தொகுதிகள்

கன்னியாகுமரி: அதிமுக - திமுக இடையே கடும் போட்டி

தி. ராமகிருஷ்ணன்

தொகுதியின் சிறப்பு: தமிழகத்தின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி. முக்கடலும் சங்கமிக்கும் இந்த தொகுதி சர்வதேச சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

இந்த தொகுதியை பொருத்தவரை, விவசாயிகள், மீனவர்கள் அதிக அளவில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் அதிக பரப்பளவைக் கொண்ட தொகுதியாகவும், அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகவும் இத்தொகுதி விளங்குகிறது.

அகஸ்தீசுவரம், தோவாளை ஊராட்சி ஒன்றிய பகுதிகள் தவிர ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சில பகுதிகளும் கன்னியாகுமரி தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

இத்தொகுதியின் அடையாளமாக கடலின் நடுவே அமையப்பெற்ற விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.

கடந்த  தேர்தல்கள்: கன்னியாகுமரி தொகுதியில் கடந்த 1957 ஆம் ஆண்டு தொடங்கி 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 14 தேர்தல்களில் 1957ல் சுயேச்சை வேட்பாளரான டி.எஸ்.ராமசாமிபிள்ளை வெற்றி பெற்றார்.

1962, 1967 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும், 1977, 1980, 1984, 1991, 2001, 2011 ஆகிய 6 தேர்தல்களில் அதிமுகவும், 1971, 1989, 1996, 2006, 2016 ஆகிய 5 தேர்தல்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

வாக்காளர் விவரம்: இத்தொகுதியில் தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 982 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 347 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 104 பேர் என மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர்.

அரசியல் நிலவரம்: கட்சிகளின் நிலவரத்தை பொருத்தவரை அதிமுக, திமுக சமபலத்தில் இருந்தாலும், தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியை பொருத்தவரை இத்தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் சார்ந்த கட்சியே ஆட்சியமைக்கும் என்ற சென்டிமென்ட் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த
2016 தேர்தலில் இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ். ஆஸ்டின் வெற்றி பெற்று சென்டிமென்ட் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி
வைத்தார்.

இத்தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் எஸ்.ஆஸ்டின், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம், பாஜக சார்பில் நாகர்கோவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.மீனாதேவ், தேமுதிக சார்பில்
தா.ஆதிலிங்கபெருமாள் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆஸ்டின் 89,023 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது பதிவான வாக்குகள் அடிப்படையில் 42.41 சதவீதமாகும்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட என்.தளவாய்சுந்தரம் 83,111 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது பதிவான வாக்குகள் அடிப்படையில் 39.59 சதவீதமாகும். 5,912 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றிருந்தது. பாஜக வேட்பாளர் எம்.மீனாதேவ் 24,638 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் தா.ஆதிலிங்கபெருமாள் 6,914 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

அதிமுக சார்பில் இம்முறையும் முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.  கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தளவாய்சுந்தரம், அரசு நலத்திட்டங்கள் மட்டுமல்லாது, தனது சொந்த செலவில் கரோனா  காலத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது, மீனவர்கள் வாக்குகளை குறிவைத்து அவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியது என தீவிர
களப்பணியாற்றி வருகிறார்.

மேலும், இவர் ஏற்கெனவே அமைச்சராக இருந்த காலகட்டத்திலும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நேரத்திலும் மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் இவருக்கு கை கொடுக்கும் என்று அதிமுகவினர் நம்புகின்றனர்.

திமுகவை பொருத்தவரை தற்போதைய எம்எல்ஏவான கிறிஸ்தவ நாடார் வேட்பாளரான எஸ்.ஆஸ்டினுக்கும், இந்து நாடார் வேட்பாளரான அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலர் என்.தாமரைபாரதிக்கும் இடையே டிக்கெட் பெறுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது.

கன்னியாகுமரி தொகுதியைப் பொருத்தவரை ஏற்கெனவே இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எம்.அம்மமுத்துபிள்ளை, என்.தளவாய்சுந்தரம் ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.

திமுகவைச் சேர்ந்த என்.சுரேஷ்ராஜன் இத்தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்துள்ளார். குறிப்பாக தொகுதியில் அதிகமாக உள்ள நாடார் சமுதாய வாக்குகளை குறிவைத்து வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வெற்றி எளிதாகும் என்பது கட்சிகளின் கணிப்பாக உள்ளது. மேலும், பிள்ளைமார், மீனவர் சமுதாய வாக்குகளும் அதிகமாக உள்ளதால் வேட்பாளர்களை இறுதி செய்வதில் முக்கியக் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT