உங்களுக்கு வாழை இலையில் சாப்பிடப் பிடிக்குமா? இதான் ரூல்ஸ்

முன்பெல்லாம் எல்லா வீடுகளிலுமே வாழை மரங்கள் இருக்கும். தினமும் அதில்தான் உணவு உண்பார்கள்.
உங்களுக்கு வாழை இலையில் சாப்பிடப் பிடிக்குமா? இதான் ரூல்ஸ்

முன்பெல்லாம் எல்லா வீடுகளிலுமே வாழை மரங்கள் இருக்கும். தினமும் அதில்தான் உணவு உண்பார்கள். சூடான உணவை இலையில் போட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது, பசுமையான குளோரோஃபில் உணவுடன் கலந்து, உடலுக்கு ஊட்டத்தைத் தருகிறது. தெரிந்தோ தெரியாமலோ நல்ல விஷயத்தைத்தான் கடைபிடித்து வந்திருக்கிறார்கள். 

இப்பவும், விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் இலையில் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இலையில் நடுவில் ஒரு கோடு போட்டாற் போலிருக்கும் அல்லவா? ஒரு பக்கம் காய்கறிகள், ஒரு பக்கம் சாதம் என்று பிரித்து பிரித்து பறிமாறப்படும். ஏனப்படி? காரணம் தெரியுமா? 

புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம். இராமாயண காலத்தில் ஒரு முறை ராமன் சாப்பிடும் போது, அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம். இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்.

அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி, வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன். ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும்  உணவு வகைகளும்  அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம். அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான், இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும், சாப்பிடும் முன் ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும். இலையை எப்படிப் போடுவது? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா? வலது பக்கமாக வர வேண்டுமா?

இலையின் நுனி, சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.ஏன்? நாம் சாப்பிடும்போது, வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால், இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி …உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே அது ஏன்..? உப்பு, ஊறுகாய், இனிப்பு இதையெல்லாம் அதிகமாக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு!

சாதம், காய் கறிகள் இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம். அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும். சரி இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை, பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே? சரியா? 

இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில் அந்த இனிப்பு, உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து, ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று, வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களைச்  சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. இலையைப் போடுவதிலிருந்து, எப்படி பரிமாறுவது, எதை முதலில் சாப்பிடுவது போன்ற எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..? நல்ல விஷயங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். புரியாவிட்டாலும், பெரியவர்கள் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கிறது என்றாவது புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com