தொகுதிகள்

பத்மநாபபுரம்: வெற்றியைத் தீர்மானிக்கும் மத வாக்குகள்

தொகுதி அறிமுகம்

தமிழகத்தின் 232 ஆவது சட்டப்பேரவைத் தொகுதியான பத்மநாபபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பண்டைய  திருவிதாங்கூர் நாட்டின் தலைநகரமான பத்மநாபபுரத்தை மையமாக கொண்டுள்ளது.

திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய  பத்மநாபபுரம் அரண்மனை  இத் தொகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமாகத் திகழ்கிறது. கோதையாறும், பரளியாறும், வள்ளியாறும் பாய்ந்து வளப்படுத்தும் இப்பேரவைத் தொகுதியின் இதர சிறப்பு அம்சங்களாக ஆன்மிகச் சிறப்பும், புராதனச் சிறப்பு கொண்ட தென்நாட்டின் வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் இங்கே உள்ளது.

இதேபோல் புகழ்பெற்ற 12 சிவாலய ஓட்டத் திருத்தலங்களில் திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்னியோடு என பெரும்பாலான கோயில்கள் இத்தொகுதியிலேயே அமைந்துள்ளன. தக்கலை அருகே புலியூர்குறிச்சி முட்டிச்சான்பாறை தேவசகாயம் பிள்ளை திருத்தலமும் தக்கலை ஞானமாமேதை பீர்முகமது  தர்காவும் இத்தொகுதியின் அடையாளங்களுள் குறிப்பிடத்தக்கவை.

குமரி குற்றாலம் என வர்ணிக்கப்படும் திற்பரப்பு அருவியும், ஆசியக் கண்டத்திலேயே நீளமானதும், உயரமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம் என 2 சுற்றுலாத் தலங்களும், குமரியில் வேளாண் விளைச்சலுக்கு ஆதாரமாகத் திகழும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளும் இத் தொகுதியிலேயே அடங்கியுள்ளன.

நில அமைப்பு

வடக்கே அம்பாசமுத்திரம், தெற்கே குளச்சல், கிழக்கே கன்னியாகுமரி, மேற்கே விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய பேரவைத் தொகுதிகள் இத்தொகுதியின் எல்லைகளாக உள்ளன. மலைகளும், காடுகளும், நெல், வாழை, அன்னாசி, ரப்பர்  விளையும் சமவெளிகளும், மலை நிலங்களும் இத்தொகுதியின் நில அமைப்பாகும்.

அடங்கியுள்ள பகுதிகள்

பத்மநாபபுரம் நகராட்சியின் 21 வார்டுகள், திருவிதாங்கோடு, கோதநல்லூர், விலவூர், குமாரபுரம், வேர்க்கிளம்பி, ஆற்றூர், திருவட்டாறு, பொன்மனை, குலசேகரம், திற்பரப்பு என 10 பேரூராட்சிகள், சடையமங்கலம்,  கல்குறிச்சி, முத்தலக்குறிச்சி, திக்கணம்கோடு, தென்கரை, காட்டாத்துறை, செறுகோல், கண்ணனூர், ஏற்றக்கோடு, குமரன்குடி, அருவிக்கரை, அயக்கோடு, சுருளகோடு, பாலமோர், பேச்சிப்பாறை என 15 கிராம ஊராட்சிகள் பத்மநாபபுரம் தொகுதிக்குள் வருகின்றன.

சமூகம், சாதி, தொழில்கள்

இத்தொகுதியின் மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்கள் வேளாண் சார்ந்த தொழில்களை செய்யும் சமூகமாக உள்ளனர். நாடார் சாதியினர் பெரும்பான்மை சாதியினராக உள்ளனர். இவர்களுக்கு அடுத்து நாயர், கிருஷ்ண வகையினர், இஸ்லாமியர்கள், தலித் சமூகத்தினர் உள்ளனர். மொத்தமுள்ள மக்கள் தொகையில் ஏறக்குறைய 53 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்களாகவும், 42 சதவிகிதம் பேர் இந்துக்களாகவும், 5 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்களாகவும் உள்ளனர். ரப்பர் தோட்டத் தொழில், வாழை விவசாயம் முக்கியத் தொழில்களாக உள்ளன.

கடந்த தேர்தல்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு சட்டப்பேரவைத் தொகுதி இருந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு செய்யப்பட்ட  தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் திருவட்டாறு பேரவைத் தொகுதியின் குறிப்பிட்ட பகுதிகளில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள்

1957 தாம்சன் தர்மராஜ் டேனியல்  (காங்கிரஸ்), 
1962 குஞ்சன் நாடார் (சுயேச்சை),
1967 வி. ஜார்ஜ் (காங்கிரஸ்),
1971 சுவாமிதாஸ் நாடார் (காங்கிரஸ்), 
1977 சுவாமிதாஸ் நாடார் (ஜனதா), 
1980 பி. முகமது இஸ்மாயில் (ஜனதா),
1984 வி. பாலச்சந்திரன் (சுயேச்சை),
1989 எஸ். நூர்முகமது (மார்க்சிஸ்ட்), 
1991 கு. லாரன்ஸ் (அதிமுக),
1996 சி. வேலாயுதன் (பாஜக), 
2001 கே.பி ராஜேந்திர பிரசாத் (அதிமுக), 
2006 டி. தியோடர் ரெஜினால்டு(திமுக),
2011 டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் (திமுக), 
2016 டி. மனோதங்கராஜ் (திமுக),

கட்சிகளின் பலம்

இத்தொகுதியில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அடிப்படையில் தொண்டர் பலம் மிக்க கட்சிகளாக உள்ளன. எனினும் இத்தொகுதியில் மதம்சார்ந்த வாக்குகளே கடந்த தேர்தலில் வெற்றியைத் தீர்மானித்துள்ளன.

2021 சட்டப் பேரவைத் தேர்தலில் இப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் திமுகவும், அதிமுக கூட்டணியில் அதிமுக அல்லது பாஜக போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வாக்குகள் பலமாக இருக்கும். கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த நிலையில் அக்கட்சிகள் தற்போது திமுக கூட்டணியில் சேர்ந்திருப்பதால், திமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுகவும், பாஜகவும், தேமுதிகவும் இத்தொகுதியில் தனித்தனியாக களம் கண்ட நிலையில் வரவிருக்கும் தேர்தலில் இந்தக் கட்சிகள் ஒன்றாக களம் காண்பது இக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு  கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் மொத்தமுள்ள வாக்குகளில் 47 சதவீதம் பெற்ற நிலையில், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக-பாஜக-தேமுதிக இணைந்து களம் காண்பதால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக போட்டியிடும்பட்சத்தில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோதங்கராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் மாவட்டத் துணைச்செயலாளர் ஜான் கிறிஸ்டோபரும் திமுகவில் வாய்ப்பு கேட்டு மேலிடத்தில் விருப்பமனு அளித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணியில் அதிமுகவின் குமரி மேற்கு மாவட்டச்செயலாளர் ஜான்தங்கம் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். பாஜக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஷீபா பிரசாத் வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறார், இதில் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்ற நிலையில் உள்ளது.

வாக்காளர் நிலவரம்

ஆண் - 1,20,362, பெண் - 1,17,900, இதரர் - 28 மொத்தம் - 2,38,290

கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்குகள்

மொத்தம் பதிவான வாக்குகள் - 1,61,560
டி. மனோதங்கராஜ் (திமுக) - 76,249
கே.பி. ராஜேந்திர பிரசாத் (அதிமுக) - 35,344
ஷீபா பிரசாத் (பாஜக) - 31,994
டி. ஜெகநாதன் (தேமுதிக) - 13,185

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

இத்தொகுதியில் கடந்த  5 ஆண்டுகளில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிறுவர்கள் பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 கோடி மதிப்பில் மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர்கள் நலன் சார்ந்த பணிகள் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் சமூக அக்கறை ஏற்படுத்துதல், சமூக அக்கறை கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து நீராதாரங்களைக் காத்தல், சூழியலைக் காத்தல் போன்ற செயல்களை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் அரசின் பல்வேறு நிதித்திட்டங்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் நவீன வகுப்பறைக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பரைக்கோட்டில் கபடி, ஆற்றூரில் வாள்விளையாட்டு போன்றவற்றிற்கு நவீன விளையாட்டரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். சட்டப்பேரவையில் இப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி சார்ந்த உரைகளும் முக்கியமானவைகளாகும்.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்

இத்தொகுதியில் மக்கள் வேளாண் சார்ந்த தொழில்களை பிரதானமாக கொண்டிருக்கும் நிலையில், ஏராளமான குளங்கள் தூர்வாரப்படவில்லை. தொகுதியில் அரசு சார்ந்த தொழில் நிறுவனமான அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கைளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

வாழை, அன்னாசி, தேன் போன்ற வேளாண் சார்ந்த உற்பத்திப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடர் இழப்பில் உள்ளனர்.

விவசாயிகளின் விளை நிலங்கள் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள நிலைமை, மக்கள் வாழும் பகுதிகள் சூழியல் அதிர்வு தாங்கு மண்டலமாக வரையறை செய்துள்ள நிலைமை, மக்களின் குடியிருப்புகள் மலையிட குழுமக் கிராமங்களாக வரையறை செய்துள்ள நிலைமை போன்றவற்றால் மக்கள் அதிருப்தியும், தீராத நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர்.

வனப்பகுதிகளிருந்து வரும் குரங்குகள், காட்டுப்பன்றிகள், யானைகளால் தென்னை, வாழை விவசாயிகள் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாவட்டத்தில் இதர பேரவைத் தொகுதிகளில் இல்லாத வகையில் அதிக அளவில் மலை வாழ் பழங்குடி மக்கள் வாழும் தொகுதியாக பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி உள்ள நிலையில், மலைவாழ் மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளன.

இத்தொகுதிக்குள்பட்ட கல்குளம் வட்டம் 2 ஆகப் பிரிக்கப்பட்டு திருவட்டாறு தனி வட்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதேபோன்று திருவட்டாறு கல்வி மாவட்டம்  உருவாக்கப்பட்ட போதிலும்,  மாவட்ட கல்வி அலுவலரின் அலுவலகம் விளவங்கோடு பேரவைத் தொகுதியான மார்த்தாண்டத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மக்களின் கோரிக்கைகள்

தொகுதிக்குள்பட்ட அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு மேம்படுத்த வேண்டும். கால்வாய்கள், கிளைக் கால்வாய்களின் தண்ணீர் செல்லும் வகையில் மேம்படுத்த வேண்டும். வாழை, அன்னாசி, தேன் போன்றவற்றிற்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஏற்றுமதி மண்டலங்களும், இவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையிலான தொழிற்கூடங்களும் உருவாக்கப்பட வேண்டும். தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, ரப்பர் சார்ந்த தொழிற்சாலைகள், திருவட்டாறில் நீதிமன்றம் போன்றவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட முன்அனுமதி அவசியம்

கொலை வழக்கில் சிறையில் உள்ளவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மன்னாா்குடியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

பதற்றத்தை அதிகரிக்க விருப்பமில்லை

விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரசாரம்: தீவிர வாக்கு சேகரிப்பில் தலைவா்கள், வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT