தொகுதிகள்

சங்கரன்கோவில் (தனி) : கோட்டையைத் தக்க வைக்குமா அதிமுக? 

எம். ஈஸ்வரமூர்த்தி

நில அமைப்பு:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆடித்தவசுத் திருவிழா நடைபெறும் சங்கர நாராயண சுவாமி கோயிலை உள்ளடக்கியது சங்கரன்கோவில் தொகுதியாகும். தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைச்சர் அந்தஸ்து பெற்ற தொகுதியாக சங்கரன்கோவில் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள 2 தனித் தொகுதிகளில் சங்கரன்கோவிலும் ஒன்று.

நகர்புறத்தையும்,கிராமப்புறத்தையும் உள்ளடக்கியதாகத் இத்தொகுதி உள்ளது. மானாவாரி விவசாயமும், விசைத்தறித் தொழிலும் பிரதானம். சுமார் 15,000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். நகரின் பொருளாதாரம் இந்த இரண்டையும் சார்ந்தே உள்ளது.

கிழக்கே கோவில்பட்டி அப்பனேரி, மேற்கே கடையநல்லூர் தொகுதி கடம்பன்குளம், வடக்கே சங்கரன்கோவில் ஒன்றியம் புளியம்பட்டி, தெற்கே மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மேலஇலந்தைகுளம், மானூர் ஒன்றியத்தில் உள்ள தேவர்குளம் வரை உள்ளது.

இத்தொகுதியில் சங்கரன்கோவில், திருவேங்கடம் என 2 வட்டங்கள் உள்ளன. சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள், திருவேங்கடம் பேரூராட்சியில் 15 வார்டுகள், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருவிகுளம்,மானூர் ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள பகுதிகள் இத்தொகுதியில் உள்ளன.

வாக்காளர்கள் விவரம்:

சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் 2,53,861 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,22,739 பேர். பெண் வாக்காளர்கள் 1,30,195 பேர். திருநங்கைகள் 5 பேர், ராணுவ வீரர்கள் 922 பேர்.

சமூக நிலவரம்:

இத்தொகுதியில் தேவர் சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்டோர் சரிசமமாக உள்ளனர். அடுத்தபடியாக யாதவ மக்களும், நகரத்தில் செங்குந்தர் சமுதாய மக்களும் அதிகமாக உள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் விவரம்:

இதுவரை எம்.எல்.ஏ.க்கள்: சங்கரன்கோவில் தொகுதி 1952 முதல் 1957 வரை இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது. 1952இல்  ஊர்காவலன் (தனி), ராமசுந்தர கருணாலய பாண்டியன்(பொது), 1957இல் ஊர்காவலன் (தனி), ஏ.ஆர்.சுப்பையா முதலியார் (பொது), 1962இல் எம்.எஸ்.ஏ.மஜீத் (பொது) ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.

1967இல் திமுகவின் பி.துரைராஜ், 1971, 1977 ஆகிய இரு தேர்தல்களில் திமுகவின் எஸ்.சுப்பையா, 1980இல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட  பி.துரைராஜ், 1984இல் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.சங்கரலிங்கம் வெற்றி பெற்றனர்.

1989இல் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.தங்கவேலுவும், 1991இல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட வி.கோபாலகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர். அதன்பிறகு இப்போது வரை அதிமுகவின் கோட்டையாக சங்கரன்கோவில் தொகுதி உள்ளது. 1996, 2001, 2006, 2011 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட  சொ.கருப்பசாமி வெற்றி பெற்றார்.  சொ.கருப்பசாமி மறைந்த பிறகு 2012ல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போதும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ச.முத்துசெல்வி வெற்றி பெற்றார்.

2016இல் வி.எம்.ராஜலெட்சுமி அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். இதன்மூலம் அவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் தேர்வு பெற்றார். தொடர்ந்து 30 ஆண்டுகள் அதிமுக இத்தொகுதியை தன்வசம் வைத்துள்ளது.

மக்களின் கோரிக்கைகள்:

இத்தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்கள் எதுவும் இல்லை என்பது மக்களின் குறை. கைத்தறியைப் போல லுங்கி, வேட்டி, சேலை, துண்டு போன்ற 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

மேலும் நேரடியாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசின் ஏற்றுமதி மையம் அல்லது ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.

சங்கரன்கோவிலில் விவசாயத்தின் இன்னொரு பகுதியாக பூ விவசாயிகள் ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் உள்ளனர். பூவுக்கு விலையில்லாத போது, அதனை கொள்முதல் செய்யும் வகையில் அரசு வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற பூ விவசாயிகளின் கோரிக்கை தேர்தல் நேர வாக்குறுதிகளாக இருக்கின்றன.

கிடப்பில் கிடக்கும் 70 ஆண்டுகால கீரியாறு நீர்பாசனத் திட்டம்:

கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் பம்பையாற்றின் முக்கியத் துணை நதிகளில் கீரியாறும் ஒன்று. கீரியாறானது காக்கையாறு, பம்பையாறு, மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வேம்பநாடு ஏரி வழியாக வீணாகக் அரபிக் கடலில் கலக்கிறது. எனவே கீரியாற்றின் குறுக்கே அணை கட்டி குகைப்பாதை வழியாக நீரை கொண்டு செல்ல பல ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டுவரப்பட்ட கீரியாறு நீர்ப்பாசன திட்டம், பின்னர் பம்பை-அச்சன்கோவில் கீரியாறு திட்டமாக விரிவடைந்தது.

இது திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறும் மெகா திட்டமாகும். இது விவசாயிகளின் பல்லாண்டு கனவும்கூட. இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.534 கோடி மதிப்பில் சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி வரை செல்லும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அதிமுக அரசின் பிரம்மாண்ட சாதனைகளில் ஒன்றாக அதிமுகவினர் கருதுகின்றனர்.

மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்பட்டு இயங்கி வருகிறது. சங்கரன்கோவில் அருகே எலுமிச்சை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. குருக்கள்பட்டியில்  ஆட்டின ஆராய்ச்சி மையத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாணிபர் ஊருணி, திருநீலகண்டர் ஊருணி ஆகியவற்றுக்கு சுற்றுச் சுவர் எழுப்பி நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது அமைச்சர் ராஜலட்சுமி செய்த சாதனைகளாக பட்டியலிடப்படுகிறது.

அரசியல் நிலவரம்:

அவர் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். இருந்தபோதிலும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துசெல்விக்கு ஒதுக்க கொடுக்க வேண்டும் என அதிமுகவில் ஒரு சாரர் தெரிவிக்கின்றனர்.  திமுகவில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு உள்ளிட்டோர் போட்டியிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் போட்டியிடுவதால் வெற்றி  வாய்ப்பு என்பது திமுக, அதிமுகவுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்பதே உண்மை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT