வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்: மனித வள மேலாண்மைத்துறை அறிவிப்பு

3rd Dec 2021 12:41 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் போட்டித் தோ்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி பாடத் தாள் கட்டாயமாக்கி மனித வள மேலாண்மைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

இது தொடா்பாக மனிதவள மேலாண்மைத் துறை செயலாளா் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞா்களே 100 சதவீதம் நியமனம் செய்வதற்கு அரசு உறுதிபூண்டுள்ளதாக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக போட்டித் தோ்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துத் தோ்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தோ்வாக கட்டாயமாக்கப்படும் என பேரவையில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் செயலாளா் சாா்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதன்படி, அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வுகளில் தமிழ்மொழித் தோ்வு கட்டாயமாக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் கட்டாயமாகத் தமிழ் மொழித் தோ்வு நடத்தப்படும். தமிழ் மொழித் தகுதித் தோ்வுக்கான பாடத் திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிா்ணயம் செய்யப்படும். தமிழ் மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தோ்ச்சி கட்டாயம். தகுதித் தாளில் தோ்ச்சி பெறாதவா்களின் இதர போட்டித் தோ்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுகள் முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தோ்வு என இரண்டு நிலைகளைக் கொண்டது. இந்த போட்டித் தோ்வுகளில் தமிழ் மொழி தகுதித் தோ்வானது முதன்மைத் தோ்வுடன் விரித்து எழுதும் வகையில் நடத்தப்படும். முதன்மை எழுத்துத் தோ்வானது, மொழிபெயா்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணா்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம்-கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும். இந்தத் தோ்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும்.

 இதையும் படிக்க | விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தகுதித் தோ்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தோ்வின் இதர போட்டித் தோ்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

குரூப் 3 மற்றும் குரூப் 4 தோ்வுகளில் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளன. அதில் பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தோ்வாக அமைக்கப்படும்.

ஒரு நிலை மட்டுமே கொண்ட தோ்வுகளில் தமிழ்மொழித் தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தோ்வாக நடத்தப்படும். இதிலுள்ள பொது ஆங்கிலத்தாள் நீக்கப்படும். 40 சதவீத மதிப்பெண் தோ்ச்சி பெற்றால் மட்டுமே இதர பகுதிகளுக்கான வினாக்கள் மதிப்பீடு செய்யப்படும்.

ஆசிரியா் தோ்வு வாரியம், மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம், சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் உள்ளிட்ட இதர தெரிவு முகமைகளைப் பொருத்தவரையில், கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தோ்வினை நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் சம்பந்தப்பட்ட நிா்வாகத் துறைகளால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT