பல் இல்லைன்னா சொல் இல்லை! முதல்ல இதை கவனிங்க!

பற்கள் வரிசையில் நெரிசல் அல்லது இடைவெளி இருந்தால் அவற்றை சீராக வரிசை செய்வதுதான் சீரமைப்பு சிகிச்சை.
பல் இல்லைன்னா சொல் இல்லை! முதல்ல இதை கவனிங்க!

பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை என்றால் என்ன?

பற்கள் வரிசையில் நெரிசல் அல்லது இடைவெளி இருந்தால் அவற்றை சீராக வரிசை செய்வதுதான் சீரமைப்பு சிகிச்சை.

எந்த வயதில் இருந்து சிகிச்சை செய்யலாம்?

ஆறு வயது முதல் பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்யலாம்.

பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை எந்த வயது வரை செய்யலாம்? அதற்கு ஏதேனும் வரம்புகள் உண்டா?

ஐம்பது வயது வரை சீரமைப்பு சிகிச்சை செய்ய முடியும். தாடை எலும்பு, ஈறுகள் மற்றும் பற்கள் வலிமையான நிலையில் இருந்தால் போதும். இந்த சிகிச்சைக்கு வயது ஒரு வரம்பு இல்லை.

பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்து முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?

குறைந்தது ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம். இது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.

பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்ய நிபுணர்கள் தேவையா?

ஆம், பல் வரிசை சீரமைப்பு நிபுணர்கள் உங்கள் பற்களின் பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீர்வு, கால அவகாசம் ஆகியவற்றை தெரிவிப்பார்.

பல் மருத்துவ நிபுணரை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை அணுக வேண்டும்?

குறைந்தது நான்கு வாரங்களுக்கு ஒருமுறை அணுக வேண்டும்.

எதற்காக அணுக வேண்டும்?

சிகிச்சையின் முன்னேற்றம் மற்றும் பற்களில் ஏற்படும் மாற்றங்களை மேற்பார்வையிட அணுக வேண்டும்.

பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையை எவ்வாறு செய்யலாம்?

நீக்கக் கூடிய மற்றும் நீக்காமல் நிலையான வகையில் செய்யலாம்.

இவை இரண்டில் எது சரியானது? எது பொருத்தமான வகை என்பதை எவ்வாறு தேர்வு செய்வது?

எந்த வகை உங்களுக்கு சிறந்தது அல்லது பொருத்தமானது என்பதை பல் சீரமைப்பு நிபுணரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

பல் வரிசை சீரமைப்பு சிகிச்சைக்கு ஒரு சில பற்களை அகற்ற வேண்டுமா? ஏன்?

ஆம், மிகுதியாக நெரிசல் உள்ள காரணத்தால் சிலருக்கு பற்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்படும்.

அவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் பக்க விளைவுகள் ஏற்படுமா?

சரியான வகையில் சிகிச்சை மேற்கொண்டு, நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

இந்த சிகிச்சையின் போது பற்களை எவ்வாறு பராமரிப்பது?

நிபுணர் பரிந்துரைக்கும் பிரத்யேகமான தூரிகை (Brush) கொண்டு பற்களை இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும். உணவு உட்கொண்ட பின்னர் வாய் கொப்பளிக்க வேண்டும். நிபுணர் அறிவுறுத்தும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.

இந்தச் சிகிச்சையை வெளியில் தெரியாதவாறு (Invisible braces) செய்வது சாத்தியமா?

உங்கள் பற்களில் பிரச்னை என்னவென்று கண்டறிந்து அதற்கு பொருத்தினால் வெளியில் தெரியாதவாறு (invisible braces) செய்யலாம்.

பல் வரிசை சீரமைப்பு சிகிச்சைக்கு தாடையில் அறுவை சிகிச்சை தேவையா?

சிலருக்கு பற்கள் மட்டும் அல்லாது தாடையிலும் கோளாறு இருக்கும், அதனை சீரமைக்க அறுவை சிகிச்சை தேவைப்படும்.

சிகிச்சைக்கு பிறகு பற்களை எவ்வாறு பராமரிப்பது?

சிகிச்சைக்கு பிறகு நீக்கக் கூடிய கிளிப்பை (Retainer) உபயோகிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும்.

நீக்கக் கூடிய கிளிப்பை (Retainer) எத்தனை நாட்களுக்கு உபயோகிக்க வேண்டும்?

குறைந்தது ஒரு வருடம் சாப்பிடும் வேளை தவிர முழு நேரமாக உபயோகிக்க வேண்டும். பின்னர் பல் மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றம் செய்து கொள்ளலாம்.

பல் வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்யாவிட்டால் என்ன பின் விளைவுகள் ஏற்படும்?

பற்களில் உள்ள நெரிசல் அல்லது இடைவெளியில் உணவு துகள்கள் படிமனமாக சேரலாம், ஈறுகள், பற்களில் சிதைவு ஏற்படலாம். தாடை மூட்டுகளில்  வலி ஏற்படும்.

- டாக்டர் ஆர்.சிவபிரகாஷ், டெண்டல் சர்ஜன் (9840401520) Dr.Smilez.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com