தொகுதிகள்

பெரம்பலூர்(தனி): தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா அதிமுக?

கே.​ தர்மராஜ்


ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த 2006-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெரம்பலூர், வரகூர், அரியலூர், ஆண்டிமடம், ஜயங்கொண்டம் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வரகூர் என இரு தொகுதிகள் இருந்தன.

பின்னர், தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு, வரகூர் தொகுதி எல்லைகள் மாற்றப்பட்டு, குன்னம் (பொது) தொகுதி உருவானது. பெரம்பலூர் சட்டப்பேரவைத் தகுதியைப் பொருத்தவரை விவசாயமே பிரதானத் தொழிலாகும்.

சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய சாகுபடியில் மாநில அளவில் பெரம்பலூர் முதலிடம் பெற்றுள்ளது. 

பட்டறையில் பாதுகாக்கப்பட்ட சின்ன வெங்காயம்

பிரசித்தி பெற்ற கோயில்கள்: சிறுவாச்சூர் ஶ்ரீ மதுரகாளியம்மன் கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோயில், சு.ஆடுதுறை குற்றம் பொறுத்த ஈஸ்வரர் கோயில் கோயில் ஆகியவை பிரதான வழிபாட்டுத் தலங்களாகும். அதிகளவில் கல் குவாரிகள் உள்ளதால் தமிழக அரசுக்கு வருவாய் பெற்றுத்தரும் தொகுதியாகும்.

சுற்றுலாத் தலங்கள்: வேப்பந்தட்டை வட்டாரத்தில் தொல்லியல் துறை பராமரிப்பில் ரஞ்சன்குடி கோட்டை தொகுதியின் வரலாற்றுச் சிறப்பாகும். இயற்கை எழில் கொஞ்சும் லாடபுரம் மயிலூற்று, எட்டெருமை பாலி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. தொண்டமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட விசுவக்குடி அணை, நாரணமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட விஜயகோபாலபுரத்தில் எம்.ஆர்.எப் தனியார் தொழிற்சாலை, பாடாலூரில் ஆவின் பால் பண்ணை குறிப்பிடத்தக்க இடங்களாகும். 
 

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்

இதுவரையில் வெற்றி பெற்றோர்: பெரம்பலூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் 1951-இல் சுயேட்சை வேட்பாளர் பரமசிவம், 1957-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே. பெரியண்ணன், 1962 -இல் திமுகவைச் சேர்ந்த அழகமுத்து, 1967, 1971 ஆம் ஆண்டுகளில் திமுகவைச் சேர்ந்த ஜே.எஸ். ராஜு, 1977-இல் அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி, 1980 -இல் திமுகவைச் சேர்ந்த ஜே.எஸ். ராஜு, 1984 -இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நல்லமுத்து, 1989-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிச்சமுத்து,

1991-இல் அதிமுகவைச் சேர்ந்த பூவை. த.செழியன், 1996-இல் திமுகவைச் சேர்ந்த எம். தேவராஜன், 2001-இல் அதிமுகவைச் சேர்ந்த ஆர். ராஜரத்தினம், 2006-இல் திமுகவைச் சேர்ந்த மா. ராஜ்குமார், 2011, 2016-இல் அதிமுகவைச் சேர்ந்த இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தொகுதி வாக்காளர் விவரம்:

தொகுதி-    பெரம்பலூர் (தனி), பெரம்பலூர் மாவட்டம்,
தொகுதி எண்- 147

ஆண் வாக்காளர்கள்- 1,47,320
பெண் வாக்காளர்கள்- 1,54,950
இதர வாக்காளர்கள்- 21
மொத்த வாக்காளர்கள்- 3,02,294
மொத்த வாக்குச்சாவடிகள்- 428

மக்களின் கோரிக்கைகள்:

தமிழகத்தைப் பொருத்தவரையில் பாதையே இல்லாதது பெரம்பலூர் தொகுதியாகும். அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக சேலம் வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயத்துக்கு நிரந்தரமாக அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.

வேப்பந்தட்டை அருகேயுள்ள மலையாளப்பட்டியில் 60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பயனற்றுக் கிடக்கும் சின்ன வெங்காய குளிர்பதனக் கிடங்கை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

படித்த பட்டாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழில் நிறுவனங்கள் அமைக்க வேண்டும். கொட்டரை நீர்த்தேக்கத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பயனற்றுக் கிடக்கும் மின் தகனமேடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். லாடபுரம் மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும்

அதிக எண்ணிக்கையில் உள்ள தலித் மற்றும் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன இத் தொகுதி மக்களின் கோரிக்கையாகும்.

போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்

அதிமுக சார்பில் போட்டியிட தற்போதைய எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயலர் இரா. ராஜபூபதி, எசனை பன்னீர் செல்வம், டாக்டர் ஆனந்தமூர்த்தி, நகர்மன்ற முன்னாள் தலைவர் சி. ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ பூவை த.  செழியன், சிதம்பரம் மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினர் எம். சந்திரகாசி, சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் வரகூர் அ. அருணாச்சலம் என பட்டியல் நீள்கிறது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் அல்லது எசனை பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

திமுக சார்பில் நகரச் செயலர் பிரபாகரன், வழக்குரைஞர்கள் செந்தில்நாதன், கே.ஜி. மாரிக்கண்ணன், மருத்துவர் செ. வல்லபன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பி. துரைசாமி உள்ளிட்ட பலர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பரிந்துரை செய்யும் நகரச் செயலர் பிரபாகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT