தொகுதிகள்

கிள்ளியூர்: காங்கிரஸின் கோட்டை

10th Mar 2021 12:09 PM | ஹெச். ஜெயின் ஜெரால்டு

ADVERTISEMENT

 

தொகுதியின் சிறப்பு

தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடைக்கோடி தொகுதியாக திகழ்வது கிள்ளியூர் தொகுதியாகும். கிள்ளியூர் சட்டப்பேரவை தொகுதி 1952 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் மிகவும் பழமையான இயற்கை வளம் மிக்க தொகுதியாகும்.

தமிழகம் கேரளம் எல்லையில் அமைந்துள்ள இத்தொகுதியில், எழில்மிகு கடல்வளமும் மலைவளமும் அதிகம் காணப்படுவது இதன் முக்கியச் சிறப்பாகும்.  தமிழ் புலவர் அதங்கோடு ஆசான் பிறந்த அதங்கோடு இந்த தொகுதியில்தான் உள்ளது.

ADVERTISEMENT

இங்கு பிரசித்தி பெற்ற இந்து கோயில்கள் உள்ளன. குறிப்பாக மகாசிவராத்திரியின்போது நடைபெறும் சிவாலய ஓட்டத்தில் இடம்பெறும் 12 சிவாலயங்களில் முதல் சிவாலாயமான முன்சிறை மகாதேவர் கோயில் இத்தொகுதியில்தான் உள்ளது. பிரசித்தி பெற்ற பல கிறிஸ்தவ ஆலயங்களும் உள்ளது. தேங்காய்ப்பட்டினத்தில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஜூம்மா மசூதி உள்ளது.

இத்தொகுதிக்குள்பட்ட புதுக்கடையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு ஸ்தூபி அமைந்துள்ளது. நீண்ட கடற்கரை கிராமங்களும் இத்தொகுதிக்குள் வருகிறது. குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்கப் போராடிய மூத்த தலைவர் நேசமணி, பொன்னப்பநாடார் ஆகியோரை வெற்றி பெற வைத்த தொகுதி கிள்ளியூர்.

1952 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ்,இந்திய தேசிய காங்கிரஸ், ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் என காங்கிரஸின் கோட்டையாக உள்ளது. பல தேர்தல்களில் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கே இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

நில அமைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த தொகுதியில் கிள்ளியூர்  வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிள்ளியூர், முன்சிறை என 2 ஊராட்சி ஒன்றியங்களில்16 கிராம ஊராட்சிகள் 7 பேரூராட்சிகளை உள்ளடக்கியதாகும். 154.71 ச.கி.மீ. பரப்பளவுள்ளது இந்த தொகுதி.

சமூக, சாதி, தொழில்கள்

நாடார், மீனவர், நாயர், கிருஷ்ணன் வகை சமுதாயம், முஸ்லீம் உள்ளிட்டோர் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மீனவர் சமுதாயத்தின் வாக்குகள் இந்த தொகுதியின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது. இந்த தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 379 ஆண்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 372 பெண்களும், இதரர் 19  என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி  மக்களுக்கு மீன்பிடித் தொழில், விவசாயம் ஆகியன முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

இதுவரை தேர்தலில் வென்றவர்கள்

1952  பொன்னப்பநாடார்(தமிழ்நாடு காங்கிரஸ்)
1954  பொன்னப்பநாடார்(தமிழ்நாடு காங்கிரஸ்)
1957  நேசமணி ( காங்கிரஸ்)
1962  பொன்னப்பநாடார்( காங்கிரஸ்)
1967  வில்லியம் ( காங்கிரஸ்)
1971  டென்னிஸ்( காங்கிரஸ்)
1977  பொன்.விஜயராகவன்(ஜனதா)
1980  பொன்.விஜயராகவன்(ஜனதா)
1984  டாக்டர்.குமாரதாஸ்(ஜனதா)
1989  பொன்.விஜயராகவன்(சுயேச்சை)
1991  டாக்டர். குமாரதாஸ்(ஜனதா தளம்)
1996  டாக்டர்.குமாரதாஸ்(த.மா.கா.)
2001  டாக்டர். குமாரதாஸ்(த.மா.கா.)
2006  எஸ்.ஜான்ஜேக்கப்( காங்கிரஸ்)
2011  எஸ்.ஜான்ஜேக்கப்  (காங்கிரஸ்)
2016  எஸ்.ராஜேஷ்குமார் ( காங்கிரஸ்)

கட்சிகளின் வெற்றி வாய்ப்பு

கிள்ளியூர் தொகுதியில்  கடந்த 2016 ஆம் ஆண்டில் வெற்றிபெற்ற குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வாங்கிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இம்முறையும் இவருக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியாகத் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டால் மீனவர் சமுதாயத்தில் ஒருவர் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. அப்படி ஒதுக்கும் சூழலில் அதிமுகவில் சேவியர் மனோகர், யூஜின், வெற்றிவேந்தன், ஆன்றனி, ஆன்றோ ஆகியோர் வாய்ப்பு கேட்டு காத்திருக்கின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ரூ. 137 கோடியில்ஒருங்கிணைந்த  தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம், கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், ஒன்றரை கோடியில் கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உபகரணங்கள், குறும்பனையில் மீன்பிடி இறகுதளம், இனயம் மீனவ கிரமாமத்தில் தூண்டில் வளைவு, பூத்துறையில் கடலரிப்பு தடுப்புச் சுவர், சட்டப்பேரவை மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 13 கோடியில் திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளது.

நிறைவேறாத திட்டங்கள்

காணமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தங்குதளம், கிள்ளியூர் வட்டத்தில் சார்பு நீதிமன்றம், தேங்காய்ப்பட்டினம் - இரயுமன்துறை மீனவர் கிராமத்தை இணைக்கும் உயர் மட்ட பாலம், புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகும்.

தொகுதியின் பிரச்சனைகள்

பொதுவிநியோகத்  திட்டத்தின்கீழ் 5 விதமான குறியீடுகள் உள்ள மின்னணு குடும்ப அட்டையில் உள்ள குளறுபடிகளை நீக்காதது, 15 ஆண்டுகளாக விளாத்துறை கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் உள்ள ராட்சத குழாயின் உடைப்புகளை நிரந்தரமாக சீரமைக்காதது, சிற்றாறு பட்டணங்கால்வாயில் கடைவரம்பு பகுதிவரை தடையின்றி தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை நீராதார அமைப்பு நடவடிக்கை எடுக்காதது, தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள மணல்திட்டுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்காதது, ஏ.வி.எம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்து நீர்வழிப் போக்குவரத்து அமைக்காதது இந்த தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் ஆகும்.

மக்களின் எதிர்பார்ப்பு

குறும்பனை பாரிக்கல் கடற்கரையை சுற்றுலா இடமாக மாற்றுவது, தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் படகு சவாரி அமைப்பது, 60 வயதிற்கு மேற்பட்ட ஏழை முதியோர்கள் அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்குவது, வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா வழங்குவது, நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை இயக்குவது, கிள்ளியூர் வட்டத்தில் தற்போது உள்ள மிடாலம், முன்சிறை குறுவட்டங்களை 4 வட்டங்களாகப் பிரிப்பது, குண்டு, குழியுமான சாலைகளை சீரமைப்பது மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாகும்.

Tags : election 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT