அரசு பல் மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது: நோயாளிகள் அலைக்கழிப்பு

சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊடுகதிர் (எக்ஸ்ரே) கருவி பழுதானதால், நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பல் மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுது: நோயாளிகள் அலைக்கழிப்பு

சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊடுகதிர் (எக்ஸ்ரே) கருவி பழுதானதால், நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்,  அவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பணம் செலுத்தியும் பரிசோதனைகளை மேற்கொள்ள இயலாமல் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை  பாரீஸ் பகுதியில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 800-இல் இருந்து 1,000 நோயாளிகள் வருகின்றனர்.
 ஊடுகதிர் துறையைப் பொருத்தவரை, மூன்று வகையான ஸ்கேன் பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் தாடை முழுவதையும் ஸ்கேன் செய்வதற்கான எக்ஸ் ரே பரிசோதனையும் ஒன்று.  பற்கள் மற்றும் தாடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு, டான்சில் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை அதன் மூலம் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
அதுபோன்ற பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் நாள்தோறும் 200 பேர் அங்கு சிகிச்சை பெற வருகின்றனர். அதற்கான எக்ஸ்ரே பரிசோதனைக்குக் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், எக்ஸ்ரே கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பரிசோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அதேவேளையில், பரிசோதனைக்கான கட்டணத்தை மட்டும் நோயாளிகளிடம் இருந்து வசூலித்துக் கொள்ளும் மருத்துவமனை ஊழியர்கள், கருவியைப் பழுது நீக்கிய பிறகு வருமாறு அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறது.
பணிக்கு வராத மருத்துவர்கள்: பல் மருத்துவமனை  மருத்துவர்கள் பலர் பணிக்கே வருவதில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வருகை பதிவேட்டில் கையொப்பங்களுக்குப் பதிலாக மருத்துவர்களின் பெயரின் முதல் எழுத்துகளை மட்டும் எழுதி வைத்துவிட்டுச் செல்வதாகத் தெரிகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் விமலா கூறியதாவது:
ஊடுகதிர் கருவி கடந்த இரு நாள்களாகத்தான் சரிவரச் செயல்படவில்லை. அதனால், நோயாளிகள் பாதிக்கப்படவில்லை. மாற்று ஏற்பாடுகள் மூலம் அவர்களுக்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மருத்துவர்களின் வருகையை பயோ - மெட்ரிக் சாதனங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் அனைத்தும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. போலியாக கையெழுத்திடும் சம்பவங்கள் குறித்து தெரிய வந்தால் அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com