தொகுதிகள்

விளவங்கோடு: காங்கிரஸ், பாஜகவுக்கு சாதகமான தொகுதி

சி. சுரேஷ்குமார்

தமிழகத்தின் தென் எல்லையில் கேரள மாநில எல்லையோர தொகுதியாக உள்ளது விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி. இத்தொகுதியில் தமிழும், மலையாள மொழியும் பேச்சு வழக்கில் உள்ளது.

தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகள்

குமரி மாவட்டத்தின் 2-ஆவது வர்த்தக நகரான மார்த்தாண்டம் இந்த தொகுதிக்குள்தான் அமைந்துள்ளது. இதே போல்,  குழித்துறை, நகராட்சி, களியக்காவிளை, உண்ணாமலைக்கடை, நல்லூர், பாகோடு, அருமனை, இடைக்கோடு, பளுகல், கடையாலுமூடு பேரூராட்சிகளையும், கொல்லஞ்சி, நட்டாலம், விளாத்துறை, மாங்கோடு, தேவிகோடு, புலியூர்சாலை, மஞ்சாலுமூடு, வெள்ளாங்கோடு, மலையடி, வன்னியூர், மருதங்கோடு, விளவங்கோடு உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இத்தொகுதி உள்ளது.

கடந்த தேர்தல்கள்

குமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்து தாய்தமிழகத்துடன் 1956 ஆம் ஆண்டு இணைந்த பின்னர், இத்தொகுதியில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். இத்தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிக் கனியை பறிக்கவில்லை.

1957 ஆம் ஆண்டு முதல் நடந்த 14 தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சியும், 5 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 1957, 1962 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் வில்லியம் வெற்றிபெற்றார். 1967, 1971 ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொன்னப்பநாடார் வெற்றிபெற்றார். 1977 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஞானசிகாமணியும், 1980 ஆம் ஆண்டில் அக் கட்சியைச் சேர்ந்த டி. மணியும் வெற்றிபெற்றனர்.

தொடர்ந்து 1984, 1989, 1991 ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் எம். சுந்தரதாஸ் வெற்றிபெற்றார். 1996, 2001 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி. மணியும், 2006 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி. ஜான்ஜோசப்பும் வெற்றி பெற்றனர்.

2011 ஆம் ஆண்டு தேர்தலில் 62,898 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் எஸ். விஜயதரணி, 2016 ஆம் ஆண்டில் 68,789 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இத் தொகுதியில் 2006 ல் பாஜக 12,553 வாக்குகள் பெற்ற நிலையில் 2011 இல் 37,763 வாக்குகளும், 2016 ல் 35,646 வாக்குகளும் பெற்றது. 2011 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 39,109 வாக்குகளும், 2016 இல் 25,821 வாக்குகளும் பெற்றன. 2016 இல் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 24,801 வாக்குகளை பெற்றார்.

வாக்காளர் விவரம்

ஆண்கள்: 1,21,339
பெண்கள்: 1,26,129 
மூன்றாம் பாலினத்தவர்: 27
மொத்தம் : 2,47,495

சமூக நிலவரம், தொழில்

இந்த தொகுதியில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 47 சதவீதம் பேர் உள்ளனர், இவர்களைத் தவிர நாயர், வெள்ளாளர், பணிக்கர், செட்டியார், ஆதிவாசிகளும் வசிக்கிறார்கள். இதே போல் கணிசமான அளவில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் வசித்து வருகின்றனர். இத்தொகுதியின் பிரதான தொழில்களாக ரப்பர் சாகுபடியும், தேனீ வளர்ப்பும் உள்ளது. 

நிறைவேற்றப்பட வேண்டியவை

விளவங்கோடு தொகுதியில் ரப்பர் தொழிற்சாலை, ரப்பர் ஆராய்ச்சி மையம் மற்றும் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் போன்ற  கோரிக்கைகள் இப்பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகவே தொடர்கிறது. மேலும் நெய்யாறு இடதுகரை கால்வாய் பிரச்சனைக்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

இதேபோல் இத்தொகுதிக்குள்பட்ட பல கிராமங்களில் போக்குவரத்து வசதி சரியாக செய்யப்படவில்லை. பழுதான சாலைகளை சீரமைத்து வாகனங்கள் செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும், கால்வாய்களை தூர்வாரி கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும், குளங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இத்தொகுதி தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. தற்போதைய எம்எல்ஏ எஸ். விஜயதரணி தொகுதி பக்கம் வருவது குறைவு என்பதால் அவருக்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

ஆனால் வரும் தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட எஸ். விஜயதரணி எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் மருத்துவர் சாமுவேல் ஜார்ஜ், விளவங்கோடு ஊராட்சித் தலைவர் ஜி.பி. லைலா ரவிசங்கர், கட்சியின் ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவர் ஆர். ஸ்டூவர்ட், காங்கிரஸ் சேவாதள மாவட்டத் தலைவர் சி. ஜோசப் தயாசிங் உள்ளிட்டோர் கட்சித் தலைமையிடம் வாய்ப்பு கேட்டுள்ள நிலையில் சாமுவேல் ஜார்ஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதப்படுகிறது. 

மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இந்த தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தி கேட்டுள்ளது. அவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் இக்கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி அல்லது முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ் ஆகிய 2 பேரில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

இதேபோல் பாஜக சார்பில் குமரி மாவட்டத் தலைவர் சி. தர்மராஜ், மேல்புறம் ஒன்றிய பாஜக தலைவர் சி.எஸ். சேகர், ஒன்றிய பொதுச் செயலர் எஸ்.ஆர். சரவணவாஸ் நாராயணன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் சி.எம். விஜயபிரசாத் உள்ளிட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் கட்சியின் மாவட்ட தலைவர் சி. தர்மராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற நிலையே அதிகமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

SCROLL FOR NEXT