தொகுதிகள்

அவிநாசி (தனி): அதிமுக - இந்திய கம்யூ. போட்டியிட வாய்ப்பு

ஆா். கதிரவன்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதி கடந்த 1957 இல் உருவாக்கப்பட்டது. ஆதி திராவிடர்கள் அதிகம் வசிப்பதால் 1977 தேர்தலில் இருந்து தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு நாட்டில் உள்ள பிரபல சிவாலயங்களான அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்கள் இந்தத் தொகுதியில் உள்ளன.

தொகுதியில் உள்ள பகுதிகள்

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 31 ஊராட்சிகளும், அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 21 ஊராட்சிகளும் என மொத்தம் 52 ஊராட்சிகளும், அவிநாசி, திருமுருகன்பூண்டி, அன்னூர் ஆகிய 3 பேரூராட்சிகளும் இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன. இதில் அவிநாசி பேரூராட்சி திருப்பூர் மாவட்டத்திலும், அன்னூர் பேரூராட்சி கோவை மாவட்டத்திலும் உள்ளது. மேலும் அவிநாசி தொகுதி நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்டது.

வாக்காளர் விவரம்

ஆண்கள்- 1,33,498
பெண்கள்- 1,39,805
மூன்றாம் பாலினம்- 1
மொத்தம்- 2,73,304

தொழில், சமூக நிலவரம்

அவிநாசி தொகுதியில் விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளது. இதையடுத்து அவிநாசி ஊராட்சி பகுதிகளில் அதிக அளவு விசைத்தறித் தொழிலும், திருப்பூருக்கு அருகில் இருப்பதால் அண்மைக் காலமாக பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் இங்கும் அதிகரித்து வருகின்றன.

இதுதவிர விவசாயம் சார்ந்த மோட்டார் பம்ப் உற்பத்தி, விசைத்தறி, பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், ஜவுளி உற்பத்தி ஆலைகள், நூற்பாலைகள் உள்ளன. அன்னூர் ஊராட்சி பகுதிகளில் விசைத்தறி, உருக்காலைகள், எந்திரப் பணிமனைகள், நூல் மில்கள் உள்ளன.  கொங்கு நாட்டின் ஏழு பிரசித்தி பெற்ற கோயில்களில் இடம் பெற்றுள்ள

அவிநாசி கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி முயங்கு பூண்முலை வள்ளியம்மை உடனமர் திருமுருகநாத சுவாமி கோயில் என இரு சிறப்பு வாய்ந்த கோயில்கள் இங்கு உள்ளன.

அதேபோல அன்னூரில் மண்ணீஸ்வரர் கோயில் உள்ளது.
 அவிநாசி வட்டாரத்தில் விவசாயம், விசைத்தறி, நூல்மில், பம்ப் செட் உற்பத்தி, பனியன் உற்பத்தி, சைசிங் ஆகியவை முக்கியத் தொழில்களாக உள்ளன. அவிநாசி, திருமுருகன்பூண்டியில் சிற்பக்கலைத் தொழில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிகப்படியாக ஆதி திராவிடர்களும், அடுத்தபடியாக கொங்கு வேளாள கவுண்டர்கள், நாயக்கர், முதலியார், செட்டியார் உள்ளிட்ட வகுப்பினர் வசிக்கின்றனர்.

கடந்த தேர்தல்கள்

இதுவரை நடைபெற்றுள்ள 14 தேர்தல்களில் அதிமுக 7 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், திமுக, கம்யூனிஸ்ட், சுயேச்சை, சுதந்திரா கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

1957 கே. மாரப்ப கவுண்டர் - காங்கிரஸ்
1962 கே.மாரப்ப கவுண்டர் - காங்கிரஸ்
1967 ஆர்.கே. கவுண்டர் - சுதந்திரா கட்சி
1971  பி.ஓ.பெரியசாமி -  சுயேச்சை 
1977  எஸ்.என்.பழனிசாமி - காங்கிரஸ்
1980 எம்.ஆறுமுகம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1984  பி.லட்சுமி - அதிமுக
1989 ஆர்.அண்ணாநம்பி - அதிமுக (ஜெ) 
1991 எம்.சீனியம்மாள் - அதிமுக
1996  ஜி.இளங்கோ -  திமுக
2001 எஸ்.மகாலிங்கம்  - அதிமுக
2006 ஆர்.பிரேமா- அதிமுக
2011 ஏ.ஏ.கருப்புசாமி- அதிமுக

2016 தேர்தல்

பி.தனபால் (அதிமுக) - 93,366
இ.ஆனந்தன் (திமுக) - 62,692
வித்தியாசம்- 30,674

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

அவிநாசி சுற்றுப்புற வட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்த அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அவிநாசியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதியில் சாலைப் பணிகள், சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. அன்னூர், அவிநாசி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தனித்தனியாக கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, சேவூரை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்றியம் அமைத்த வேண்டும். சேவூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்பது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல் விசைத்தறி தொழிற் பூங்கா அமைத்தல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் வண்டிப்பேட்டை நிலத்தை மீட்பது, நகரப் பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது, அறுவை சிகிச்சை செய்யப்படும் அளவுக்கு அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

திருமுருகன்பூண்டியில் சிற்பக் கலைக் கூடம் அமைக்க வேண்டும். புதுப்பாளையம், கோதபாளையம் குளங்களில் உள்ள மான்கள், மயில் உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாக்கவும், வன விலங்குகளால் வேளாண் பயிர்கள் சேதமடையாமல் தடுக்கவும் சரணாலயம் அமைக்க வேண்டும்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் கூலி உயர்வு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளும் மக்களிடம் உள்ளன.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது சோமனூர் வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியபடி, தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி உரிமையாளர்களின் ரூ.65 கோடி  கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு தற்போது வழங்கப்படும் மின் சலுகைகளை தொடர்ந்து வழங்க உறுதி செய்ய வேண்டும். அவிநாசியில் பொதுப்பணித் துறை அலுவலகம், ஒருங்கிணைந்த பால் குளிரூட்டும் நிலையம், அவிநாசியில் வட்டாட்சியர் அலுவலக கட்டடம்,  சார்பதிவாளர் அலுவலக கட்டடம் விரிவுபடுத்துதல், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அவிநாசி பகுதியில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்கு மையம் அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

அவிநாசி தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவும் சட்டப் பேரவைத் தலைவருமான ப.தனபால் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். கடந்த தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இந்தத் தேர்தலிலும் நிச்சயமாக வெற்றிபெற்றுவிட முடியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

அதேநேரம் அதிமுக சார்பில் தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெக்கலூர் ஊராட்சித் தலைவர் மரகதமணி மணியன், அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர் அய்யாவு, முன்னாள் எம்எல்ஏக்கள் கருப்புசாமி, பிரேமா, மகாலிங்கம், பொள்ளாச்சி முன்னாள் மக்களவை உறுப்பினர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தன் உள்ளிட்டோரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.

எதிரணியில் திமுகவே இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. கடந்த  முறை போட்டியிட்ட அன்னூர் வடக்கு ஒன்றியச் செயலர் இ.ஆனந்தன் மீண்டும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அவரைத் தவிர, பொங்கலூர் கிளைச் செயலர் முருகேசன் அன்னூர் முன்னாள் ஒன்றிய துணைச் செயலர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாறன், ஜெயந்தி முருகன், பழனிசாமி, அமுதா செல்வராஜ் உள்ளிட்டோரும் விருப்பம் தெரிவித்து காத்திருக்கின்றனர்.

அதேநேரம் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தத் தொகுதியை எதிர்பார்த்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT