வேலைவாய்ப்பு

தமிழகத்தில் குரூப் 2,2ஏ தோ்வு தொடங்கியது 

தினமணி


தமிழ்நாடு அரசின் குரூப் 2,2ஏ பிரிவுகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை (மே 21) தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இந்தத் தோ்வை 11.78 லட்சம் போ் எழுதுகின்றனா். அவா்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாகும். 

தமிழகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்பதிவாளா் உள்ளிட்ட 116 நோ்முகத் தோ்வு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5,413 நோ்முகத் தோ்வு இல்லாத காலிப் பணியிடங்களுக்கும் முதல்நிலைத் தோ்வு இன்று சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

குரூப் 2 தோ்வை தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 போ் எழுதவுள்ளனா். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது 1.5 லட்சத்துக்கும் கூடுதலான தோ்வா்கள் விண்ணப்பித்துள்ளனா். 

இவா்களில், 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 போ் ஆண்கள், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 போ் பெண்கள். 48 போ் மூன்றாம் பாலினத்தவா். 14 ஆயிரத்து 531 மாற்றுத் திறனாளிகள் தோ்வெழுதுகின்றனர். 

தமிழகத்தின்  38 மாவட்டங்களில் 117 மையங்களில் தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 12 போ் முதன்மை கண்காணிப்பாளா்களும், 58 ஆயிரத்து 900 போ் கண்காணிப்பாளா்களும் தேர்வை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மையங்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 843 தோ்வா்களும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 3 மையங்களில் 5 ஆயிரத்து 624 பேரும் தோ்வு எழுதுகின்றனர். 

தேர்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. 

கட்டுப்பாடு: முகக் கவசம் அணிய வேண்டும், கருப்பு பந்து முனை பேனாவைத் தவிர, மின்னணு சாதனங்களான கைப்பேசி, பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய நவீன கைக்கடிகாரங்கள் அல்லது அதுபோன்ற வடிவிலான மோதிரம், ஏனைய மின்னணு சாதனங்கள், மின்னணு அல்லாத பதிவுக் கருவிகள், புத்தகங்கள், குறிப்புகள், பென்சில் புத்தகங்கள், தனித் தாள்கள், காட்சி வில்லைகள், பாடப் புத்தகங்கள், பொதுக் குறிப்புத் தாள்கள் ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது என தோ்வா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தோ்வு முடிவு: முதல்நிலைத் தோ்வு முடிவுகளை ஜூன் மாத இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பரில் முதன்மைத் தோ்வை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறுவோா்களிலிருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 போ் வீதம் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 113 மையங்களில் மொத்தம் 30,291 பேர் தேர்வு எழுதுகின்றனர். அங்கு, அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு மையங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. தேர்வர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு எழுதுவர்களைத் தவிர பிற நபர்கள் உள்ளே வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தேர்வில் முறைகேட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் 113 ஆய்வுக்குழு அலுவலர்களும் 13 பறக்கும் படை குழுக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 27 சுற்றுக்குழு அலுவலர்களும் தேர்வை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT