3. சவாலே தூர நில்! பாராட்டு மட்டுமே, வா வா!

நாமோ, புகழாரத்துக்கு வானம் பார்த்த பூமி போல் காத்திருப்போம். ஏங்கியும் இருப்போம்
3. சவாலே தூர நில்! பாராட்டு மட்டுமே, வா வா!

சென்ற வாரங்களில் நாம்  ‘மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?’ என்று ஆராய்ந்து வந்திருக்கிறோம். மனப்பான்மை என்பது நாம் எந்த விதத்தில் நம்முடைய கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறோம் எனக் குறிக்கும். நம்முடைய செயல்பாடு எந்த அளவிற்கு மற்றவர்களின் சொற்களினால், எடை போடுவதால் பாதிக்கப்படுகிறது என்பதையும் காட்டும்.

அப்படி பாதிக்கப்பட்டால் மனநலம், மனவளம் வளராது. ‘இப்படித்தான் நான், இப்படி மட்டும் தான்’ என்று நாம் அடையாளங்களை மாட்டிக்கொண்டு இருப்போம். நம்மில் பலருக்கு சம்பளம், செல்வம், சான்றிதழ்கள் என்ற வெவ்வேறு விதமான மதிப்பெண்கள் அங்க அடையாளமாக ஆகிவிடுகிறது ‘ஆ, எப்பவும் போல 90தான்’ என்று நாமும் நம்முடைய நிலைமையை எடுத்துக் குறிப்பிடுவோம். மற்றவரும் இதைப் போலவே ‘ஆ, என்ன இப்பவும் 80ஆ? 90ஆ?’ என்று கேட்பதால் அந்த மதிப்பெண்கள் ஏறத்தாழ நம் அடையாளம் ஆகிறது.

அதில் எப்பொழுதாவது சற்று குறைவு வந்து விட்டால் கூட, தவிப்பு தான் மிஞ்சும்.

இந்தக் குழப்பங்கள் நிலவுவதற்கு முக்கியமான காரணிகள் இருக்கின்றன. போன முறை ‘புரியல+தெரியல = (அதனாலேயே) முடியல!’வில் சொன்னது போல் நமக்குள் நிலவும் தயக்கத்தினால் இது நேரிடும். நம்மைப் பற்றி மற்றவர்கள் உயர்வாக நினைக்கையில், அது மாறாமல் இருக்க, நம்முடைய பலவீனங்கள் தெரியாமல் இருக்க வழிகளை நாம் கடை பிடிப்போம்.

பெரும்பாலும் தயக்கங்கள், குழப்பங்கள் நிலவுவதற்குக் கீழ் வரும் ‘சவாலே தூர நில்! பாராட்டு மட்டுமே, வா வா!என்ற ஜோடிகள் காரணிகளாக ஆகலாம்.

ஜோடி 1. தோல்வியே நெருங்காதே, சவாலே தூர நில்

தோல்வி அடையாமல் இருக்கவே, நாம் அனுகூலமான நிலையிலிருந்து சற்றும் விலகாமல் இருக்க முடிந்த வரை முயற்சிப்போம். நமக்கு அளிக்கப் படும் பாடம், ப்ராஜெக்ட், கேள்விகள் என்று எதுவானாலும்,  நமக்குச் சற்று சவாலாக இருந்து விட்டால், அதனால் மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றால் அதைத் தட்டிக் கழிப்பதற்கு எல்லா வகையிலும் முயற்சி செய்வோம். தட்டிக் கழித்தும் விடுவோம். ஏனென்றால், சவாலாக இருந்தால், ஏற்றம்-இறக்கம் இருக்கும்; நிறைய மதிப்பெண்கள் வாங்குவது கடினமே. அதற்காக அதன் பக்கம் போக மாட்டோம்.

நம்மைப் பொருத்த வரை நாம் புத்திசாலி என்பதால், கடினமாக உழைப்பது தேவையில்லை. அப்படி எல்லாம் உழைக்காமலேயே மதிப்பெண் வாங்கிவிடலாம் என்று நினைத்து சவால்களை எல்லாம் மறுத்து விடுவோம். குறைவாக மதிப்பெண் வாங்குபவர்கள் தான் உழைக்கத் தேவை என்ற மனப்பான்மை உள்ளவர்களாக இருப்போம். அவர்களுக்கு ஏன் பாடங்கள் நம் போல் புரிவது இல்லை என்று வியந்து போவோம்.

நமக்கு எல்லாமே தெரியும் என்ற அபிப்பிராயம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது நமக்கு மிகவும் முக்கியமானது. எப்பொழுதாவது பாடம் புரியாமல் போனாலும் போகும். அப்பொழுது உதவிக் கேட்பதால், நமக்கு விஷயங்கள் தெளிவு இல்லை என்று தெரிந்து விட்டால்? நமக்கு ‘தெரியல-புரியல’ அதனால் தான் ‘செய்யல’ என்று வெளியானால்? நம்முடைய மதிப்பு என்னவாகும்? இதனாலேயே, நாம் சவால்களை ஏற்காமல் தட்டிக் கழித்து விடுவோம், அவற்றை எடுக்கத் தவிர்ப்போம்.

சரி, செய்து பார்க்கலாம் என்றால், நேரம் கூடுதலாகலாம். நம்மை, மற்றவர்கள் ‘எல்லாம் தெரிந்தும், இவ்வளவு டைம் தேவையா?’ என்று நினைத்துக் கேட்டுவிட்டால்? தவிர்ப்பதே நம் யுக்தியாகும். யுக்திகள் யாவும், மதிப்பெண் குறையாமல், நம் அடையாளக் கவசங்களைக் காப்பாற்றவே செய்யப் படுகிறது. தோல்வி நம் அஸ்திவாரத்தை ஆட்டிவிடும். நம் முத்திரை நழுவித் தொலைந்து விடும்.

சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலமை வந்து விட்டால் சஞ்சலம் சூடு பிடிக்கும், அச்சம் அதிகரிக்கும். துணிச்சல் அந்நியனாகும். எதிர்த்து போராடத் தத்தளிப்போம். உதாரணத்திற்கு, திடீர் பரீட்சை என்றால் பயம் வந்து விடும், ஒரு சின்னக் குழு முன் பேச வேண்டுமானாலும் வெலவெலத்துப் பதற்றம் அடைவோம், எதிர்மறை எண்ணங்களும் செயல்களும் கூடிக்கொண்டே போகும்.

இதெல்லாம் தேவையா?

 ஜோடி 2.  நம் நலத்தை மட்டும் காப்போம் ; உதவி செய்ய மறுப்போம்

அதிக மதிப்பெண் பெறுவதே நம் கவசங்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதற்காக, அதை நோக்கியே நம்முடைய எல்லாச் செயல் பாடுகளும் இருக்கும். மற்றவருக்கு சொல்லித் தருவதால் நமக்குப் பாடம் இன்னும் நன்றாகப் புரியும், தெளிவு வரும் என்றாலும், நாம் சொல்லித் தருவதை தவிர்ப்போம்.

நம் பாதுகாப்பின்மை, நமக்கு மதிப்பெண் குறைந்துவிடுமோ, மற்றவர்கள் தனக்கு ஈடாக வந்து விடுவார்களோ என்ற அச்சமே: தன்னுறுதி சரிய, இப்படியும் செய்வோம்.

அதே போல், தேர்வுக்கு முன், சந்தேகங்கள் தெளிவுபடுத்திக் கொள்ள மற்றவர் கேட்டால், ‘தூங்கிட்டேன், படிக்கலே’ என்றும், புத்தகத்தைக் கேட்டு விட்டால் ‘கொண்டு வரல’ என்றும் சமாளித்து விடுவோம். நாம் படித்ததையோ, பாடப் புத்தகங்களையோ எக்காரணத்திற்கும் பகிர்ந்து கொள்ளும் கொள்கை இருக்கவே இருக்காது.

பகிர்ந்து கொண்டால், அவர்கள் நமக்குப் போட்டியாக வந்துவிடுவார்களோ என்ற பயம் தான் இந்தச் செயல்பாட்டின் மிக முக்கியமான காரணம். இது வளரும் பருவத்தில். போகப் போக எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாததால், வேலை செய்யும் இடங்களிலும் தன்னலம் மட்டும் பிரதிபலிக்கும். அதையும் பொருட் படுத்தாமல் தனிமனிதனாக இயங்கிக் கொண்டிருப்போம். வேலையிலோ, குடும்ப வாழ்க்கையிலோ இது சரி வராது.

நமக்குள் ஊறி இருக்கும் பாதுகாப்பின்மை, இப்படியெல்லாம் வெளிப்படுகிறது. போகப்போக உதவி செய்வதே குறையும்.

ஜோடி 3: பாராட்டு மட்டும் போதும் / பாராட்ட மாட்டாரா?

மதிப்பெண்களால் வரும் பாராட்டு நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும். மற்றவர் தரும் பாராட்டும், அபிப்பிராயமும் மட்டுமே நாம் கணக்கில் சேர்த்துக் கொள்வோம். நம் மனப்பான்மை இதைச் சுற்றியே அமைந்திருக்கும்.

நாமோ, புகழாரத்துக்கு வானம் பார்த்த பூமி போல் காத்திருப்போம். ஏங்கியும் இருப்போம். இந்தச் சொற்கள் மட்டுமே நமக்கு ஊக்கம் ஊட்டும். மேலும், கேட்கக் கேட்கக் கர்வம் சூழும்! நம் இயல்பை எங்கோ, என்றோ தொலைத்து இருப்போம்.

ஏதோ காரணத்தினால் நமக்கு வரும் புகழும், சபாஷும் தாமதப் பட்டாலோ, நின்று விட்டாலோ, உடனே சொல்லி  வைத்தது போல் நம் ஊக்கமும் ஊசல் ஆடிவிடும். கூடவே, ஏன் இப்படி ஆனது என்ற கவலை அதிகரிக்கும். மற்றவரின் பார்வை நம்மேல் பட்டாலே அவர்களின் சொல்லுக்காகவே காத்திருப்போம். அந்தச் சொற்கள் கேட்கவே நாம் மதிப்பெண்களை எடுப்போம்.

அப்போது புகழ் இல்லையேல் மதிப்பெண் எடுப்போமா? ‘யாருக்காக? எதற்கு?’ என்று இருந்து விடுவோமா? யோசிக்க வேண்டிய விஷயம்.

ஜோடி 4: பாராட்டுவோரை நாடுவது / ஓரவஞ்சகம்!

நம் ஊக்கத்தின் நாடித் துடிப்பு மற்றவரின் சொல்லில் இருக்கும். பாராட்டுபவரிடம் மட்டுமே நாம் கவனம் செலுத்துவோம். பெருமைப்படுத்தும் கூட்டத்துடன் மட்டும் இருப்போம். இவர்களை மட்டும் மதிப்போம்.

நமக்குக் கிடைக்கும் மதிப்பெண்ணான கவசங்களைப் பற்றி யாரேனும் வேறு கருத்து தெரிவிக்கலாம், அல்ல அவற்றிடமிருந்து விடுபடச் சொல்லலாம். நிதர்சனம் தான். அப்படி நடந்ததும், சொல்லப் பட்டதையும். சொல்வோரையும் ஒரு அணு கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை நம்மிடம் நெருங்கி வர விட மாட்டோம்.

மாறாக, சொல்வோரைப் பார்த்து, துச்சமாக “பாவம், பொறாமை” என்று நகைப்போம்!

மதிப்பெண் கவசமானால், நம்முடைய அடையாளம் என்று ஏற்றுக் கொண்டால், அந்த அங்கீகாரம் பெறுவதற்காக நம் நடத்தையில், பல குணாதிசயங்களில் மாறுதல் தெரிய ஆரம்பிக்கும். நம் பரந்த மனப்பான்மையும், மற்றவர் நற்சொல்லை ஏற்கும் தன்மையும் மிகக் குறைவாகிவிடும். இது நமக்கு ஓகேவா?

அடுத்ததாக இதனால்,மனப்போக்கு: மாற்றமில்லாததா? என்பதால் நேரும் விளைவுகளைப் பார்க்கலாம்.

- மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com