நல்ல குழந்தைகளை உருவாக்குவது எப்படி? உளவியலாளரின் கண்டுபிடிப்பு!

மணிமாறனும் கோபியும் அலுவலக நண்பர்கள். தன் தங்கையின் திருமணத்திற்கு அழைக்கும் பொருட்டு மணிமாறன்
நல்ல குழந்தைகளை உருவாக்குவது எப்படி? உளவியலாளரின் கண்டுபிடிப்பு!


மணிமாறனும் கோபியும் அலுவலக நண்பர்கள். தன் தங்கையின் திருமணத்திற்கு அழைக்கும் பொருட்டு மணிமாறன் கோபியின் வீட்டிற்குச் சென்றிருந்தார். காம்பவுண்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போதே வாசலில் விளையாடிக் கொண்டிருந்த கோபியின் மகன் ஓடிவந்து, ‘மணி அங்கிள் வாங்க. நல்லா இருக்கீங்களா? ஹரியைக் கூட்டிட்டு வரல்லயா? என்று பேசிய படியே வீட்டிற்குள் அழைத்து வந்தவன், ‘அம்மா,  அப்பாவோட ஃப்ரெண்ட் மணி அங்கிள் வந்திருக்காங்க’ என்று தகவல் சொல்லிவிட்டு அப்பாவை அழைக்கப் போனான். சமையலறையிலிருந்து வெளியே வந்த கோபியின் மனைவி ’வாங்கண்ணா, எப்படி இருக்கீங்க? சாந்தி, பிள்ளைங்கல்லாம் நல்லா இருக்காங்களா? உட்காருங்க’ என்று சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, ‘ஜுஸ் எடுத்துட்டு வர்றேன்’ என எழுந்திரிப்பதற்குள், அவரது மகள் கையில் ஜுஸ் கொண்டு வந்து மணிமாறனிடம் தந்து விட்டு, எப்படி இருக்கீங்க அங்கிள்? ராகவி எப்படியிருக்கா? அவ ஸ்கூல்ல ஸ்பெஷல் கிளாஸ்லாம் தொடங்கி விட்டாங்களாமே?’ என்று விசாரிக்கும் போதே  மாடியிலிருந்து கோபி இறங்கி வந்தார்.

‘வாங்க வாங்க மணி சார். தங்கை கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படி போயிட்டிருக்கு? ஒரு வாரம் நீங்க லீவு போட்டாலும் போட்டீங்க ஆபீஸ்ல         கலகலப்பே இல்ல’, என்றார்.

விருந்தினரை உபசரிக்கும் கோபியின் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பண்பைத் தன் குடும்பத்தோடு ஒப்பிடத் தொடங்கியது மணிமாறனின் மனம். வாசலில் யாராவது வருவது போல் தெரிந்ததுமே ஹாலில் விடியோ   கேம் விளையாடிக் கொண்டும்,  டிவி பார்த்துக் கொண்டுமிருக்கும் மணிமாறனின் மகனும், மகளும் உடனே எழுந்து வேறோர் அறைக்குச் சென்று விடுவார்கள். சமையலறையிலிருக்கும் அவரது மனைவி, வந்தது மணியை தேடி வந்தவரெனில் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார். மணி சமையலறைக்குப் போய் காபி போடச் சொன்னால் காபியைப் போட்டு அவரது கையிலேயே    கொடுத்து விடுவார். வந்தவர்கள் விடாப்பிடியாக 'எங்கே வீட்டில் யாரையும் காணோம்’ என்று கேட்டால் வேறு வழியின்றி மனைவி, பிள்ளைகளை அழைத்து அறிமுகப்படுத்துவார். அப்போதும் சில நிமிடங்கள் அவர் கேட்பதற்கு மட்டும் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மறுபடி உள்ளே சென்று விடுவார்கள்.

விருந்தினர் சென்ற பிறகு 'வந்தவர்களை வாங்கன்னு கூட சொல்ல மாட்டீங்களா, அவரு சும்மாவே எல்லாரைப் பத்தியும் புறம் பேசுவாரு, நாளைக்கு ஆபிஸ்ல போய் என்னைப் பத்தி என்ன பேசுவாரோ' என்று சொன்னால், 'அது உங்க பிரச்னை, அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது' என முதல் எதிர்ப்பு மனைவியிடமிருந்து வரும். பிள்ளைகளும் இந்த அப்பாவுக்கு வேற வேலையே இல்ல என்று முணுமுணுப்பார்கள்.  இங்கோ அதற்கு முற்றிலும் மாறான நிலையைக் காணும் போது மணிமாறனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘கோபி சார் உங்க குடும்பமும், என் குடும்பமும் போன வருஷம் ஒரு விழாவில் அறிமுகமாகி கொஞ்சம் நேரம்தான் பேசிக்கிட்டிருந்தாங்க. ஆனா உங்க மனைவியும் பிள்ளைகளும் ஒரே ஒரு முறை பார்த்த என்னையும் என் குடும்பத்தையும் பத்தி இவ்வளவு அழகா விசாரிக்குறாங்க. ரொம்ப  சந்தோஷமாயிருக்கு’ என்றார்.
 
அதுவா சார் சில வருஷங்களுக்கு முன்னாடி டி.ஆர்.ஆர். டோல்கின் என்ற உளவியலாளரோட புத்தகத்தைப் படிச்சேன். அதில் 'பிள்ளைகள் எதை நம்புகிறார்களோ அப்படியாக மாறி விடுவார்கள், எனவே உங்கள் பிள்ளைகளோடு பேசும் போது உலகிலேயே அவர்கள்தான் ஞானமுள்ளவர்கள், கருணையுள்ளவர்கள், அழகிற் சிறந்தவர்கள், அதிசயமானவர்கள் என்பது போல பேசுங்கள். அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அப்படியே நீங்களும் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் நன்மைகளின் கருவூலம் என்ற புதையல் பெட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் மேற்கூரையிலோ, பரண்மீதோ மறைவாய் உள்ளது. மூடியுடன் இணையாத, பூட்டப்படாத பெட்டியாக இருப்பினும் மறைவாயிருப்பதால் நீங்களாக அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள முடியாது. அதில் நீங்கள் செய்யும் நன்மைகளின் பலன்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். எப்போது அவசியமோ அப்போது அப்பலன்கள் உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது உங்கள் பேரப் பிள்ளைகளுக்கோ தானே வந்து சேரும் என்று எழுதியிருந்ததைப் படிச்சேன். அன்றையிலிருந்து நானும் என் மனைவியும் எங்க பிள்ளைங்க கிட்டப் பேசும் போது நல்லதையே பேசுறதுன்னு முடிவு செய்தோம். நாங்க எங்களை சுத்தி இருக்கவங்ககிட்ட பேசுற விதம், நடந்துக்கிற விதம், யாருக்காவது உதவி தேவைப்படும் போது தானா முன் வந்து உதவி செய்யுறது, அதனால எங்களுக்கு கிடைக்கும் நல்ல பெயர் இதையெல்லாம் பார்த்து பிள்ளைகளும் அதே போல நடந்துக்குறாங்க. எதையும் இப்படித்தான் செய்யணும்னு வலிந்து திணிக்காததாலேயே நல்ல குணம் என்பது பிள்ளைகளோட இயல்பான விஷயமாகிடுச்சு. அன்னைக்கு உங்க குடும்பத்தைப் பார்த்துட்டு திரும்பி வரும் போது உங்க ஒவ்வொருத்தர் பத்தியும் எனக்குத் தெஞ்ச நல்ல விஷயங்களையெல்லாம் சொல்லிக்கிட்டே வந்தேன். உங்க பிள்ளைகள் ஏதாவது போட்டிகள்ல ஜெயிச்சதை  நீங்க ஆபிஸ்ல என்கிட்ட சொல்லும் போதும் அதை வீட்ல வந்து சொல்வேன். அதனால அவங்களுக்கு உங்க எல்லோரைப் பத்தியும் நல்லா தெரியும்.’ 

‘ஆச்சர்யமா இருக்கு சார், இப்படி மத்தவங்களைப் பத்தி பேசக் கூட உங்க எல்லோருக்கும் நேரம் கிடைக்குதா? எங்க வீட்ல இப்படி சேர்ந்து பேசுறதே கிடையாதே? என் பசங்களுக்கு படிப்பு, டிவி, செல்போன் தவிர வேறு எதுக்கும் நேரமில்லையே?’

‘நைட் எல்லோரும் ஒண்ணா சாப்பிடும் போது டிவி பார்க்க மாட்டோம். அன்னைக்கு நடந்த நல்ல விஷயங்களை அந்த நேரத்துல எல்லோரும் பகிர்ந்துக்குவோம். ஏதாவது வருத்தப் படக் கூடிய விஷயங்கள் நடந்திருந்தா அதுக்குக் காரணமானவங்களை பத்தி தப்பா பேசாம, அது போல திரும்ப நடக்காம இருக்க என்ன பண்ணனும் என்பதைப் பத்தியும் பேசுவோம்’ என்று கோபி சொன்னதும்தான் மணிமாறனுக்குத் தன் குடும்பத்தில் முதலில்  மாற்றம் தேவைப்படுவது தன் பிள்ளைகளின் நடத்தையில் அல்ல,   தன்னுடைய மற்றும் தன் மனைவியினுடைய நடத்தையில் என்பது புரிந்தது.
 
பிரபல உளவியலாளரான எரிக் எரிக்சன் என்பவர் 'குழந்தைகள் ஒன்று முதல் இரண்டு வயது வரை பெற்றோர் என்ன செய்கின்றனர், எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதைப் பார்த்து (Imitation) கற்றுக் கொள்கின்றனர்’ என்கிறார். பெற்றோரின் பேச்சு, நடத்தை, பழக்கம் யாவும் பிள்ளைகளின் ஆழ் மனதில் பதிந்து அவர்களது ஆளுமைத் தன்மையை உருவாக்கும். வீட்டிற்கு விருந்தினர் வருகையில் அவர்கள் இருக்கும் போது நன்றாக பேசி உபசரித்து விட்டு அவர்கள் சென்றபின் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது பிள்ளைகளின் மனதில் வந்தவர்களைப் பற்றி ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தி விடும். மீண்டும் ஒரு முறை அவர்களைப் பார்க்கும் போது அவர்கள் மீது மரியாதை இருக்காது. பெற்றோரின் நல்ல எண்ணங்கள், நல்ல பேச்சு, நற்பழக்கங்கள், நன்னடத்தை யாவும் நன்மைகளின் கருவூலம் போன்றது. கண்களுக்குத் தெரியாத, கைகளால் தொட முடியாத இந்நன்மைகளின் பலன்கள் நாம் நினைத்த நேரத்தில் அல்லாமல் தேவையான போது நம் பிள்ளைகளுக்கு வந்து சேரும். வங்கியில் நம் கணக்கில் பண இருப்பு இருந்தால் தான் அதற்கான வட்டி நமக்கு வந்து சேரும். பணமே போடாமல் வட்டியை எதிர்பார்க்க முடியாது என்பது போல நம்மிடம் இல்லாத நற்பழக்கங்களை நம் பிள்ளைகளிடம் எதிர்பார்க்க முடியாது. கணவனும், மனைவியும் எப்போதும்  சண்டை போடுவது, மரியாதையின்றி பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவதுமாக இருந்தால் அதைத்தான் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். நன்மைகளின் கருவூலம் காலியாக இருந்தால் நாம் நன்மைகளை எப்படி எதிர்பார்கக முடியும்? சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்? நற்சிந்தனையால் நற்செயல்களால் நன்மைகளின் கருவூலத்தை நிரப்புவோம், நம் பிள்ளைகளின் வாழ்வு சிறக்க வழி செய்வோம்.

பிரியசகி 
ஜோசப் ஜெயராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com