தொகுதிகள்

செஞ்சி: திமுகவுடன் மோதுவது யார்?

ஜெ.பாபு

செஞ்சி வரலாறு

மராட்டிய மன்னர் சத்ரபதிசிவாஜி, ஒளரங்கசீப், நாயக்க மன்னர்கள், மாவீரன் தேசிங்குராஜன் என மன்னர்கள் ஆதிக்கம் செலுத்திய விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புகளோடு புகழ்பெற்ற தளமாக விளங்கி வருகிறது செஞ்சிக்கோட்டை.

தொகுதி நில அமைப்பு

தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் மேல்மலையனூர் தொகுதியை  இணைத்து சீரமைக்கப்பட்டு செஞ்சி தொகுதி உருவாக்கப்பட்டது.  இத்தொகுதியில் அனந்தபுரம்,  செஞ்சி ஆகிய 2 பேரூராட்சிகள் உள்ளது.செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 60 கிராம ஊராட்சிகள், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 கிராம  ஊராட்சிகள்  உள்ளன.  மேலும் செஞ்சி தாலுக்காவில் இருந்த மேல்மலையனூரை பிரித்து தனி தாலுகாவாக செயல்பட்டு வருகிறது. 

வரலாற்று சிறப்பு மிக்க இந்த செஞ்சி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மீண்டும் தற்போது திமுக போட்டியிடபோவது உறுதியாகிவிட்ட நிலையில் அதனை எதிர்த்துக் களம் காணப்போவது அதிமுகவா அல்லது பாமகவா எனக் கேள்வி எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் மேல்மலையனூர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சியாக இது நாள் வரை இருந்து வந்தது. ஆனால் மேல்மலையனூர் தொகுதி கலைக்கப்பட்ட பிறகு நடைமுறை மாறியது.

தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை: ஆண்கள் 1,28,545, பெண்கள் 1,31,577, திருநங்கைகள் 37 பேர் என மொத்தமாக  2,60,159  வாக்காளர்கள் உள்ளனர்.  மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 304. கரோனா தொற்று நடவடிக்கை காரணமாக அதிக வாக்காளர்கள் உள்ள இடங்களை இரண்டாக பிரித்து தற்போது கூடுதலாக 59 வாக்குச் சாவடி மையங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

சாதி, சமூகம், தொழில்கள்

வன்னியர்கள் 35 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 30 சதவீதம் மற்றும் முதலியார்கள், நயினார்கள், யாதவர்கள், நாயக்கர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இங்கு உள்ளனர். வன்னியர், ஆதிதிராவிடர் அல்லாத பிற சமூக வாக்குகளை அதிகம் பெறுவோர்களே இத்தொகுதியில் இதுவரை வெற்றி பெற்று வருகின்றனர்.

வெற்றி பெற்றவா்கள் விவரம்:

1967இல் முனுசாமி(திமுக), 1971இல் சகாதேவன்(திமுக), 1977, 1980, 1989இல் செஞ்சி ராமச்சந்திரன்(திமுக), 1996இல் நடராஜன்(திமுக), 2006இல் கண்ணன் (திமுக), 2016இல் செஞ்சி மஸ்தான் என 8 முறை திமுக இத்தொகுதியை கைப்பற்றியுள்ளது.

1984இல் திண்டிவனம் முருகானந்தம் (காங்கிரஸ்), 1981இல் கடலூர் ராமதாஸ் (காங்கிரஸ்) என இரண்டு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2001இல் ஏழுமலை (அதிமுக), 2011இல் வந்தவாசி கணேஷ்குமார் (பாமக) வெற்றி பெற்றுள்ளனர்.

கட்சிகளின் நிலவரம்:

திமுகவை பொருத்தவரை மீண்டும் இந்த தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு களத்தில் இறங்கி உள்ளனர். தற்போது எம்எல்ஏவாக இருக்கும் செஞ்சி மஸ்தான் தொகுதியை நன்கு அறிந்தவர். இவர் கால்படாத கிராமங்களே இல்லை எனக் கூறலாம்.

திருமணம், மஞ்சள் நீர் சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளிலும் அவர்களின் இல்லத்துக்கே செல்வது, கிராமத்தில் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, நியாய விலை  கடைகள், அங்கன்வாடி மையங்கள், சமுதாய கூடங்கள், நியாயவிலை கடைகள், கரோனா காலத்தில் மக்களுக்கு செய்த உதவிகள் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்து தன்னால் முடிந்த அளவுக்கு வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்தது என கூடுதல் வாய்ப்புடன் காத்திருக்கிறார்.

கடந்த 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளரான செஞ்சி ஒன்றியச் செயலர் தடாகம் கிராமத்தைச் சேர்ந்த அ.கோவிந்தசாமி தோல்வியைத் தழுவினார். செஞ்சி மஸ்தான் பெற்ற வாக்குகள் 88,440. கோவிந்தசாமி பெற்ற வாக்குகள் 66383. மஸ்தான்  22,057 வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

செஞ்சி தொகுதியில் மஸ்தானுக்கு வாய்ப்பு உறுதி என்றாலும், செஞ்சி ஒன்றிய செயலர் முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வவன், ஆர்.விஜயகுமார், செஞ்சி சிவா, க.ஆனந்த், எல்.பி.நெடுஞ்செழியன், கே.எஸ்.மொக்தியார் அலி என திமுகவில் விருப்பமனு அளித்தோர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. தற்போது மீண்டும் அதிமுகவைச் சேர்ந்த கோவிந்தசாமி போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

இவரை தவிர கிழக்கு ஒன்றியச் செயலர் க.சோழன், முன்னாள் ஆரணி எம்பி. ஏழுமலை மகன் டாக்டர் யோகேஸ்வரன், செஞ்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் க.கதிரவன், மாவட்ட அவைத் தலைவர் கு.கண்ணன் உள்ளிட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாமகவை பொருத்தவரை கணேஷ்குமார் கடந்த 2011இல் திமுக கூட்டணியில் வெற்றி பெற்று 2016இல் தனித்து போட்டியிட்டு 2,8515 வாக்குகளை பெற்றார்.  மதிமுக ஏ.கே.மணி 10,672 வாக்குகளைப் பெற்றார். பாஜக ராஜேந்திரன் 1443 வாக்குகளை மட்டுமே பெற்றார். பாமகவுக்கு எப்போதுமே செஞ்சி மீது ஒரு கண் உள்ளது. இதற்கு காரணம் வன்னியர் சங்க போராட்டத்தில் டாக்டர் ராமதாஸுடன் செஞ்சி பகுதியில் இருந்து பங்கேற்றவர்கள் அதிகம். இதைத்தவிர மேல்லமலையனூர் தொகுதியாக இருக்கும்போது பாமக சார்பில் பா.செந்தமிழ்ச்செல்வன், 2011இல் கணேஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இருந்தாலும் தற்போது செஞ்சி தொகுதியை பாமக விரும்பவில்லை என தெரிகிறது. உத்தேச பட்டியலில் செஞ்சி பெயர் இல்லை என பேசப்படுகிறது. இருந்தாலும் இரண்டாம் கட்ட பட்டியலில் பாமக செஞ்சி தொகுதியை குறி வைத்துள்ளது. செஞ்சி தொகுதியில் செல்வாக்கு மிகுந்த வேட்பாளரை களத்தில் இறக்க பாமக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் வலுவோடும் பலத்தோடும் களம் காணும் பாமகவும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன.

கோரிக்கைகள்:

செஞ்சி பகுதியில் தொழிற்சாலைகளோ, அரசு கல்லூரிகளோ இல்லை.
50 ஆண்டுகால ஆட்சியில் திமுகவும், அதிமுகவும் சுழற்சி முறையில் ஆட்சி செய்து வந்தபோதும், செஞ்சி தொகுதியில் சொல்லும் படி எந்த திட்டங்களையும் கொண்டுவரவில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகு தற்போதுதான் நந்தன் கால்வாய் சீரமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

செஞ்சிக்கோட்டையை சுற்றுலா மையமாக்க எந்த அரசும் முன்வரவில்லை. செஞ்சி தேசிங்கு ராஜனுக்கு சிலை வைக்கும் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.தேசிங்கு நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்கவில்லை. கடந்த 2008இல் தொடங்கப்பட்ட திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்லும் புதிய ரயில்பாதை திட்டம் பாலம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ரயில் கனவு தகர்ந்து போனது.

மழைக்காலங்களில் மட்டுமே வரும் திருக்கோயிலூர் தென்பெண்ணையாறு குடி நீர் திட்டத்தை கோடை காலத்திலும் முழுமையாக செயல்படுத்தி சீரமைத்திட வேண்டும். திண்டிவனம் கிருஷ்ணகிரி விரிவாக்கம் பணி கடந்த 2002இல் துவக்கப்பட்டு பின்னர் பாதியில் நின்று மீண்டும் டெண்டர் விடப்பட்டது.

தற்போது சாலை சில இடங்களில் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியில்லாமல் உள்ளது. மந்த கதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப்பணியை துரிதப்படுத்த அரசு முயற்சி செய்ய வேண்டும். செஞ்சியை மையமாக வைத்து ஒரு அரசு கலைக் கல்லூரி அல்லது நர்சிங் கல்லூரி, தொழிற்கல்வி ஆகியவற்றை தொடங்க வேண்டும். 

இதன்மூலம் மிகவும் பின்தங்கிய பகுதியான செஞ்சி பகுதியில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வித்தரம் மேம்படும். செஞ்சி பகுதியில் சொல்லும்படியான தொழிற்சாலை அமையவில்லை. விவசாயம் சார்ந்த பனை தொழிற்சாலை, பால் பதப்படுத்தும் மையம் ஆகியவற்றை அரசு நிறுவிட வேண்டும்.

செஞ்சி நகரத்தில் அரசு கிளை நூலகத்திற்கு இடம் இருந்தும் புதிய கட்டடத்தை கட்ட அரசு முயற்சி செய்யவில்லை வாடகை கட்டத்தில்தான் இதுநாள் இயங்கி வருகிறது. கடந்த முறை அதிமுக, திமுக, பாமக, பாஜக என ஐம்முனை போட்டியில் திமுக வெற்றி பெற்றது. இந்த முறை இருமுனை போட்டிதான் இதுவரை உள்ளது.

செஞ்சி தொகுதியை பொறுத்தவவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள்,சிறுபான்மை கட்சியினர் என பலமுள்ள கட்சியாக இருக்கின்றது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இருப்பதால் இரண்டு அணிகளும் சமமான பலத்தோடு களத்தில் உள்ளன.

திமுகவை பொருத்தவரை செஞ்சி மஸ்தான் தான் வேட்பாளர் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில், எதிர் முனையில் போட்டியிடப் போவது அதிமுகவா அல்லது பாமகவா என்பதற்கான  விடை இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்.  பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் செஞ்சி தொகுதி மக்களின் குறைகளை போக்க வெற்றிவாகை சூடி மக்கள் முன்வருபவர்கள் யார் என்பது வரும் சட்டமன்ற தேர்தலில் தெரிந்து விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

SCROLL FOR NEXT