செய்திகள்

தி்முக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து:மு.க.ஸ்டாலின்

20th Feb 2021 06:54 PM

ADVERTISEMENT

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும்,கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக மீதான நம்பிக்கையால், கலைஞர் மீதான அன்பால் என்மீதான நம்பியக்கையால் உங்களின் கோரிக்கைகளை, எதிர்ப்பார்ப்புக்களை, கவலைகளை என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இது உங்கள் பிரச்னையல்ல இன்று முதல் என்னுடைய பிரச்னையாகும்.

ADVERTISEMENT

தாராபுரத்தில் சனிக்கிழமை மாலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

இவற்றை திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாள்களில் நான் தீர்வு காண்பேன். ஆனால் தினமும் தன்னுடைய பிரசாரத்தில் எங்களைக் குறை சொல்லி வருகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. ஸ்டாலின் ஊர் ஊராகப் பெட்டியைத் தூக்கிச் செல்வதாகச் சொல்லியுள்ளார். பெட்டி என்றால் அவருக்கு பணப்பெட்டிதான் ஞாபகம் வரும். அவர் 24 மணி நேரமும் பணத்தில்தான் குறியாக இருக்கிறார். இது பணப்பெட்டியல்ல மக்களின் மனப்பெட்டியாகும். மக்களின் மனச்சாட்சி பெட்டியாகும்.

உங்களின் மனக்கோட்டையை உடைக்கும் பெட்டி இதுதான். இந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்பதை உணர்த்துவது இந்தப் பெட்டிதான். இந்தப் பெட்டி திறக்கும் போது அதிமுக ஆட்சி அந்தப் பெட்டியில் வைத்து மூடப்பட்டிருக்கும். அதிமுக ஆட்சி முடிய 3 மாதம் தான் உள்ளது. இன்னும் 2 வாரங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அதன் பிறகு பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பாக வானத்தைத் தொடும் அளவுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். அடுத்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்க்கவும், 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் அவர் செய்தது என்ன? எத்தனை லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளார்? தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த 2006-11 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 19.64 சதவீதமாகும். ஆனால் தற்போது பழனிசாமி ஆட்சியில் பாதியாகக்குறைந்து வெறும் 9.1 சதவீதமாக உள்ளது.

 

திமுக ஆட்சியில் உபரி நிதி இருந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் பற்றாக்குறைதான் உள்ளது. இந்த ஆட்சியின் ஒரே சாதனை தமிழகத்தின் கடனை அதிகரித்தது தான். 2011 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடியாக இருந்த கடனை 5 லட்சம் கோடியாக மாற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார்.

கடன் வாங்கி கஜானாவுக்கும் கொண்டு வருவது. அவ்வாறு வந்த பணத்தை அவர் தன்னுடைய சம்மந்திக்கு டெண்டர் கொடுக்கிறார். அமைச்சர் வேலுமணி பினாமிகளுக்கு டெண்டரைக் கொடுக்கிறார். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99 சதவீதம் வரையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மெட்ரோ நிறுவனத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட 42 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை.

 தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். தமிழக அரசு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்காத நிலையில் மத்திய அரசின் வேலைகளும் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் புதிய வேலைவாய்ப்புக்களை நிச்சயம் உருவாக்குவோம்.

தமிழகத்தில் ஏழை. எளி்ய மக்கள் குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக வாங்கிய நகைக்கடன்களை ரத்து செய் வேண்டும் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இதே போல கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும். இந்த ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவிகள் செய்யப்படவில்லை. ஆகவே, மகளிர் சுய உதவிக்குழுக்கள் சீரமைக்கப்படுவதுடன், பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன், தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, தாராபுரம் நகர செயலாளர் தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 

Tags : DMK MK stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT