தொகுதிகள்

கூடலூர்(தனி): சமபலத்தில் அதிமுக - திமுக

தினமணி

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கேரளம், கர்நாடக மாநில எல்லையில் அமைந்திருக்கிறது கூடலூர் தொகுதி. பொது தொகுதியாக இருந்த கூடலூர், தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு தனித் தொகுதியாக மாறியிருக்கிறது.

தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகள்

பந்தலூர் வட்டம், கூடலூர் வட்டம், உதகை வட்டத்தின் மசினகுடி ஊராட்சி, நடுவட்டம் பேரூராட்சிப் பகுதிகள்.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 92,108
பெண்கள் - 96,495
மொத்தம் - 1,88,603

தொழில், சமூக நிலவரம்

கூடலூர் தொகுதியில் தேயிலை விவசாயமே முக்கியத் தொழிலாகும். தேயிலை தவிர, காபி, வாசனை திரவியப் பயிர்களான ஏலக்காய், மிளகு, கிராம்பு, இஞ்சி உள்ளிட்ட பயிர்களும் இங்கு விளைகின்றன. சமவெளிப் பகுதியாகவும் இருப்பதால் நெல், வாழை உள்ளிட்டவையும் விளைகின்றன. தமிழக அரசின் டேன்டீ தேயிலைத் தோட்டங்களிலும், தனியார் எஸ்டேட்டுகள், தேயிலை, காபித் தோட்டங்களிலும் தொகுதியின் பெரும்பாலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இத்தொகுதியைப் பொருத்தமட்டில் தாயகம் திரும்பிய இலங்கைத் தமிழர்களே அதிகளவில் உள்ளனர். ஈழுவா, தியா வகுப்பினர், ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், பழங்குடியினர், மலையாளிகள், இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர்.

கடந்த தேர்தல்கள்

கூடலூர் தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக மூன்று முறையும், காங்கிரஸ் இரண்டு முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கூடலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர்களே நீலகிரி மாவட்டத்தின் சார்பில் தமிழக அமைச்சரவை பட்டியலிலும் இதுவரை இடம் பெற்றுள்ளனர்.

இதுவரை வென்றவர்கள்

1967 - சி.நஞ்சன் (காங்கிரஸ்)
1971 - பொம்மன் (சுதந்திரா கட்சி)
1977 - கே.உச்சிகவுடர் (திமுக)
1984 - கே.உச்சிகவுடர் (அதிமுக)
1989 - எம்.கே.கரீம் (காங்கிரஸ்)
1991 - கே.ஆர்.ராஜூ (அதிமுக)
1996 - பா.மு.முபாரக் (திமுக)
2001- அ.மில்லர் (அதிமுக)
2006- கா.ராமச்சந்திரன் (திமுக)
2011 - மு.திராவிட மணி (திமுக)
2016 - மு.திராவிட மணி (திமுக)

2016 தேர்தல் நிலவரம்

மு.திராவிடமணி (திமுக) - 62,128
எஸ்.கலைச்செல்வன் (அதிமுக) - 48,749
வாக்கு வித்தியாசம் - 13,379

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கூடலூரின் முக்கிய சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. செக்சன் 17 நிலத்துக்குள்பட்ட சில பகுதிகளில் சாலை, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

தீர்க்கப்படாத மக்கள் பிரச்னைகள்

தமிழகத்தின் கூடலூரிலும் இதையொட்டி கேரளத்திலும் நிலங்களை வைத்திருந்த ஜமீன்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இரு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்ட சூழலில், கேரள அரசு அவற்றில் பாதி நிலத்தை அதை அனுபவித்து வந்தவர்களுக்கும் மீதி நிலத்தை காப்புக்காடாகவும் அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் இதுபோன்ற முடிவு எடுக்கப்படாததால் இன்னமும் பட்டா வழங்கப்படாமல் வனத் துறையினரின் வசமே உள்ளது.

செக்சன் 17 எனப்படும் இந்த பிரச்னையை தீர்த்துவிடுவேன் என தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினர் திராவிட மணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளித்திருந்தாலும் இன்னமும் அது தீர்க்கப்படவில்லை. இதனால் சுமார் 25 ஆயிரம் பேர் பட்டா இல்லாமல் உள்ளனர். இவர்களில் 10 ஆயிரம் குடும்பங்கள் இன்னும் மின் இணைப்பு இல்லாமல் உள்ளனர். 

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலப் பிரச்னையால் கூடலூர் பகுதியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது எனலாம். அதேபோல, கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு தமிழகத்தின் நுழைவாயிலாக இருந்தாலும் இங்கு சுற்றுலா மேம்பாட்டிற்காக எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கூடலூரிலிருந்து சிறியூர் வழியாக கோவைக்கு செல்லும் சாலைக்கு வனத் துறையின் ஒப்புதல் கிடைக்காதது, பாண்டியாறு-புன்னம்புழா நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த முடியாதது,  மனித - விலங்கு மோதலால் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகளும் இத்தொகுதியின் வளர்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது எனலாம். அதேபோல, தொகுதி மக்கள் தங்களின் மருத்துவ தேவைகளுக்கு கேரளத்தையே நாடியிருக்கும் நிலை உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

அதிக முறை திமுக வென்ற தொகுதிகளில் கூடலூரும் ஒன்று. 2021 தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. மு.திராவிட மணியே மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் திராவிட மணியைத் தவிர ஒன்றியச் செயலர்கள் ராஜா, தங்கராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் 20 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர்.

அதிமுகவைப் பொருத்தவரை கூடலூரை கைப்பற்றுவதற்கு மீண்டும் முயற்சிக்கும். அதிமுக தரப்பில் வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் ஜெயசீலன், ஒன்றியச் செயலர் ராஜா தங்கவேலு உள்ளிட்ட 25 பேர் விருப்பம் தெரிவித்து காத்திருக்கின்றனர். ஆளுங்கட்சி என்பது அதிமுகவின் பலம் என்றால், ஏற்கெனவே குறிப்பிடும்படியான வாக்கு வங்கியை வைத்திருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவை திமுகவின் பலமாக உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT