தொகுதிகள்

குமாரபாளையம்: தொகுதியை மீண்டும் கைப்பற்றுமா அதிமுக?

9th Mar 2021 04:13 PM | ஆ. ராஜு சாஸ்திரி

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்திலுள்ள குமாரபாளையம் தொகுதியில் இருமுறை போட்டியிட்ட பி.தங்கமணி வெற்றி பெற்று அமைச்சரவையிலும், அதிமுகவிலும் முக்கியப் பொறுப்பு வகித்து வருகிறார். இதன் காரணமாக தமிழகத்தின் விஐபி தொகுதிகளில் ஒன்றாக குமாரபாளையம் உள்ளது.

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து கடந்த 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது பிரித்து குமாரபாளையம் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இங்கு விசைத்தறிக் கூடங்கள் அதிகம்; விசைத்தறித் தொழிலாளர்களும் நிறைந்துள்ளனர்.

இங்கு, உற்பத்தியாகும் ஜவுளிகள் உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமன்றி, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. அடுத்தபடியாக விவசாயம் மற்றும் சாயத்தொழில் உள்ளது.

குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிலையம்

தொகுதி அமைப்பு:

ADVERTISEMENT

குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இரு நகராட்சிகளையும், ஆலாம்பாளையம், படைவீடு ஆகிய இரு பேரூராட்சிகளையும், குமாரபாளையம், குமாரபாளையம் அக்ரஹாரம், அய்யம்பாளையம் அக்ரஹாரம், பல்லக்காபாளையம், சமய சங்கிலி,  செüதாபுரம், பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், எலந்தக்குட்டை, ஆவத்திபாளையம், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், காடச்சநல்லூர், புதுப்பாளையம் அக்ரஹாரம், ஓடப்பள்ளி அக்ரஹாரம் , செங்குட்டைபாளையம், பாப்பம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை இத்தொகுதி கொண்டுள்ளது.

வாக்காளர் விவரம்

ஆண்கள்: 1,24,334
பெண்கள்: 1,29,857
மூன்றாம் பாலினத்தவர்: 31
மொத்தம்: 2,54,222

வாக்குச்சாவடிகள்:  279
இவற்றில், 24 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.

நாடா இல்லா தறிகளில் நெசவாகும் ஜவுளிகள்

சமூக நிலவரம்:

குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சிப் பகுதிகளில் முதலியார்,  செட்டியார் வாக்குகள் அதிகமாக உள்ளன. கிராமப்புறப் பகுதிகளில் வேட்டுவக் கவுண்டர், கொங்கு வேளாளக் கவுண்டர் வாக்குகளும், அடுத்தபடியாக ஹரிஜன சமுதாய வாக்குகளும் உள்ளன.

வண்ண நூல்களைக் கொண்டு விசைத்தறிகளில் நெசவாகும் ஜவுளி உற்பத்தி இத்தொகுதியில் பிரதானத் தொழில். நெசவுக்குத் தேவையான வண்ண நூல்களைச் சாயமிடும் தொழில், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

காவேரி மற்றும் குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்காக்களிலும் ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. புதிதாக அதிக அளவில் நூற்பாலைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த தேர்தல்கள் விவரம்:

தொகுதி பிரிக்கப்பட்ட 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.தங்கமணி, திமுக வேட்பாளரான பி.செல்வராஜைக் காட்டிலும் 26,887 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.      இரண்டாவது முறையாக 2016 தேர்தலில் போட்டியிட்ட பி.தங்கமணி, திமுக வேட்பாளரான பி.யுவராஜைக் காட்டிலும் கூடுதலாக 47,329 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஏற்கனவே 2001 தேர்தலில் ஒருங்கிணைந்த திருச்செங்கோடு தொகுதியிலும் தங்கமணி வெற்றி பெற்றுள்ளார். தற்போது 4}வது முறையாக இவரே போட்டியிட உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் அமைப்பு, நீதிமன்றம் தொடக்கம், பள்ளிபாளையம் } ஈரோடு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம், ரயில்வே நுழைவுப் பாலம், குமாரபாளையத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்கம், பயணியர் மாளிகை அமைப்பு, தமிழகத்திலேயே குமாரபாளையம் நகராட்சியில் முதன்முறையாக புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம், கோட்டைமேடு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அமைப்பு ஆகியவை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை.

நிறைவேறாத திட்டங்கள்:

நூல் சாயமிடும் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாத சாயப்பட்டறைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இப்பகுதிகளில் ஒருங்கிணைந்த சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால்,  விசைத்தறித் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

சென்ற தோர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டதுபோல, குமாரபாளையத்தில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படவில்லை.

தொகுதியின் முக்கிய பிரச்னைகள்:

விசைத்தறி, விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இத்தொகுதியில் சுற்றுச்சூழல் பிரச்னை வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது. காவிரியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை இல்லை. குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு, பள்ளிபாளையத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.

கள நிலவரம்

குமாரபாளையம் தொகுதியிலுள்ள நகர்ப்புறப் பகுதிகள் திமுகவுக்கும், கிராமப்புறப் பகுதிகள் அதிமுகவுக்கும் சாதகமாக உள்ளன.

இம்முறை, அதிமுக, திமுக, அமமுக ஆகியவை நேரடியாக போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் களம் இறங்குகின்றன.

பரவலாக அடிப்படை வசதிகள் நிறைவேற்றம், அமைச்சர் தொகுதிக்கான முக்கியத் திட்டங்கள் நிறைவேற்றம் ஆகியவை அதிமுகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

Tags : election 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT