செய்திகள்

பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?

26th May 2022 03:52 PM

ADVERTISEMENT

பிறந்த குழந்தைகள் கரோனாவினால் பாதிக்கப்படும் போது அதன் பெற்றோர் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் தங்களது குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியானல் என்ன செய்வது என்பது குறித்து பொதுவாக கவலைப்படுவார்கள். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் அவர்களுக்கு தடுப்பூசியும் தற்போது கிடையாது போன்ற விஷயங்கள் பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அவர்களுக்கான நல்ல செய்தி என்னவென்றால் குழந்தைகளுக்கான கரோனாவின் பாதிப்பு மிகக் குறைவு என்பதுதான். 

பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்த பெற்றோர்களின் கேள்விகளும் மற்றும் அதற்கான பதில்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்கு கரோனா தொற்று இருக்கும் போது என் குழந்தையை தொற்றிலிருந்து பாதுகாக்க முடியுமா?

ADVERTISEMENT

நீங்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவராக இருக்கும் பொழுதும் உங்களது குழந்தையை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். அதற்கு நீங்கள் சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குழந்தையினை தொடுவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு பாலூட்டும் போதும் அவர்களுடன் நெருங்கி இருக்கும் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தற்போது வரை தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏதும் பரவுவதாக நிரூபணமாகவில்லை.

கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தாய்ப்பால் கொடுக்காமல் இருக்கலாம் என நினைக்காமல் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். பிறந்த  குழந்தையின் உடன் பிறந்தவர்கள் மூலம் கரோனா பரவுவதை தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுக்கலாம்.

குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

பெரியவர்களுக்கு எப்படி கரோனா பரிசோதனை செய்கிறோமோ அதே போல குழந்தைகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளலாம். குழந்தைகளுக்கு ரேபிட் ஆண்டிஜன் சோதனை செய்யலாம். ஆனால், இந்த சோதனையை மேற்கொள்வதற்கு குழந்தையின் வயது மிகவும் முக்கியம். அதனால் குழந்தைக்கு சோதனை செய்யும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம். 

குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் கரோனா:

கரோனா பரவத் தொடங்கிய நாள் முதலே அனைத்து வயது குழந்தைகளின் மீதும் அதன் தாக்கம் குறைவாக இருந்துள்ளது. பெரியவர்களில் ஏற்படுவதுபோல் எந்தவொரு பாதிப்பும் குழந்தைகளுக்கு ஏற்படவில்லை. கரோனாவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற தேவையும் உருவாகவில்லை. கரோனாவினால் குழந்தைகளின் இறப்பு என்பதும் மிக அரிது. 

பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லாத போதிலும் குழந்தையின் தாய் தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவரிடமிருந்து குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் மூலம் குழந்தைகள் கரோனாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு பொதுவாக என்ன மாதிரியான அறிகுறிகள் தோன்றும்?

குழந்தைகள் கரோனாவினால் பாதிக்கப்படும்போது  அவர்களுக்கு பலவிதமான அறிகுறிகள் தென்படும். ஆனால், 25 சதவிகித குழந்தைகளுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமலே கரோனா தொற்று ஏற்படுகிறது.

குழந்தைகளுக்குப் பொதுவாக காய்ச்சல், மூக்கடைப்பு, இருமல் மற்றும் உணவு உட்கொள்வதில் சிரமம் போன்றவை அறிகுறிகளாக தோன்றுகின்றன.  தொற்றின் தீவிரம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் மூச்சு விடுதலில் சிரமத்தை சந்திக்கின்றனர்.

எப்படி குணப்படுத்துவது?

குழந்தைக்கு காய்ச்சலாக இருக்கும் பட்சத்தில் பாராசிட்டமல் (paracetamol) மாத்திரை கொடுக்கலாம். மூக்கடைப்பை சரி செய்ய சொட்டு மருந்து பயன்படுத்தலாம். ஆனால், பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

எப்போது குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்?

மூச்சு விடுவதில் சிரமம், தொடர் காய்ச்சல், உணவு உட்கொள்வதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT