தொகுதிகள்

அரவக்குறிச்சி: பாஜகவின் அண்ணாமலை போட்டியிடுகிறாரா?

9th Mar 2021 06:33 PM | ஏ. அருள்ராஜ்

ADVERTISEMENT

தொகுதியின் சிறப்பு:

இந்தியாவிலேயே முருங்கைக்கு பெயர் போனத் தொகுதியாக உள்ளது. இங்கு உற்பத்தியாகும் முருங்கைக்காய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு  மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகுகிறது.  கனிம வளங்கள்  நிறைந்த பகுதி.  தொகுதியில் மட்டும் க.பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

தமிழகத்திலேயே அதிகளவில் கரும்பாறை உள்ள பகுதியாக இருப்பதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கட்டிட கட்டுமான பணிக்கு தற்போது மணலுக்கு தடை செய்யப்பட்ட  நிலையில், இங்கிருந்துதான் எம்.சேன்ட் எனும் கற்குவாரிகளின் மணல் சப்ளை நடந்துவருகிறது. அமராவதி ஆறு இந்த தொகுதியில் செல்வதால் இங்கு அதிகளவில் மஞ்சள், முருங்கை,  வாழை, நெல் பயிரிடப்படுகிறது. இந்த தொகுதியில்தான் புகழ்வாய்ந்த புகழிமலை முருகன்கோயில், பாலமலை முருகன்கோயில் உள்ளிட்ட பெருமைவாய்ந்த கோயில்கள் உள்ளன.

அமராவதி ஆறு


நில அமைப்பு:

ADVERTISEMENT

அரவக்குறிச்சி தொகுதியில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்,  திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆகிய எல்லைப்பகுதியாக அமைந்துள்ளன. அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட பள்ளபட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளும்,  கரூர் வட்டத்திற்குட்பட்ட வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம்,  திருக்காடுதுறை ஊராட்சிகள் மற்றும் நஞ்சைபுகளூர்,  டி.என்.பி.எல்., புஞ்சை தோட்டக்குறிச்சி ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளையும் உள்ளடக்கியது.

சாதி, சமூகம், தொழில்கள்:

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்கள், இஸ்லாமியர்கள், வேட்டுவக்கவுண்டர்கள் அதிகளவில் வசிக்கும் தொகுதி. இவர்களைத்தவிர கொங்கு நாடார்,  சோழியவெள்ளாளர், நாயக்கர்கள் உள்ளிட்ட பிற சமுதாயத்தினரும் உள்ளனர். தேர்தலில் பள்ளபட்டியில் வசிக்கும் இஸ்லாமியர்களும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களும்தான் வேட்பாளர்களின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கிறார்கள்.


இந்த தொகுதியில் கல்குவாரிகளுக்கு அடுத்தபடியாக, எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட டிஎன்பிஎல் காகித ஆலை புகளூரில் உள்ளது. மேலும் இந்த தொகுதியில்தான் புஞ்சைப் புகளூர் அருகே ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் முருங்கை விளைச்சல் அதிகமாகும்போது, அவற்றின் விலை கிலோ ரூ.2 வரை விற்கப்படுவதால், முருங்கை விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே அண்மையில் தொகுதியில் முருங்கையை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தரம் உயர்த்தவும், முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வந்ததால் அப்பணியும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இதுவரை வென்றவர்கள்: 

1952இல் நடந்த முதல் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ரத்தினக்கவுண்டர் வெற்றிபெற்றார்.  பின்னர், நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 5 முறையும், திமுக 4 முறையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 முறையும் வென்றுள்ளன. 

2016இல் இத்தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர் 2019இல் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.செந்தில்பாலாஜி களமிறங்கி வெற்றிபெற்றார்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

அரவக்குறிச்சி தொகுதியில் அண்மையில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டது. மேலும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிடும்படியான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

தொகுதிமக்களின் எதிர்பார்ப்பு:

தொகுதியில் முருங்கைப்பவுடர் தொழிற்சாலையை உடனே நிறுவவேண்டும்.  புகளூர் கதவணை கட்டும்பணியை துரிதப்படுத்தவேண்டும். அமராவதி ஆற்றின் ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டும். நொய்யல் ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் விடப்படும் திருப்பூர் சாயக்கழிவு நீரை தடுத்து நிறுத்தி, ஏற்கனவே சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும் போன்றவை முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

கட்சியின் செல்வாக்கு:

தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக பலம் பெற்ற கட்சியாக இருந்துவருகிறது. இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகளவில் பள்ளபட்டி வசித்தாலும், ஒரு முறை மட்டும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வென்றுள்ளது. இம்முறை அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இந்த தொகுதியில் களமிறங்க ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டுவருகிறது. அக்கட்சியின் மாநில துணைச் செயலாளரும், விருப்ப ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை போட்டியிட காய் நகர்த்தி வருகிறார்.

இதனிடையே கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த வி.வி.செந்தில்நாதன், தற்போது அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவரும் அரவக்குறிச்சி தொகுதியை கேட்பதாக கூறப்படுகிறது. திமுக நேரிடையாக களமிறங்கி அதன் வேட்பாளராக க.பரமத்தி முன்னாள் தலைவர் கே.கே.கருணாநிதி களமிறக்கப்படுவார் என தெரிகிறது. அமமுக சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகி ஆரியூர் சுப்ரமணியனுக்கு வழங்கலாம் என கூறப்படுகிறது.

தற்போதைய வாக்காளர்கள்:

ஆண்- 1,01,902, 
பெண்- 1,11,201, 
மூன்றாம் பாலினம்- 7, 
மொத்தம்-  2,13,110.

இதுவரை வென்றவர்கள் விவரம்

1952 ரத்தினக்கவுண்டர்- சுயேச்சை-30962,
          நல்லசாமி - காங்.- 18,140.

1957 சதாசிவம்- காங். - 24,726, 
         ரத்தினம்- சுயேச்சை- 15,920.

1962  சதாசிவம்- காங். 28732,
           முத்துசாமி கவுண்டர்- சுதந்திரா கட்சி- 21,082.

1967  எஸ்.கே. கவுண்டர்- சுதந்திரா கட்சி 46,614,
          விபி. கவுண்டர்- காங். 22,482.

1971 அப்துல் ஜப்பார்-  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 34,164,
          கந்தசாமி கவுண்டர் ஸ்வதேச கட்சி   18,859.  

1977  சதாசிவம் -காங். 32,581,
          ராமசாமி - திமுக -21,547.

1980  சென்னிமலை (எ)கந்தசாமி- அதிமுக -45145, 
          சண்முகம் -காங்.- 40,233.

1984  ஜெகதீசன் - அதிமுக - 57,887, 
          ராமசாமி - திமுக - 44273.

1989 மொஞ்சனூர் ராமசாமி - திமுக - 48,463,
         ஜெகதீசன் - அதிமுக(ஜெ. அணி) - 30,309.

1991 மரியமுல் ஆசியா - அதிமுக - 57,957,
         மொஞ்சனூர் ராமசாமி - திமுக - 37,005.

1996 முகமது இஸ்மாயில் - திமுக - 41,153,
          துரைசாமி - அதிமுக - 32,059.

2001  லியாவுதீன் சேட் - அதிமுக - 51,535,
           லட்சுமி துரைசாமி - திமுக - 33,209.

2006  கலிலூர் ரகுமான்- திமுக - 45960,
          மொஞ்சனூர் - ராமசாமி - மதிமுக - 43,135.

2011  கே.சி.பழனிச்சாமி - திமுக - 72,831,
          செந்தில்நாதன் - அதிமுக - 68,290.

2016  வி. செந்தில் பாலாஜி - அதிமுக - 88,068,
          கே. சி. பழனிச்சாமி - திமுக - 64,407.

2019 வி. செந்தில் பாலாஜி - திமுக - 97,718, 
         வி. வி. செந்தில்நாதன் - அதிமுக - 59771.    

 

Tags : election 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT