணிகள், அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து, என்ன செய்யலாம் என்பதைச் சென்ற வாரம் ஆராய்ந்தோம். இந்தக் கட்டுரையில் உணவு உட்கொள்ளும் வழிமுறைகளும், அவற்றின்  தாக்கம் அடம்பிடிப்பு மற்றும் ஒழுங்குமுறைகள் மீது எப்படி ஏற்படக் கூடும் என்று ஒரு பார்வை இடலாம். 

உணவு வழிமுறைகளும் ஒழுங்குமுறைகளும்

சிறு குழந்தைகளுக்கு உணவை ஊட்டி விடுவதைத் தாராளமாகச் செய்யலாம். இது குழந்தைகள் வளரும் போது செய்வதுதான். ஊட்டி விடுபவருக்கும் குழந்தைக்கும் பந்தம், கதை சொல்ல வாய்ப்பு, எதை எப்படி ஏன் சாப்பிட வேண்டும், ஊட்டிவிடும் சூழலில் பலவற்றைப் பற்றிக் கற்பிக்கலாம் என்று விதவிதமான நன்மைகளைப் பட்டியல் இடலாம். 

சாப்பாட்டை ஊட்டிவிடும் பொழுது தினமும் அதே குறிப்பிட்ட இடத்தில் செய்தால் குழந்தைகளும் சாப்பிடும் போது, ஒரு இடம் நியமிக்கப் பட்டிருக்கிறது, அங்கு தான் அதைச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தானாக அமைந்து விடும். இது, மிக எளிமையான முறையில், ஆழ்ந்து படியும் கற்பித்தல் ஆகும். கைக்குழந்தைக்கு உணவை ஊட்டிவிடும் ஆரம்பக் காலத்திலேயே ஒரு குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து உணவைத் தருவதிலிருந்து இது ஆரம்பமாக வேண்டும். அடுத்த நிலையில் குழந்தைக்கு அவர்களின் மேஜை நாற்காலியில் அமர்த்தி ஊட்டிவிடலாம். திரும்பத் திரும்பச் செயல் மூலமாகச் சொல்வது, "இங்கே மட்டும்" என்பதை.

பெற்றோர், தாத்தா-பாட்டி, மாமா-மாமி, யார் உணவை ஊட்டினாலும், அதே குறிப்பிட்ட இடத்தில் உட்காரும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால், ஒழுங்குமுறை மேலும் வலுவாகும், தவிர எல்லோரும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவார்கள் என்பதை உறுதிப் படுத்தும்.

குழந்தைகள் மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வது இந்த வயதில் அதிகம். அதற்கு, வீட்டில் எல்லோரும் அதேபோல் உணவைக் குறிப்பிட்ட இடத்திலேயே சாப்பிட்டால் குழந்தையிடம் வீட்டினர் சொல்வதும் செய்வதும் இணங்கும்!

அதே போல, பருகும் விதங்களைக் குழந்தைகளுக்கு ஆரம்பக் காலத்திலேயே பழக்கி விட சந்தர்ப்பங்களை உபயோகிக்க வேண்டும். கீழே கொட்டக் கூடாது, நிதானமாக ஆனால் சுறுசுறுப்பாக குடித்து விட வேண்டும் என்பது போல் வெவ்வேறு கட்டுப்பாடுகளை முதலிலிருந்தே அமல் படுத்துவது நல்லது.

குழந்தைகள் தானாக சாப்பிட முயற்சிக்கும் வயது வந்ததும் குடும்பத்துடன் கூடவே சேருது சாப்பிடுவது நல்லது. நம் கலாச்சாரத்தில் இதை பழக்கவே பல சந்தர்ப்பங்களை அமைத்திருக்கிறார்கள். எல்லா மதத்தினரின் பண்டிகைகளின் சம்பிரதாயத்திலும், ஒன்றாகக் கூடி, விருந்து உண்பது உண்டு. அதுவும் முதல் பந்தியில் குழந்தைகளை உட்காரச் சொல்வதும் அவர்களுடன் வீட்டின் முதியவர்களிடம், பெரியவர்களிடம் கற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம், பயன்படுத்த வேண்டும்.

ஆனால் பெரும்பாலும் இப்போது நடப்பது:  கூடச் சேர்ந்திருக்கையில் எல்லோரும் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் ஸீரியல், அல்லது திரைப்படம், ஏதோ ஒன்றைப் பார்த்துச் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். கூடிபேசி ஒன்றாகச் சாப்பிடும் வாய்ப்பு தொலைந்தது.

நிலாச்சோறு

பல ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு, சாப்பிடும் நேரங்கள் பந்தத்தை மேம்படுத்தும் என்பது. நம் கூட்டுக் குடும்பங்களில் இதைப் பார்த்திருக்கிறோம். பல ஆராய்ச்சியாளர்கள் இதை மிக தெளிவாகக் காண்பித்து இருக்கிறார்கள். 

குறிப்பாக, காலை மாலை உணவை குடும்பத்தினர் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டால், குடும்ப உறவுகள் மிகப் பலமாக இருக்கும் என்பதைக் காட்டியுள்ளார். நேர நிமித்தங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒரு வேளையாவது ஒன்றாக சாப்பிடுவது, உறவு வலுப்படுத்திக் கொள்கிறது.

இதில் எதை, எப்போது செய்தீர்கள்? 

குழந்தைக்கு நீங்களாகக் கதை சொல்லி சோறு ஊட்டியதுண்டா?

குழந்தைக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டியதுண்டா?

சோறு ஊட்ட உங்களது இந்த பொறுப்பை  ஊடகங்களிடம் தந்து விட்டு, அதை உபயோகித்து சாப்பிட வைப்பதுண்டா? ஸக்ரீன் டைம் ஆரோக்யம் அல்ல என்ற தகவலை தெரிந்துமா?

குடும்பமாக கடைசியாக என்றைக்கு ஒன்றாகச் சாப்பிட்டிர்கள்? 

எல்லோரும் கூடி, வட்டமாக உட்கார்ந்து, ஒருவர் எல்லோருக்கும் சோறு ஊட்டினது உண்டா?

சாப்பிடுவதில் கற்றலுக்கும் வாய்ப்பு உண்டு. உணவைக் கையாளும் போது விரல் நுனிகளுக்கும் பயிற்சியாகிறது. அத்துடன், சாப்பிடுவதின் பெயர் அறிந்து, உச்சரிப்பதில் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள முடிகிறது. தானாக விரல்களால் சாப்பிட முடியும் என்பதை ஃபிங்கர் ஃபுட்ஸ் (finger foods) மூலமாக தன்னம்பிக்கை பெறமுடிகிறது. ஆரம்பத்தில், சிந்தினாலும் சாப்பிடப் பழகப் பழக வெளியே சிந்தாமல் சாப்பிடுவது தொடங்கும்.  

இதன் மூலம் நல்லதொரு கோட்பாடுகளைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இதேபோல் மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதும் அவர்களைப் பார்த்துச் சாப்பிடும் ஒழுங்குமுறைகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகிறது. போன வாரம் சொன்னது போல், ஐம்புலன்களைப் பயன்படுத்துவதால் உடல் நலன் மேம்படும்.

நிலாச் சோறு என்பதைக் கேள்விப்பட்டிருப்போம், அதை அனுபவித்தும் இருக்கலாம். இதைக் குழந்தைகள் சாப்பிட உபயோகிக்கக் கூடிய மிக நல்ல முறையாகும். குழந்தைக்குப் பல தகவல்களைச் சொல்லக்கூடிய சந்தர்ப்பமாகிறது, அத்துடன் அவர்களுக்கு  இது தான் இதன் செய்முறை என்பதைச் சொல்லாமல் தெளிவுபடுத்தும்.

பல மனித வளர்ச்சி நிபுணர்களின் கருத்து, அன்றும்-இன்றும் இதுவே: எவ்வாறு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது வளர்ச்சிக்குத் தேவையோ, அதேபோல் எல்லாம் கிடைத்துவிடாது என்ற நிதர்சனம் மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும். கசப்பான அனுபவங்கள், சிந்தனை, நோய், வளர்ச்சிக்கு இடையூறாகும். இதைப் பற்றியும் மற்ற ஒரு பாகத்தில் பேசுவேன்.  

இதுவரை நாம் பேசியது: வீடும், குழந்தைகளைக் காக்கும் இடங்களிலும் எந்த மாதிரியான சூழல் அமைக்க வேண்டும்

  • குழந்தைகளுக்குப் பிறந்ததிலிருந்தே புரியும், அவர்களுடன் பேச வேண்டும். 
  • குழந்தை தன் நடத்தையை சரி செய்ய வேண்டும் என்றால் தெளிவாக அதைச் சொல்வது முக்கியம். 
  • குழந்தைகளுக்கு அவர்களாகச் செயல்பட இடம், நேரம், தர வேண்டும்.
  • "தேவை", "வேண்டும்" இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிய வைப்பது முக்கியம். 
  • ஐம்புலன்களுக்கு ஏற்றபடி, பொருட்களை ப்பரிசித்து, உணர்ந்து, ஆராய்ந்து அனுபவிக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
  • குழந்தைகளின் ஆற்றலை ஆரோக்கியமான வழியில் வெளிப்படுத்த, இயற்கையுடன் இருப்பது நன்கு. 
  • குழந்தைகளுடன் பெற்றோர், கூடப் பிறந்தவர்கள், தாத்தா பாட்டி, சேர்ந்து சாப்பிடுவது நல்லது. 
  • சிறு குழந்தைகளுக்கு கணினி கொடுத்தால், அதன் நேரத்தை நாளைக்குப் பத்து நிமிடத்திற்கு வைக்கவும்.
  • குழந்தைகள் வளர தாங்கள் எடுத்த பொருட்களைப் பயன்படுத்திய பின் அதே இடத்தில் வைக்கப் பழகி விட வேண்டும். பொறுப்பு தானாக வளரும்.

இப்படித் தான் எதிர்காலக் கற்றலுக்கு அஸ்திவாரம் இப்போதே போடத் தேவை. ஏனென்றால், மிகச்சிறந்ததைப் பெற, மிகச்சிறந்ததைக் கொடு!

மேலும் பார்ப்போம்..

மனநலம் மற்றும் கல்வி நிபுணர் மாலதி சுவாமிநாதன்            malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com