திறமையானவர்களுக்கே வாய்ப்புகள் கிடைப்பதில்லை

'ஆட்டிசம்' - என்பது மூளையின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய நரம்பு சார்ந்த குறைபாடு ஆகும்.
திறமையானவர்களுக்கே வாய்ப்புகள் கிடைப்பதில்லை

'ஆட்டிசம்' - என்பது மூளையின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய நரம்பு சார்ந்த குறைபாடு ஆகும். இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு 'ஐ கியூ' (கூரிய நுண்ணறிவு) மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. ஆகவே அவர்கள் இதைப் பயன்படுத்தித் தாங்கள் விரும்பும் துறையில் பிரபலமாகலாம். 

'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட 19 வயது பிரணவ். சரியான வழிகாட்டுதல்களால் அகில இந்திய சாதனை ஒன்றை நிகழ்த்திக் காட்டியுள்ளார். 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்டவர்களில் இந்தியாவின் முதல் விளம்பர மாடலாகப் பிரணவ் மாறியிருக்கிறார். பிரணவ் ‘United Colours of Benetton’ மற்றும் US போலோ போன்ற ஆடை நிறுவனங்களுக்கு மாடலாக பணிபுரிந்துள்ளார். தற்சமயம் டில்லியில் செயல்படும் 'நிஞ்ஜாஸ் மாடல் மேனேஜ்மேண்ட்' நிறுவனம் தொழில்ரீதியான மாடலாக பிரணவ்வை ஒப்பந்தம் செய்துள்ளது. 

பிரணவ்வை உயரங்களில் ஏற்றிவிட்டிருக்கும் தாய் அனுபமா மனம் திறக்கிறார்:
'சிறு வயதில் பிறர் பேசுவதை மட்டும் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்ததாலும், எவருடனும் சேராமல் ஒதுங்கியே இருந்ததாலும், சரிவர பேச வராமல் இருந்ததினாலும், பிரணவ்விற்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்று உறுதி செய்யப்பட்டது. பிரணவ்வின் எதிர்காலத்திற்காக நானும் மூத்த மகள் நிகிதாவும் இணைந்து செயல்பட முடிவு செய்தோம். மருத்துவரின் ஆலோசனைப்படி பிரணவ்விற்கு வழிகாட்டத் தொடங்கினோம். கதைகள் சொல்லி பிரணவை சந்தோஷப்படுத்தினோம். 

பிரணவ்விற்கு ஆங்கில இசை மீது ஈடுபாடு ஏற்பட்டதால் அதைக் கேட்டு ரசிக்க ஊக்குவித்தோம். பிரணவிற்கு என்று சிறிய நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம். தமக்கையுடனும், சுற்றத்தாருடனும் வெளியே சென்று வரத் தொடங்கினான். ஆசை ஆசையாக கோல்ஃப் ஆட கற்றுக் கொண்டான். காமிரா கொண்டு படம் பிடிக்கவும் ஆரம்பித்தான். 

மேடையில் ஏறி நிகழ்ச்சிகள் வழங்க வேண்டுமென்பது பிரணவ்விற்கு அதீத விருப்பம். அதை எப்படி நிறைவேற்றுவது என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன். பிரணவ்விற்குப் பதினைந்து வயதாகும்போது பள்ளிப்படிப்புடன் கிராபிக் டிசைனும் கற்றுக் கொண்டான். பதினாறு வயதில் மாடல் ஆகும் ஆசை பிரணவ்வை தொத்திக் கொண்டது. பிரணவ்வை நாடக பட்டறையில் சேர்த்து விட்டேன். அடுத்து மாடலாகவும் பயிற்சி தரப்பட்டது. 
சீக்கிரம் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து வாய்ப்புகளுக்குப் பிரணவ்வின் காத்திருப்பு தொடங்கியது. ஒத்திகை நடக்கும் போதும் நிகழ்ச்சிகளின் போதும் மேடையில் பிரணவ் மாடலாக மாறி உடல் மொழியை முற்றிலும் மாற்றிக் கொண்டு விடுகிறான். மாடல் உலகத்தில் கடும் போட்டி நிலவுகிறது. 

'திறமையானவர்களுக்கே வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆட்டிசம் பாதித்திருக்கும் பிரணவ் மாடலிங் துறையில் நுழைய முடியுமா... வாய்ப்புகள் தருவார்களா... அப்படியே வாய்ப்புகள் கிடைத்தாலும் மாடலாகப் பிரணவை ஏற்றுக் கொள்வார்களா..?' என்று எனக்கு பலத்த சந்தேகம் இருந்தது. ஆனால் மகள் நிகிதா "பிரணவ் மாடல் ஆகணும்னு ஆசைப்படறான்.. நாம அதை நிறைவேற்றி காண்பிப்போம்..' என்று உணர்ச்சி பூர்வமாகச் சொல்ல நான் உற்சாகமானேன். 

மாடலிங் குறித்த செய்திகளைத் திரட்டத் தொடங்கினேன். 2017-இல் பெங்களூருவில் மாடலாக மேடை ஏற பிரணவ்விற்கு வாய்ப்பு கிடைத்தது. பிரணவ்வின் அழகான தோற்றத்தைப் பார்த்து வாய்ப்புகள் வரத் தொடங்கின. பிரணவ்வின் கனவுகள் நனவானது.

'ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் ஓவியம் வரையலாம்... பாடலாம்.. படிக்கலாம்... ஏன் விளையாட்டில் கூட முத்திரை பதிக்கலாம் என்று சொல்வார்கள். அந்தப் பட்டியலில் மாடலிங் துறை இடம் பெறவில்லை. பிரணவ் மாடலாக வெற்றிபெற்றிருப்பதால் இனி ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளை மாடல் ஆக்க பல பெற்றோர்கள் முன் வரலாம்' என்கிறார் அம்மா அனுபமா.

'மாடலிங்கில் எனது ரோல் மாடல் ஸ்பெயின் நாட்டின் சூப்பர் மாடலான ஜான் கோர்ட்டாசரேனா. மாடலாகத் தினமும் பயிற்சி செய்ய நான் மறப்பதில்லை. எனது வெற்றிக்குக் காரணம் அம்மாவும், அக்காவும்தான்..' என்கிறார் பிரணவ்.. 
-சுதந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com