பகுதி 5: அடம் பிடிப்பு, கவனம் ஈர்க்க முயற்சி?

இந்த “குழந்தை வளர்ப்பைச் சிறப்பிக்க” தொடரில் வளர்ப்பின் பலவற்றைப் பற்றிப் பேசி வருகிறோம்.
பகுதி 5: அடம் பிடிப்பு, கவனம் ஈர்க்க முயற்சி?

இந்த “குழந்தை வளர்ப்பைச் சிறப்பிக்க” தொடரில் வளர்ப்பின் பலவற்றைப் பற்றிப் பேசி வருகிறோம். சென்ற வாரம் குழந்தைகள் தனக்கு வேண்டியதைப் பெறுவதற்கான திறமைகள், கட்டுப்பாடுகள், மற்றும் சில சமயம் அடம்பிடிப்பு உருவாகும் விதம், ஏன் என்ற சில விஷயங்களை கடந்த வாரம் பேசினோம். தொடர்ந்து, அடம் பிடிப்பின் காரணிகளை,  அதன் தீர்வைப் பற்றி இந்த பகுதியில் உரையாடலாம்.

பெரும்பாலும் குழந்தைகள் செய்து பார்த்து, அதன் விளைவுகளிலிருந்து எங்கே, ஏன், எப்படிச் செய்வது, எது கூடாது என்பதைப் பழக்கப் படுத்திக் கொள்வார்கள். இதுதான் அவர்கள் கற்றுக்கொள்ளும் விதம். அப்படி இருக்கையில், சிறுவயதிலேயே சரியான பழக்க வழக்கங்களை அமைத்தால் ஆரம்பத்திலிருந்து புரிந்து செய்வார்கள். 

குழந்தைகள் வளரும் போது அவர்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்யப் பல யுக்திகளை உபயோகித்துப் பார்ப்பார்கள். அதில் சில, அவர்களுக்கும் சரி, நமக்கும் சுமுகமாக அமையும். சில சமயம் அப்படி நேராமல் போகலாம் என்பதையும் சென்ற வாரம் பார்த்தோம். இந்த வாரம் அடம் பிடிப்பது எப்போது நிகழ்கிறது, கவனம் ஈர்ப்பதற்கான நடத்தைகள், இதன் காரணிகளும் தீர்வையும் பற்றி இங்கே பேசலாம்.

அடம் பிடிப்புத் தருணங்கள்

வளர்ப்பின் ஒவ்வொரு காலகட்டத்தை அடைகையில் குழந்தைகள் உடல் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்து இருப்பார்கள். அதற்கு ஏற்றாற்போல் தங்களால், தானாக என்ன, எப்படிச் செய்ய முடியும் என்றதைத் தெரிந்து கொள்வார்கள். தானாக எடுக்க, வைக்க, பொருளைப் பரிசோதனை செய்ய முயலுவார்கள். குழந்தைகள் இவ்வாறு பலமுறை செயல்படுவது இயல்பு. இரண்டு வாரம் முன்பு இதைப் பற்றிப் பேசினோம்.

பொருட்கள் எட்டாத இடத்திலிருந்து விட்டால், நம்மைக் கேட்க, நமக்குப் புரியாமல் போகையில் அதைத் தெரிவிக்கத் தெரியாததால், கேட்கச் சொற்கள் தெரியாததால், பொருளைத் திரும்பத் திரும்பச் செய்கைகளினால், வெவ்வேறு சப்தங்களினால் கேட்கப் படும். நாம் கொடுக்க மறுத்த பின்னரும் விடாப்பிடியாக வேண்டியதைக் கேட்டுக் கொண்டே இருந்தால் அடம் ஆரம்பமாகும். எதைச் சொன்னாலும் பொருட்படுத்தாமல் கேட்பதும் அடம் பிடிப்பே. 

பசி வந்ததும், பசி தாங்காமல் எப்படித் தெரிவிப்பது என்று வார்த்தை வளராததால், சொற்கள் தெரியாமல் தத்தளிக்க, சத்தம் போடுவார்கள். பல தருணங்களில் குழந்தைகளுக்கும் தன் உணர்வை வார்த்தைகளால் தெரிவிக்கத் தெரிய வராததால் சலித்து விடுவதாலும் அதனால் வெறுப்பு தட்டித் தனக்குத் தெரிந்த பாணியில் கேட்டுக் கொண்டே இருக்க நேரலாம்.

கேட்ட பொருள் கொடுக்க முடியா விட்டாலோ, அல்லது கொடுப்பது உசிதமல்ல என்ற சூழ்நிலையாக இருந்தாலோ,  பெற்றோர் சஞ்சலத்திற்கு உள்ளாவார்கள்.  குழந்தையைப் பயமுறுத்தி அமைதியாக்க முயலலாம், இல்லை சத்தம் போட்டோ, இது வேண்டாம், அது தருகிறேன் என்று லஞ்சம் போல சொல்லக் கூடும்.

குழந்தையைச் சமாதானப் படுத்துவதாக எண்ணி, கொடுக்க வேண்டாம் என்பதையும் மீறி அவர்கள் வேண்டுவதைத் தந்துவிட்டால் இப்படிக் கேட்பதே பழக்கமாகிவிடும். அவர்கள் எப்போதும் இந்த செய்முறையை மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள் (உடனே கிடைக்க வில்லை என்றால் அடம் பிடிப்பார்கள்).

அடமும் ஆர்வமும்

நடப்பது என்ன? குழந்தைக்குப் பொருளைத் தர மறுப்பதால் அந்த பொருள் மீது அதிக ஆர்வம் உண்டாகும்,  என்னவென்ற தூண்டுதல் அதிகரிக்கும். அதனாலேயும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அடைய விரும்புவார்கள்.

அந்த ஒன்றை மட்டும் கேட்பார்கள். ஏன், அதை மட்டும்? "அதில் என்ன?" இந்த வயதில் ஆர்வத்திற்குப் பெரிய பங்குண்டு! கிடைக்க வில்லை, கிடைக்கவே கிடைக்காது எனத் தெரிய, பல பாவனையில் கேட்பார்கள். பல சமயங்களில் அந்த பொருட்கள் மேலான மோகம் சிறிய அளவிலான நேரத்திற்குத் தான் இருக்கும். இதை நாம் புரிந்து கொள்ளா விட்டால் பெரும் போராட்டம் நடக்கும். 

சில தருணங்களில், பொருளின் முக்கியத்தினாலோ, விலையினாலோ, மற்றவருடையது என்றாலோ, உடையும் என்றாலோ பயந்து நாம் தர மறுப்போம். நேரடியாக மறுப்பு தெரிவிப்பதற்குப் பதிலாக, சில பெற்றோர் "அது அசிங்கம்" என்றோ, உடல் பாவத்தால் - வாந்தி எடுப்பது போல் - "உவ்வா" என்றெல்லாம் தெரிவித்து ஆர்வத்தைக் குறைக்கப் முயல்வார்கள்.  நாம் சொல்வது உண்மை அல்ல என்பதினால் நம் உடல் மொழிக்கும் சொல்லுக்கும் உடன்பாடு இருக்காது.

இப்படி நடந்தால், குழந்தைகள் நாம் சொல்வது சரியல்ல என்று புரிந்து கொள்வார்கள். நம் உணர்வு நம்மைக் காட்டி விடும். அவநம்பிக்கையும் சோகமும் உணர்வார்கள். நம் மேல் நம்பிக்கை குறையும். 

நம் செயலின் பிரதிபலிப்பாக அவர்களும் தனக்கு வேண்டியதைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மந்திரத்தை உட்கொள்வார்கள். அடம் பிடிப்பு அதிகரிக்கும். அதே போல் நாமும் ஏதேதோ காரணி மனதில் வைத்து, பிறகு தருவதாகச் சொல்லி விட்டுத் தராமல் இருந்தால், நாம் சொன்ன சொல்லைக் கடைப்பிடிக்க வில்லை என்பதால் நம்மேல் நம்பிக்கை மேலும் தளர்ந்து விடும். சிறு குழந்தை, புரியாது, மறந்து விடும் என்று நாம் எண்ணுவோம், ஆனால் தானும் அறியாமல் குழந்தையின் அடி மனதில் இவ்வாறு பதிந்து விடக் கூடும்.

அதுவரைக்கும், குழந்தைக்கு நாம் சொல்வதைச் செய்வோம் என்ற நம்பிக்கை இருந்திருக்கும். செய்யாமலோ இல்லை அறைகுறையாகச் செய்ய, அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை மேல் தண்ணீர் விட்டு விடுகிறோம். 

வேறுவழியின்றி கேட்டதையே நாம் சொல்வதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும்  கேட்பார்கள். நாமும் அதைத் தருகிறேன் என்று சொல்லி ஆனால் தராமல் இருந்தால் குழந்தை கத்த ஆரம்பிக்கும். பொருளைப் பெற இந்தக் கத்தல் இன்னும் அதிகரிக்க அடம்பிடிப்பு ஆரம்பித்து விடும்.

அடம் சுயநல மனப்பான்மையின் அஸ்திவாரமாகும்!

அடம்பிடிப்பில் வேறொன்றையும் அறிவது நல்லது. பல பேர் தன்னைச் சுற்றி இருக்கும் பொழுது கேட்டது கிடைக்க வாய்ப்பு அதிகம் என்பதை ஓர்சில சம்பவங்களுக்குப் பிறகு கண்டு கொண்டு விட்டால், அதன் மூலம் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள முயல்வார்கள். இது இயல்பு, மிகச் சிறிய வயதிலேயே, கெட்ட எண்ணம் ஏதுவுமின்றி ஆரம்பமாவது.

இதன் விளைவாக, பொருளைக் கேட்கையில், அமர்க்களம் செய்து, மற்றவர்களின் கவனத்தை மடக்கிப் பிடித்துக் கொள்வார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் பலர் குழந்தைக்குப் பரிந்து பேச, பலர் இருக்கும் இடங்களான: வீட்டில் விருந்தாளி இருக்கையில், பீச்சில், கடைகளில், கடைவீதியில், கோவிலில், கல்யாண மண்டபத்தில் அடம் பிடிப்பதைத் தொடர்ந்து செய்வார்கள்.

தன் மேல் கவனத்தை ஈர்த்து, அதன்மூலம் தன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற தேடல் இது. பெற்றோர் கூச்சப்பட்டு, கேட்கும் பொருள் தரப் படுகின்றன, இப்படிச் செய்தால் கிடைத்துவிடும் என்றதை அறிந்து அடத்தைத் தொடர்ந்து செய்வார்கள். சில குழந்தைகளைப் பொருத்தவரை கேட்கும் பொருள் கிடைப்பதற்கான வழிமுறை இப்படித் தான் என எடுத்துக் கொள்வார்கள்..

இதனால் இந்த குழந்தைகள் தன் தேவைகளை உடனடியாக அடைய வேண்டும் என்பதில் குறிப்பாக இருப்பார்கள். "எப்படியாவது அடைய வேண்டும்" என்ற மனப்பான்மை அஸ்திவாரமாகும். தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள இந்தக் குணத்தை உபயோகிப்பார்கள். கிடைப்பதை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் போடும் கூப்பாட்டைச் சகிக்க முடியாமல் மற்றவர் தந்து விடுவார்கள். வளர்ந்த பின்னரும் இந்த சுயநல குணாதிசயம் நிலைத்து நிற்கும். 

கவனத்தை ஈர்ப்பதில் மூச்சை பிடிப்பதற்கு வாய்ப்பு உண்டு. வேண்டியதைக் கிடைக்கவில்லை என்றதும் முதலில் கண்ணீர் கொண்ட அழுகை ஆரம்பித்து, பொருள் கிடைக்கும் வரை அழுகை சத்தம் அதிகரித்துக் கொண்டே போகும். பிறகு மூச்சு தடுமாறலாம். கிடைக்காததைப் பற்றி மட்டும் கவனம் மையம் கொண்டு இருக்கையில், தங்களை வருத்திக் கொள்வதின் மேல் கவனம் போகாது. இந்த நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும். இப்படி நடந்தால், இதற்கு மருத்துவர் உதவியைக் கண்டிப்பாக நாடுவது அவசியம். அவர்களின் பரிந்துரைப்பைச் செயல் படுத்துவது அவசியம். 

வாழ்வின் ஒவ்வொரு செயலிலும்

மிகச்சிறந்ததைப் பெற,

மிகச்சிறந்ததைக் கொடு!

மேலும் பார்ப்போம்..

மனநலம் மற்றும் கல்வி நிபுணர் மாலதி சுவாமிநாதன்            malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com