செய்திகள்

விஷக் கிருமிகளுடன் வேலை செய்வது எப்படி?

உமா ஷக்தி.

நச்சு சகாக்களை நீங்கள் சமாளிக்க வேண்டுமா? எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கிறது என்று தெரியாமல் வேலை செய்கிறீர்களா? அப்போது இதை அவசியம் படித்துவிடுங்கள்.

ஒரு காதல் உறவைப் போலவே, பணியிடத்தில் கெடுமதி உடைய நபர்களுடன் (Toxic people) பழகுவது என்பது உங்களுக்கு தொடர்ச்சியாக மன அழுத்தத்தை தரக்கூடும். குறிப்பாக, நீங்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அத்தகைய சகாக்களுடன் செலவிட வேண்டியிருக்கும் போது சங்கடமாக இருக்கும். குறிப்பிட்ட சக ஊழியர் உங்களிடம் அனுசரணையாக இருப்பது போல நடித்து, தனது நச்சுத்தன்மையான நடத்தையால் சுற்றியுள்ள மற்றவர்களின் மன ஆரோக்கியத்தையும் வேலைத்திறனையும் பாதித்துவிடுவார்கள். எனவே நீங்கள் வெகு ஜாக்கிரதையாக பழகுங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, மற்றவர்களின் நடத்தை மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இருக்க முடியாது, ஆனால் சக ஊழியரின் கெடுதல் விளைவிக்கும் நடத்தைக்கு நாம் எவ்வகையில் பிரதிபலிக்கிறோம் என்பதை மாற்றுவது அல்லது அத்தகைய நபர்களைக் கையாள்வதற்கு உளவியல் தந்திரங்களைப் பயன்படுத்துவது உங்களுக்குக் கணிசமாக உதவும். எனவே, இதுபோன்ற சக ஊழியர்களைக் கையாள்வதற்கான சில வழிகளைப் பார்ப்போம்.

சொந்த வாழ்க்கை விவரங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்

விஷமிகள் பெரும்பாலும் மற்றவர்களுடைய சொந்த விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளும் ஆர்வமுடையவர்கள். அத்தகைய நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது உங்களை அழிக்க அவர்களுக்கு ஒரு ஆயுதத்தை நீங்களே மனம் உவந்து ஒப்படைப்பது போன்றதாகும். எனவே அத்தகைய சகாக்களுடன் பேசிப் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் அவர் உங்களுக்கு எதிராக என்னென்ன தகவல்களைப் பயன்படுத்தலாம் என்று உங்களுக்குத் தெரியாது. கூடுமானவரையில் தொழில்ரீதியாக மட்டும்  அவர்களுடனான பழக்கத்தை வைத்திருங்கள்.

பற்றற்று இருங்கள்

இம்சையை ஏற்படுத்தும் சக ஊழியரிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று பற்று இல்லாமல் இருப்பதுதான். நச்சுத்தன்மையுள்ள நபர் உங்களை முதலில் உணர்ச்சிவசப்படுத்தி அதன்பின் தங்களின் தந்திரங்களை பயன்படுத்துவார்கள், நீங்கள் அந்த வலையில் விழும்போது, ​​அது நிலைமையை மோசமாக்கும். உதாரணமாக, நீங்கள் அவருடன் இருக்கும்போது அந்த நபர் மிகவும் ஆதரவாக இருப்பது போல பேசி பழகிவிட்டு, உங்கள் முதலாளியின் முன்னால் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததையும் சொல்லி, குறை கூறுவார். சுருக்கமாக சொல்லப்போனால் போட்டுக் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்வார். 

உங்களுக்கு அது தெரிய வரும்போது, ​​கோபம் அடைவீர்கள் அல்லவா? கோபம் அல்லது சோகம் போன்ற உணர்ச்சிகளுக்கு நீங்கள் இடம் கொடுத்தால் அது உங்களை பலவீனராக்கிவிடும். எனவே, எதற்கு ஒருவரிடம் தேவையில்லாமல் பழகி அவரிடம் மிகுந்த ஈடுபாடு வைத்து அதன்பின் அவர் சுயரூபம் வெளிப்படும்வரை காத்திருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து ஒரு அடி தள்ளி இருந்துவிட்டால் உங்கள் மனம் உணர்ச்சிக் கொந்தளிப்பிலிருந்து தப்பித்திருக்கும் அல்லவா? அலுவலகத்தைப் பொருத்தவரையில் உங்களுடன் வேலை செய்பவர்கள் சக ஊழியர்கள்தான் அன்றி, நண்பர்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

அவர்கள் தவறானவர்கள் என்று நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்

விஷமிகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி அவர்களுக்கு மேலே நீங்கள் உயர்ந்து செல்வதுதான். மாறாக அவர்களுடன் போராடிக் கொண்டிருந்தால் அதற்கே உங்கள் நேரம் வீணாகிக் கொண்டிருக்கும். அவர்களின் தவறுகளை நிரூபித்து அவர்கள் உண்மை முகத்தை தோலுரித்துக் காண்பிக்க நீங்கள் பல முறை ஆசைப்படலாம், ஆனால் அவ்வாறு செய்வது உங்களை அவமானப்படுத்த அவர்களுக்கு கூடுதல் உந்துதலாக மாறக்கூடும். மற்றவர்களின் நடத்தை மீது உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் சொந்த செயல்களை நீங்கள் நிச்சயமாக கட்டுப்படுத்தலாம், இல்லையா? எனவே, அந்த நபர்கள் தவறானவர்கள் என்றால் அவர்களை திருத்தும் முயற்சியில் எல்லாம் நீங்கள் இறங்க வேண்டாம். 

அறியாமையே பேரின்பம்

சக ஊழியரின் மோசமான நடவடிக்கை நம்மை பாதிக்கும்போது அவர்களை புறக்கணிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால் வேறு வழியில்லை. பொறுமையாக இருப்பதுதான் நல்லது. கூடுமானவரையில் ஒதுங்கியும், பொறுமையாக இருந்துவிட்டால் அவர்களை நீங்கள் புறக்கணிக்க முடியும். விஷமிகளான சக ஊழியர் உங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில், "கடவுளுக்கு நன்றி, நான் அவரைப் போல இல்லை" என்று அமைதியாக அந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மனதுக்குள் கூறுங்கள். ஒரு நொடி அவரைப் போலவே நீங்களும் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த விஷமி உங்களுக்கு தொல்லையளிக்கும் விதத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் தொல்லையளிக்க விரும்புவீர்களா? நிச்சயமாக இல்லைதானே. விஷ மனப்பான்மை கொண்ட சக ஊழியரை விட நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதை நீங்கள் உணர்ந்தவுடன், அவரை புறக்கணிப்பது உங்களுக்கு எளிதாகிவிடும்.

மற்றவர்களுடன் கலந்து பழகுங்கள்

சக ஊழியர்கள் அனைவரும் விஷமிகள் அல்ல. எனவே, அன்னப் பறவையைப் போல பாலை நீரிலிருந்து பிரித்து, உங்களுக்கு உகந்த அல்லது உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு தரும் சக ஊழியர்களுடன் கலந்து பழகக் கற்றுக் கொள்ளுங்கள். இந்தத் தேவையற்ற நபர்களின் கேவலமான நடத்தை என்னவென்றால் உங்களை முதலில் மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதுதான். எனவே, அவர்களின் சதித் திட்டங்களில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருங்கள்.

இது தற்காலிகமானது

விஷமிகளுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வது சற்று கடினமாகத்தான் இருக்கும். அப்போதெல்லாம், எதுவும் நிரந்தரமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அலுவலக வளாகம் என்பது உங்கள் பணியிடம்தான், அதைத் தாண்டி உங்களுக்கு அழகானதொரு வாழ்க்கை இருக்கிறது. மேலும், உங்கள் வாழ்நாள் முழுவதையும் அதே நபர்களுடன் வேலை செய்ய மாட்டீர்கள், இல்லையா? நீங்கள் சரியான சகாக்களுடன் இருக்கும் ஒரு நாளைப் பற்றி எவ்வளவு அதிகமாக நினைக்கிறீர்களோ, நச்சு சக ஊழியர்களைக் கையாள்வது என்பது சுலபமாகிவிடும். அந்த நல்ல சகாக்களும் உங்களுக்கு விரைவில் கிடைப்பார்கள். எதுவாகியபோதும், நேர்மறை எண்ணங்களுடன் எப்போதும் இருப்பது நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT