தொகுதிகள்

கீழ்பெண்ணாத்தூர்: தொகுதியை தக்கவைக்குமா திமுக?

சா. சரவணப்பெருமாள்

திருவண்ணாமலை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நகருக்கு மிக அருகில் உள்ள தொகுதி என்ற பெருமை கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்ளது. 1952 முதல் 2011 வரை திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகள் இருந்தன. 2011ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது கீழ்பென்னாத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

இடம்பெற்றுள்ள பகுதிகள்:

கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம் என 2 பேரூராட்சிகள், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 கிராம ஊராட்சிகள், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 45 கிராம ஊராட்சிகள், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தின் 47 ஊராட்சிகளில் துர்க்கைநம்மியந்தல் ஊராட்சியைத் தவிர மீதமுள்ள 46 கிராம ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

பிரதான தொழில்:

தொகுதி மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் திகழ்கிறது. குறிப்பிடும்படியான பிரதான தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை. கீழ்பெண்ணாத்தூர் , வேட்டவலம் பகுதிகளில் உள்ள சிறு, சிறு வணிக நிறுவனங்களில் மிக மிகக் குறைந்த நபர்களே வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிகப்படியாக உள்ளனர். அடுத்தபடியாக தலித், ரெட்டியார், நாயுடு, யாதவர் சமூகத்தினர் வசிக்கின்றனர்.

வென்ற வேட்பாளர்கள்:

கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு முதல் முதலாக 2011ல் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.அரங்கநாதன் 83 ஆயிரத்து 663 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தொகுதியின் முதல் எம்எல்ஏ என்ற அந்தஸ்தைப் பெற்றார். இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி 79 ஆயிரத்து 582 வாக்குகள் எடுத்து தோல்வியடைந்தார்.

2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.பிச்சாண்டி 99 ஆயிரத்து 70 வாக்குகள் எடுத்து வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.செல்வமணி 64,404 வாக்குகளும், பாமக வேட்பாளர் ஜி.எதிரொலிமணியன் 20,737 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.ஜோதி 4,613 வாக்குகளும் எடுத்தனர். தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு சமபலம் உள்ளது.

நிறைவேற்றப்பட்டத் திட்டங்கள்:

தொகுதிக்குள்பட்ட நாயுடுமங்கலம் கிராமத்தில் 2 பயணிகள் நிழற்குடைகள், கீழ்பென்னாத்தூரில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கழிக்குளம், வேடநத்தம் பகுதிகளில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், வழுதலங்குணம் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் ஆகியவை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. நாரியமங்கலம், கழிக்குளம், வேடநத்தம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

நிறைவேற்றப்படாதத் திட்டங்கள்:

திண்டிவனத்தில் இருந்து கீழ்பெண்ணாத்தூர் வழியாக கிருஷ்ணகிரி வரை செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கீழ்பென்னாத்தூரில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்று மட்டுமே உள்ளது. வேறு எந்த அரசு கலைக் கல்லூரியோ, பொறியியல் கல்லூரிகளோ இல்லை. எனவே, கிராமப்புற மாணவ-மாணவிகளின் நலன் கருதி அரசு பொறியியல் கல்லூரியை இந்தத் தொகுதியில் தொடங்க வேண்டும்.

திருவண்ணாமலை - விழுப்புரம் மாவட்ட ஏரிகளுக்கு சாத்தனூர் அணையில் இருந்து நந்தன் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள் நிறைந்த இந்தத் தொகுதியில் தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டும். கீழ்பெண்ணாத்தூர் - வேட்டவலம் பகுதிகளை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும்.

கீழ்பென்னாத்தூரில் மூடப்பட்டுள்ள உழவர் சந்தையை மீண்டும் திறக்க வேண்டும். தொகுதியின் மிகப்பெரிய ஊராட்சியான மங்கலம் ஊராட்சியை பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பன போன்றவை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

2021-ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 722 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 317 பெண் வாக்காளர்கள், இதர பாலின வாக்காளர்கள் 8 பேர் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 47 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தக்கவைக்குமா திமுக

தொகுதி உருவானபிறகு 2011-ல் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும், இரண்டாவதாக 2016-ல் நடந்த தேர்தலில் திமுகவும் இந்தத் தொகுதியை கைப்பற்றின. வரும் தேர்தலில் திமுக சார்பில் தமிழக முன்னாள் அமைச்சரும், இப்போதைய எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட முக்கியப் பிரமுகர்கள் சிலர் விருப்பமனு அளித்துள்ளனர். இதற்கிடையே கூட்டணியில் உள்ள பாமகவும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியை கேட்டு வருகிறது. கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், அதிமுகவே நேரடியாகப் போட்டியிட்டாலும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதியை தக்கவைப்பதில் கடும் போட்டி இருக்கும் என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT