தொகுதிகள்

பட்டுக்கோட்டை: திமுக நேரடியாக களமிறங்க வாய்ப்பு

வெ. பழனிவேல்

தொகுதியின் சிறப்பு:

பட்டுக்கோட்டை 1799 ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் மராட்டிய மன்னர்  ஆட்சியின் கீழ் இருந்தது. பின்பு வந்த பிரிட்டிஷ் கிழக்கு இந்திய நிறுவனத்தால் 1801 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை அரசியல்வாதிகளாலும் இலக்கியவாதிகளால் புகழ்பெற்ற ஒரு ஊர். மொழிப்போர்  தியாகி பட்டுக்கோட்டை அழகிரி, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், முன்னாள் இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமன், நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற புகழ்பெற்ற பலர் பிறந்த பகுதிதான் பட்டுக்கோட்டை தொகுதி.

நில அமைப்பு:

பட்டுக்கோட்டை நகருக்கு வெளியே 12 கிமீ தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையும், 15 கிமீ  தொலைவில்  தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட மனோரா நினைவுச் சின்னமும் அமைந்துள்ளது. 

1965 ஆம் ஆண்டு, ஏப்ரல் 1 ஆம் தேதி 21.83 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கொண்டு பட்டுக்கோட்டை நகராட்சி அமைக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி இரண்டாம்  தர நகராட்சியாகவும் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல்தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. தற்போது, இது 33 வார்டுகள் கொண்ட ஒரு தேர்வு தர நகராட்சியாக உள்ளது. தற்போது, பட்டுக்கோட்டை நகராட்சி 33 வார்டுகள் உள்ளன. 

எல்லைகள்:

பட்டுக்கோட்டை வட்டம், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக பட்டுக்கோட்டை  நகரம் உள்ளது. இந்த பட்டுக்கோட்டை வட்டத்தில் கீழ்குறிச்சி, திருச்சிற்றலம்பலம், அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, நம்பிவயல், பெரியகோட்டை, துவரங்குறிச்சி, மதுக்கூர், ஆண்டிக்காடு மற்றும் பட்டுக்கோட்டை என 10  உள்வட்டங்களும், 175 வருவாய் கிராமங்களும் உள்ளன. 

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்கள் உள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி மதுக்கூர் பேரூராட்சி மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சிகளும் அடக்கம். 

சமூக - சாதி, தொழில்கள், அமைப்பு

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில், முத்திரையர் சமூகத்தினர் பெரும்பாலும் உள்ளனர். மக்கள் தொகையில் அவர்களுக்கு  அடுத்த நிலையில் வெள்ளாளர் சமூகம், அதன்பிறகு முக்குலத்தோர், சிறுபான்மையினர் மற்றும் இதர பிரிவினர் உள்ளனர். கடைமடைப் பகுதி என்றழைக்கப்படும் பட்டுக் கோட்டையில் நெல்சாகுபடியும், தென்னை சாகுபடியும் முக்கிய வேளாண் தொழிலாகும்.

நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை இப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிரிடப்படுகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டையில் தென்னை  வணிக வளாகம், ரூபாய் 4 கோடி செலவில் கட்டப்பட்டது. இருந்தபோதிலும் தற்போது அது செயல்பாடின்றி உள்ளது.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

பட்டுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி செய்யப்பட்டது. இதுதவிர தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்:

பட்டுக்கோட்டையில்  புதை சாக்கடைத் திட்டம் அமைக்கக்கோரி பல  ஆண்டுகளாக போராட்டம் நடந்த சூழ்நிலையில் இதுவரை புதை சாக்கடைத் திட்டம் இப்பகுதியில் நிறைவேற்றப்படாத ஒன்றாக உள்ளது.

பட்டுக்கோட்டையின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு  பட்டுக்கோட்டையில் புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு அதற்கான இடம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படாமல் காலம்  தாழ்த்தப்பட்டு வருகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு:

பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வந்த மீட்டர் கேஜ் ரயில் பாதை பிராட்வே பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு, ரயில் வெள்ளோட்டம் விட்டு எல்லாம் சரியான பிறகும்,  70க்கும் மேற்பட்ட இடங்களில் கேட் கீப்பர்  வேண்டும் என்று சொல்லி காரைக்குடி - பட்டுக்கோட்டை வழியாக சென்னை செல்லும் ரயில்வே பணிகள் எந்தவித தகவலும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

ரயில் பயனாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக எம்பிக்கள் மத்திய ரயில்வே சேர்மனை சந்தித்தும் இன்னும் பணிகள்  தொடங்கப்படவில்லை. மீண்டும் ரயில் பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படுமா என்பது மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.  

பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் ஒரத்தநாடு வழியாக புதிய ரயில் பாதை அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு நிலம் அளக்கப்பட்டும் அத்திட்டம் நீண்ட நெடுங்காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

பட்டுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றிய சட்டப்பேரவைத் தொகுதியின் பல்வேறு  பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று நீர் கடலில் கலந்து வீணாகிறது. அதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்து விவசாயத்தைப் பெருக்க வழிவகை செய்ய வேண்டும்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்:

இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.சேகர், மதுக்கூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் என்.தண்டாயுதபாணி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் சட்டப்பேரவை தொகுதி ஒருங்கிணைப்பாளர் வை.முரளிகணேஷ் மற்றும் தமாக தரப்பில் என்.ஆர்.ரெங்கராஜன் போட்டியிடுவார் என்று தெரிகிறது. 

என்.ஆர்.ரெங்கராஜன் ஏற்கனவே 3 முறை இந்த பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர்(ஒருமுறை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக  இரண்டு முறை காங்கிரஸ் சார்பிலும்).

திமுக கூட்டணியில் இம்முறை திமுகவிற்கு கட்டாயம் இந்த தொகுதி  வேண்டுமென்று திமுகவினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, ஏனாதி பாலு உள்பட பலர் சீட்டு கேட்டு வரும் சூழ்நிலையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின்  வேட்பாளராக தாமரங்கோட்டை மகேந்திரனுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

அமமுக சார்பில் செண்டாங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் எல்.கோவிந்தராசு, மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.டி.எஸ்.செல்வம், முன்னாள் நகர் மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவகர்பாபு உள்ளிட்டோரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களை தவிர மற்ற கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இதுவரை நடந்து முடிந்த 15 தேர்தல்களில் ஆறு முறை இந்திய தேசிய  காங்கிரஸ் கட்சியும், நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகமும், தலா இரண்டு முறை திமுக மற்றும் பிரஜா சோசலிச  கட்சியும், தமாக ஒருமுறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்று உள்ளனர். 

கடந்தகால தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:

1952 நாடிமுத்துபிள்ளை (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி).
1957 ஆர்.சீனிவாசஅய்யர் (இந்திய தேசிய காங்கிரஸ்).
1962 வி.அருணாச்சலதேவர் (இந்திய தேசிய காங்கிரஸ்).
1967 ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிச கட்சி).
1971  ஏ. ஆர். மாரிமுத்து (பிரஜா சோசலிச கட்சி).
1977  ஏ. ஆர். மாரிமுத்து (இந்திய தேசிய காங்கிரஸ்).
1980எஸ்.டி.சோமசுந்தரம் (அதிமுக)
1984 பி.என்.இராமச்சந்திரன் (அதிமுக)
1989 கா. அண்ணாதுரை (திமுக).
1991 கே.பாலசுப்பிரமணியன் (அதிமுக)
1996 பி.பாலசுப்பிரமணியன் (திமுக)
2001 என். ஆர்.ரெங்கராஜன் (தமாகா)
2006 என். ஆர்.ரெங்கராஜன் (இந்திய தேசிய காங்கிரஸ்)
2011 என். ஆர்.ரெங்கராஜன் (இந்திய தேசிய காங்கிரஸ்)
2016 சி. வி. சேகர் (அதிமுக) 

1996க்கு பிறகு 4 சட்டப்பேரவை தேர்தலில் இத்தொகுதியை திமுக தனது கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கவரும் வேளையில் இந்தாண்டு திமுக தனது சொந்த வேட்பாளர்களை களம் இறக்க வேண்டும் என அக்கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர். அதேவேளையில் அதிமுக கூட்டணியில் தாமாகவுக்கும், பாஜகவுக்கும் தொகுதியை யார் கேட்டுப்பெறுவது என்பதில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்காளர்களின் எண்ணிக்கை

மொத்த வாக்காளர்கள்: 2,45,258
ஆண்கள்: 1,17,605
பெண்கள்: 1,27,626
மூன்றாவது பாலினத்தவர்: 27                   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT