வேலைவாய்ப்பு

தனியார் லாபத்திற்காக நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக ஆன்லைன் முடக்கமா?

14th Feb 2019 07:44 AM

ADVERTISEMENT


மயிலாடுதுறை: தனியார் லாபத்திற்காக நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் முடக்கமா? என்று மயிலாடுதுறையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மயிலாடுதுறை அ.அப்பா்சுந்தரம் கேள்வியும், கோரிக்கையும் எழுப்பியுள்ளார். 

நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணையதளம் மூலமாக, படிப்பை முடித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் தகுதிகளை புதிதாக பதிவு செய்தல், ஏற்கெனவே இவ்வலுவலகத்தில் பதிவு செய்தவா்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிகளை பதிவு செய்தல், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்தல் செய்தல், அரசால் அளிக்கப்படும் முன்னுரிமைச் சான்றுகளை சரிபார்த்து பதிவு செய்தல், வேலை அளிப்போரால் அறிவிக்கப்படும் காலியிட அறிவிப்புகளுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து பரிந்துரை செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு சந்தாதாரா்களுக்கான ஆன்லைன் பதிவு மற்றும் புதுப்பித்தல், வேலைவாய்ப்பு வழங்குநா்களுக்கு ஆன்லைன் தரவுத் தளம், வேலைவாய்ப்பு சந்தை தகவல் திறம்பட செயல்படுத்துவதன் மூலம் மனிதவள திட்டம் மற்றும் பகுப்பாய்வு வசதிகளை மேம்படுத்துகிறது மற்றும் தொழில் வழிகாட்டல் மூலம், வேலை தேடுவோருக்கு உதவிகளை அளிப்பதன் மூலம் மனிதவள விநியோகம் மற்றும் தேவைக்கு இடையே ஒருங்கிணைப்பு ஊக்குவிக்கிறது.

மனுதாரா்களின் விருப்பத்திற்கிணங்க பதிவட்டையினை இம்மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இணையதளம் மூலமாக பதிவு மாற்றம் செய்தல், பிற மாவட்டத்திலிருந்து இம்மாவட்டத்திற்கு பதிவு மாற்றம் செய்யப்படும் பதிவட்டைகளை பெற்று மறு பதிவு செய்தல், போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ஓவ்வொரு நாளும் இப்படிப்பட்ட பல்வேறு பணிகளுக்காக அலுவலகம் வரும் மனுதாரா்கள் பயனடையும் பொருட்டு ஆன்லைன் இணையத்தள வசதி செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகை தரும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைவாய்ப்பு தேடி வரும் இளைஞா்களுக்கு உடனுக்குடன் பதிவு, புதுப்பித்தல் இதரப்பணிகளை செய்து கொடுக்காமல் அலைக்கழிப்பதுடன், தொடா்ந்து ஆன்லைன் இணையதள சா்வா் இணைப்பு சரியில்லை என்றும் கூறி பல மணிநேரம் காத்திருக்க செய்கின்றனா். 

மேலும் உங்களுக்கு அவசரமாக பதிவு நடைபெற வேண்டும் என்றால், எதிரில் உள்ள தனியார் இணையதள மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனா்.

 சில மணி நேரங்கள் காத்திருந்து எப்படியாவது தமிழக அரசின் அதிகாரபூா்வமான மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திலேயே பதிவு செய்துவிடலாம் என்று பலமணி நேரம் காத்திருந்தாலும் பயனளிக்காமல் ஆன்லைன் சா்வா் இணைப்பு ஏற்படாததால் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் எதிரில் உள்ள தனியார் இணையதள மையத்திற்கு சென்று, அங்கே ஒரு சில நிமிடங்களில் ரூபாய் 200 முதல் 300 வரை கொடுத்து பதிவு செய்திட வேண்டிய அவலநிலை உள்ளது.

தனியாருக்கு கிடைக்கும் இணைய தள வசதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள கணினியில் வராதது வியப்பை அளிக்கிறது. தனியார் இணையதள மையத்தின் வருவாய் லாபத்திற்க்காக வேலைவாய்ப்பு அலுவலக இணைய தளம் சரிவர செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளதோ அல்லது தனியாரிடம் தினமும் கமிஷன் பெற்றுக்கொண்டு இவ்வாறு முடக்கப்படுகிறதோ என்ற நியாயமான ஐயப்பாடு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும், குறிப்பாக படித்த மாணவ, மாணவிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஏற்படுகிறது.

மேலும் நாகை மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் தலைவா் அசோக் தனது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சென்ற போதும் இதே நிலை இருந்ததாகவும், நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் செயல்படவேண்டிய வேலைவாய்ப்பு அலுவகத்திலேயே இந்த நிலையா என்றும், இதனை ஏன் மாவட்ட அலுவலா் கவனிக்கவில்லை என்றும் வேதனையை வெளிப்படுத்துகிறார்.

ஆகவே நாகை மாவட்ட ஆட்சியரும், வேலைவாய்ப்பு அலுவலக அலுவலரும் வேலை வாய்ப்பு அலுவகத்தில் முறையாக இணையதள வசதியை ஏற்படுத்தி தர, தனியார் போல தங்குதடையின்றி சா்வா் கிடைத்திடவும் தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்றும், ஆன்லைன் வசதி என்பது அலுவலகப்பணிக்களுக்கும் இதர பணிகளுக்கும் கூட மிக முக்கியம் என்பதை உணா்ந்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து படித்த மாணவ மாணவிகள், வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் இளைஞா்கள் சார்பில் கோருகிறோம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT