1. நாமாக உட்கொள்ள அனுமதிக்கும் அருமருந்து இது!

நாமாக உட்கொள்ள அனுமதியுள்ள மருந்து எதுவென்று கேட்டால், இசை, பாட்டு, சங்கீதம் என்பேன்!
1. நாமாக உட்கொள்ள அனுமதிக்கும் அருமருந்து இது!

ஒரு வினா: பயணிக்கும் போது எந்த வயதினரும் விரும்பிச் செய்வது?

விடை : பாட்டு, இசை, சங்கீதம் கேட்பது!

நாமாக உட்கொள்ள அனுமதியுள்ள மருந்து எதுவென்று கேட்டால், இசை, பாட்டு, சங்கீதம் என்பேன்! குழந்தைகளை ஏன் நாம் இளம் வயதிலிருந்தே பாட்டு கற்றுக் கொள்ளச் செய்வதுண்டு?

பாடல் அரங்குகளில் ரசிகர்களுக்குள் ஏன் அப்படி ஒரு பந்தம் ஏற்படுகிறது? பாட்டுக்கும் கணக்கு புரிவதற்கும் என்ன சம்பந்தம்?

இவற்றின் பதில்களைக் கண்டறிவோம். பாட்டுடன் பல நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன, முடிப்பதும் தேசிய கீதத்துடன், அதுவும் பாட்டுதான். சிறு வயதிலிருந்து பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் காலையில் பாடலிட்ட இறை வணக்கமோ, ஒற்றுமை கீதத்துடனோ, இல்லை வாழ்த்துப் பாடிய பின்பே வகுப்பும் ஆரம்பமாகிறது.

இந்த பழக்கத்தை பொதுவாக எல்லோரும் கடைபிடிக்கிறார்கள். கண்டிப்பாக இதற்குக் காரணம் இருந்தே ஆக வேண்டும்.

காரணம் இதுவே - ஒன்றைப் பாட்டுடன் தொடங்கினால் அது நம்முள் ஒரு அமைதி நிலவச் செய்கிறது. அது வரையில் நம் மனதை, சிந்தனையை உறுத்த பலவற்றைச் சாந்தப்படுத்த முடிகிறது. அதனால்தான் பாடங்களை ஆரம்பிக்கும் முன்பும் காலை வணக்கம் பாடலாகப் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்கிறோம். அது போலவே ஆலயங்களிலும் பாடலாகவே பல தொழுகை உண்டு. இதில், செவியைத் தவிர ஒவ்வொரு அங்கத்திற்கும் ஈடுபாடு. உடலுக்கும்- மனதிற்கும் நன்மைகள் தரும் பாட்டின் அருமைகளைப் பற்றி இங்குப் பார்வையிடப் போகிறோம்.

பாட்டுக் கேட்பதால் அது நம் இதயத் துடிப்பை இதமாக்கி, நம் மனநிலையையும் அமைதிப்படுத்தி விடுகிறது. இது எப்படி சாத்தியம்? நம்முடைய மூளையின் ஆழ்ந்த பாகமான மெடுல்லா ஆப்லாங்கேட்டாவின் பிடியில்தான் நம்மைச் சுவாசிக்க வைக்கும் நியூரான்கள் உள்ளன. நியூரான்கள் என்ற நரம்பணுக்கள் மூளையின் ஒவ்வொரு பாகத்தையும் இணைக்கிறது. ஆராய்ச்சியில் பல முறைப்பாட்டினால் இவைகளின் மீது தாக்கம் ஏற்படுவதை கண்டறிந்துள்ளார்கள். அதனால்தான் பாடுவதால் நம் சுவாசத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆராய்ச்சியில் இன்னொன்றும் நன்றாகக் காட்டப்பட்டுள்ளது, மருந்துகள் செய்யக் கூடியதொன்றைப் பாட்டு செய்கிறது என்று கார்ட்டிஸால் என்ற மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ரசாயனத்தைச் சுரக்கச் செய்கிறது. இதைப் போலவே டோபமைன், ஸெரோடோனின், என பல முக்கியமான ரசாயனங்கள் நம் உற்சாகம், உணர்வுகளுக்குப் பொறுப்பாளியாகி இருக்கும் அனைத்தையும் பாட்டுத் தூண்டி விடக்கூடிய சக்தியாகிறது.  

இந்த ரசாயனங்கள் சுரப்பதால் அமைதியடைய முடிகிறது. விளைவாக, மன அழுத்தத்திலிருந்து வெளிவர முடிகிறது. இது மட்டுமல்ல, குறிப்பாக ஓரிரு வகை நரம்பியல் பாதிப்பு உள்ளவர்கள் பாட்டுக் கேட்டாலோ, இல்லை பாடினாலோ சாந்தம் அடைகிறார்கள் என்றதையும் ஆராய்ச்சி காட்டியிருக்கிறது. பார்க்கின்ஸன்ஸ் உள்ளவர்களின் நடுக்கம் கொஞ்சம் சமாதானம் அடைகிறது. ஆல்ஜைமேர்ஸ் மற்றும் டிமென்ஷியா இருப்பவருக்கும் பாட்டினால் பதற்றத்தைக் குறைக்க முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இப்படி ஆவதற்கு, பாட்டில் என்ன அப்படி இருக்கிறது? பாட்டுக்கு நாம் செவி சாய்க்கும் போது, அறிவு, உணர்வுகள், உடல் அசைவுகள், சிந்தனை உள்பட ஒவ்வொரு ஆற்றலின் பங்களிப்பும் உள்ளது. இத்துடன், நம் மூளையின் இன்பம், மகிழ்ச்சிப்படுத்தும் பகுதிகளைச் செயல்படுத்துவதால் முழுமையான ஈடுபாடாக அமைகிறது. மேலும் பாட்டுக் கேட்கும் போது அந்தத் தருணங்களில், நாம் சந்தோஷமாக இருக்கும் போது, அல்ல மனதிற்குப் பிடித்த உணவு வகைகள் சாப்பிடும் போது, நம் மூளையினுள் எவ்வாறு தென்படுகிறதோ, அதைப் போலவே பாட்டின் அனுபவத்திலும் தென்படுகிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பாடல்களில் சொற்கள் இருப்பதால் அது மூளையின் மொழியைப் புரிந்து கொள்ளும் வர்னிக்ஸ் என்கிற பகுதிகளையும் செயல்படுத்துகிறது.

இது வரையில் பார்த்தலில் மிக முக்கியமான ஒன்று பாட்டினால் அமைகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த விதப் பாடலாக இருந்தாலும், அதன் ஈடுபாட்டில் நமக்கு அறிவாற்றல், படைப்பாற்றல் தரும் மூளையின் இருபக்கங்களின் பங்களிப்பும் உண்டு என்று. இதன் நேர் விளைவாக நினைவாற்றல் மேலும் வலிவு அடைகிறது, கற்றல் மேம்படுகிறது.

சில விதமான பாடல் நம்மை ஈர்க்காமலும் இருக்கலாம். அந்தத் தருணங்களில் அவை ஓலமாகவோ சத்தமாகவோ கேட்கும். குறிப்பாக, பாட்டை நம் மீது திணிக்கப்பட்டுவிட்டால், இந்த நிலைமைதான். பாடலில் பல வகையான நுணுக்கமான பொருள்கள் அடங்கி இருந்தால் கூட, நமக்கு அதைப் புரியாததால் அப்பொழுதும் சத்தம் போல் தோன்றும். ஒரு வேளை நாம் செய்து கொண்டு இருப்பதைக் கவனம் செலுத்த வேண்டி இருந்தால், அந்த நேரங்களில் பாட்டை இடையூறாகக் கருதுவோம். பாடலில் வரும் வரிகளுக்கு ஈர்ப்பு கொண்டு விட்டால் எரிச்சல் வரலாம் (வேலையையும் முடிக்கவில்லை. பிடித்த வரிகளையும் ரசிக்க முடியவில்லை).

வரிகள் ஏன் கவனத்தை சிதறடிக்கும்? ஏனென்றால், வரிகள் மூளையின் வெர்னிக்ஸ் பகுதியில் இருப்பதால். நம் வேலைகளுக்கு மூளையின் அதே பகுதி தேவை, ஏனென்றால் அங்கேதான் வார்த்தைகளை உருவாக்கி, சரி செய்யும் பகுதியாகும். இதனால்தான் வரிகளில் வார்த்தை-அர்த்தம் கலவை இருப்பதால், அர்த்தங்களைக் கவனம் செலுத்த, ஆர்வம் தூண்டிவிட ராகங்களை ரசிக்க, வார்த்தைகள் குறுக்கிட, கவனத்தைத் தட்டுத்தடுமாறிப் போக வாய்ப்புண்டு. ஆகவே மும்முரமாக வேலை பார்க்கும் இடத்தில் வாய்பாட்டுக் கேட்பது உசிதம் இல்லை என்பார்கள். இந்த இடங்களில் வாத்திய இசை கேட்பது உசிதம்.

நம் இந்திய நாட்டில், பாட்டின் நன்மைகளைப் பற்றி  நான்காம் நூற்றாண்டு கிமுவிலே சொல்லப் பட்டிருக்கிறது. ‘ராகா சிகித்ஸா’ என்ற பழமை வாழ்ந்த நூலில் பாட்டின் ராகங்களால் குணமாகும் ஆற்றலைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள் பாட்டின் உன்னதத்தின் அறிதல் நாம் அறிந்ததே! இருந்தும், இதை வலியுறுத்தி இன்றும் முன் வைக்கச் செய்கிறோம் (இதைப் பற்றி மேலும் புரிந்துகொள்ளவா? இல்லை தெரிந்ததை பற்றி ஆழமாகக் கலந்துரையாடவா?).

பாட்டை போல நம் கலாச்சாரத்தில் பல நன்மைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் நாம் மேலும் வளர, தெரிந்து கொள்ளப் பல விஷயங்களை நம் வாழ்வுடன் பின்னி வைத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இதுவரை விஞ்ஞானக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்த இசையின் சிறப்புகளை இனி நாம் பொதுக் கண்ணோட்டத்துடனும் சற்று பார்க்கலாம்.

இசை, பாட்டு, சங்கீதம் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம். எந்த விதமான பாடலை எடுத்துக் கொண்டாலும், அது திரைத்துறையில் வருவதோ, கர்நாடக ஹிந்துஸ்தானி சங்கீதங்களோ, பஜனைகளோ, இல்லை குறிப்பாக ஜெயதேவர், அன்னமைய்யா, தியாகைய்யா, புரந்தரதாசர், மீரா, கபீர்தாசர், ராமதாஸர், பாக், மோஸார்ட், எம்.எஸ்.வி, ஏ.ஆர். ரஹ்மான், எஸ். டீ. பர்மன், சலீல் செளத்ரி, இளையராஜா, என யாருடையவையாக இருந்தாலும் மனதுக்கு அளிப்பது சுகம், சந்தோஷம், அமைதியே! எல்லா நிகழ்வுகளின் போது, மதத்திலும் தேவாலயங்களில் பாடுவது ஒரு சம்பிரதாயம்!

நம் கலாச்சாரத்தில் இதனால்தான் பாட்டுக்கும் பாட்டு கற்றுக் கொள்வதற்கும் பிரத்யேகமான இடம் உண்டு. எந்த பாரபட்சமின்றி பாட்டைக் கற்றுக் கொள்ள ஆண்-பெண் இருவருக்கும் சம உரிமை அளிப்பதும் குறிப்பிட்டத்தக்கது. இதைப் பல குடும்பங்களில் நாம் பார்த்ததே. ஆண்-பெண் குழந்தைகள் பாட்டு, அல்ல இசைக் கருவி ஒன்றைக் கற்றுக் கொள்வது என்பது பொதுவான ஒன்றே. பாட்டுக்கென்று ஒரு வகுப்பு பள்ளிக்கூடங்களிலும் ஒதுக்கி வைப்பதுண்டு. ஏன் இப்படி ஓர் இடம் என்பதை இங்கு ஆராய்வோம்.

பாட்டின் ரீங்காரம்

எந்தவித தடையுமின்றி நம்முள் உலாவி வருவது, நம்மிடம் உத்தரவு கேட்காமல் நம்மை ஆட்கொள்வது பாட்டு, இசை, சங்கீதமே. எங்கே பார்த்தாலும், எதைக் கேட்டாலும் அதில் இசை உண்டு. நம்மை வருடிச் செல்லும் தென்றலின் அசைவில், அலையின் ஓசை, டம் டம் என உருளும் இடி, டப் டப்பென விழும் மழைத் துளிகள், சல சலலென மண்ணில் உருளும் இலைகள், பணியில் பற்களின் பாடல், சிரிப்பில், என்று எதிலும் ஒலி இருப்பதால், ஒரு வேளை அதனால் தான் நம் செவிக்கு இசை கேட்டதும் இதமாக விடுகிறதோ?

இயற்கையின் எல்லாவற்றிலும் ஒரு நாதம் ஒலிக்கச் செய்கிறது. இதனாலேயே நம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்து, வாழ்விலும் நிலவுகிறது. அது சமாதானப்படுத்தும் கருவியாகவோ, இல்லை பொழுதை நன்றாகக் கழிக்கவோ. பல நேரம் ஏதோ செய்யப் பாட்டும் ஒலித்துக் கொண்டிருக்கும், மனதிலோ, இசைத் தட்டிலோ, எஃப் எம் ரேடியோவிலோ.

இந்த நிமிடம் எந்தப் பாட்டு உங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது?

எல்லோருடைய நண்பன், இசை பாட்டு மன-உடல் வலியைச் சமாளிக்க உதவும் கருவியான பாட்டு மனதை லேசாக்கும். பாட்டினால் சிந்தனைக் கடல் பெருகி வரும். பாட்டினால் உள்ளம் அமைதி கொள்ளும். பாட்டு விருத்தி செய்யும். பாட்டு, நாமாக உட்கொள்ள அனுமதிக்கும் அருமருந்து!

தொடரும்…..

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com