தொகுதிகள்

ஆத்தூர் (தனி): வாகை சூடுமா அதிமுக?

என். சரவணன்

சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய நகராட்சிகளில் ஒன்றான ஆத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆத்தூர் (தனி) தொகுதி அமைந்துள்ளது.

இத்தொகுதியில் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், கீரிப்பட்டி பேரூராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட பெரும்பாலான கிராமங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தொகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கியத் தொழில்களாக உள்ளன. இப்பகுதியிலுள்ள கிராமப்புற மக்களுக்கு மரவள்ளி அரவை ஆலைகள், நூற்பாலைகள், நெல் அறுவடை இயந்திரங்கள் வேலைவாய்ப்பு வழங்குகின்றன.

இத்தொகுதி ஜவ்வரிசி உற்பத்தியில் மாவட்ட அளவில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் மரவள்ளி அரவை  ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.

வாக்காளர் விவரம்

ஆண்கள்: 1,22,440
பெண்கள்:  1,31,348
மூன்றாம் பாலினத்தவர்: 12
மொத்தம்: 2,53,800.

சமூக நிலவரம்

ஆத்தூர் தொகுதியில் துளுவ வேளாளர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். தவிர, வன்னியர், வெள்ளாளக் கவுண்டர்களும் கணிசமாக உள்ளனர். அருந்ததியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட பட்டியல் இனத்தவர்களும் குறிப்பிட்டஎண்ணிக்கையில் தொகுதி முழுவதும் பரவலாக உள்ளனர்.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்

1951: பி. சுப்ரமணியம் (சுயேச்சை)

1957:  இருசப்பன் (சுயேச்சை)

1962:  எஸ். அங்கமுத்து நாயக்கர் (காங்கிரஸ்)

1967:  கே.என்.சிவபெருமாள் (திமுக)

1971:  வி.பழனிவேல் கவுண்டர் (திமுக)

1977:  சி.பழனிமுத்து (காங்கிரஸ்)

1980:  சி.பழனிமுத்து (காங்கிரஸ்)

1984:  சி.பழனிமுத்து (காங்கிரஸ்)

1989: எ.எம்.ராமசாமி (திமுக)

1991: வி. தமிழரசு (அதிமுக)

1996: எ.எம்.ராமசாமி  (திமுக)

2001: எ.கே. முருகேசன் (அதிமுக)

2006: எம்.ஆர்.சுந்தரம் (காங்கிரஸ்)

2011: சு.மாதேஸ்வரன் (அதிமுக)

2016: ஆர்.எம்.சின்னத்தம்பி (அதிமுக) 

இதுவரை நடந்த தேர்தல்களில், காங்கிரஸ் 5  முறையும், திமுக 4 முறையும், அதிமுக 4 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

2016 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.எம்.சின்னத்தம்பி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.கே.அர்த்தநாரியை விட 17,334 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இத்தேர்தலில், பாமக வேட்பாளர் அம்சவேணி 18,363 வாக்குகளும், விசிக வேட்பாளர் க.ப.ஆதித்யன் 8,532 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவில் 2,542 வாக்குகளும், கொமதேக கட்சி வேட்பாளர் ஆர்.ஜெயசீலன் 2,123 வாக்குகளும் பெற்றனர்.

இத்தொகுதியில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கும் நிலையிலும், 2011, 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் சேலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.கே.அர்த்தநாரி திமுக கூட்டணியில் போட்டியிட்டதால், உள்ளூர் வேட்பாளர்கள் என்ற முறையில் அதிமுக வேட்பாளர்கள் சு.மாதேஸ்வரன், ஆர்.எம்.சின்னத்தம்பி ஆகியோருக்கு கூடுதல் வாக்கு கிடைத்ததால் வென்றனர்.

மக்களின் எதிர்பார்ப்புகள்:

வசிஷ்ட நதிக்கு நீர் வரும் வகையில் கைக்கான்வளவு திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது இத்தொகுதி மக்களுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது.

ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வளர்ச்சி ஏற்படவில்லை.

ஆத்தூர் தொகுதியில் சாலை, குடிநீர் வசதிகளைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு பெரிய திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை.

குறிப்பாக, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியில் கழிவுநீர் சாக்கடை வடிகால் வசதி பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. புனிதநதியாகக் கருதப்படும் வசிஷ்ட நதி கழிவுநீர் சாக்கடையாகவே மாறிவிட்டது. கழிவுநீர் சுத்திகரிப்புக்கு சிறப்புத் திட்டத்தை ஏற்படுத்தி வசிஷ்ட நதியை மீட்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை.

மரவள்ளி அரவை ஆலைகள் வெளியேற்றும் கழிவுகளையும் சுத்திகரித்து சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

இத்தொகுதிக்கு உள்பட்ட புத்திரகவுண்டன்பாளையம், உமையாள்புரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், ஆத்தூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

விழுப்புரத்துக்குப் பிறகு சேலம் வரை அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு தலைமை மருத்துவமனை இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கும் கூட சேலம் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய நிர்பந்தம் நீடித்து வருகிறது. ஆத்தூர் அரசு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

இத்தொகுதிக்கு உள்பட்ட ஏத்தாப்பூரில் முடங்கிக் கிடக்கும் தொழுநோய் மறுவாழ்வு மைய வளாகத்தில், தேசிய நெடுஞ்சாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை நவீன மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு  இருந்து வருகிறது.

ஆத்தூர் பகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்:

ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தற்போது அதிமுக வசம் உள்ளது. சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள ஆர்.எம்.சின்னதம்பி மீண்டும் விருப்பமனு கொடுத்துள்ளார். இதேபோல் மேலும் அதிமுகவில் அதிக உறுப்பினர்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கூட்டணியில் பாஜக மாநில துணைச்செயலாளர் வி.பி.துரைசாமியின் மகன் மருத்துவர் பிரேம்குமாருக்கு ஒதுக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். பாமக மற்றும் தேமுதிகவும் ஆத்தூர் தொகுதியை கேட்டு வருகின்றன.

திமுக கூட்டணியைப் பொருத்தவரையில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.அர்த்தனாரி கேட்டு வருகிறார். திமுகவில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கு.சின்னதுரை, முன்னாள் சேலம் மாநகர் மேயர் ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் கேட்டு வருகின்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.மாதேஸ்வரன் முருகன் உள்ளிட்டோர் கேட்டுள்ளனர். மக்கள் நீதிமய்யம் சார்பிலும் விருப்பமனு அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பிலும் பெண் ஒருவர் விருப்பமனு அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT