தொகுதிகள்

குடியாத்தம்(தனி): தொகுதியை தக்க வைக்குமா திமுக?

4th Mar 2021 04:02 PM | கே. நடராஜன்

ADVERTISEMENT

வேலூர் மாவட்டத்தில் இருந்த குடியாத்தம், பேர்ணாம்பட்டு (தனி) சட்டப் பேரவைத் தொகுதிகள் 2011-ஆம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறையின்போது மாற்றியமைக்கப்பட்டு, குடியாத்தம்(தனி), ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதிகளாக உருவாக்கப்பட்டது. தற்போது குடியாத்தம் பேரவைத் தொகுதி வேலூர் மாவட்டத்திலும், ஆம்பூர் பேரவைத் தொகுதி திருப்பத்தூர் மாவட்டத்திலும் உள்ளன.

வாக்காளர்கள் எண்ணிக்கை: ஆண்கள் - 1,40,0014. பெண்கள் - 1,49,085. இதரர் - 39. மொத்த வாக்காளர்கள் - 2,89,138.

தொகுதியின் சிறப்பு:

1954-இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட காமராஜர், குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வர் பதவியைத் தொடர்ந்தார். 1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் தில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி குடியாத்தம் நகரில் தயாரிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நில அமைப்பு: குடியாத்தம், பேர்ணாம்பட்டு என இரு வருவாய் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளையும், குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 13 ஊராட்சிகள், பேர்ணாம்பட்டு நகராட்சியில் உள்ள 21 வார்டுகள், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகள் என 47 ஊராட்சிகளையும், 57 நகராட்சி வார்டுகளையும் உள்ளடக்கியது இத்தொகுதி.

சாதி, தொழில்கள் அமைப்பு: ஆதி திராவிடர்கள், வன்னியர்கள், முஸ்லிம்கள், முதலியார், நாயுடு இனத்தவர்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். விவசாயம், தீப்பெட்டி உற்பத்தி, கைத்தறி நெசவு, பீடி சுற்றுதல், தோல் தொழில் ஆகியன பிரதானத் தொழில்களாக உள்ளன.

வென்றவர்கள், இரண்டாமிடம் பெற்றவர்கள்:

2011 -   கு.லிங்கமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்)
              க.ராஜமார்த்தாண்டன் (திமுக)

2016 -   ஜெயந்திபத்மநாபன் (அதிமுக)
              க.ராஜமார்த்தாண்டன்(திமுக)

அதிமுகவைச் சேர்ந்த ஜெயந்திபத்மநாபன் அமமுகவில் இணைந்ததையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 2019-இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எஸ்.காத்தவராயன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆர்.மூர்த்தி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு: இத்தொகுதியில் திமுக, அதிமுகவைப் பொருத்தவரை இரு கட்சிகளும் ஏறத்தாழ சம நிலையிலேயே உள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அவர்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் கொண்ட தொகுதி.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: குடியாத்தம் பகுதியில் ஜவுளிப் பூங்கா, போக்குவரத்து  நெரிசலைத் தவிர்க்க புறவழிச்சாலை, கெளன்டன்யா ஆற்றின் குறுக்கே மற்றொரு மேம்பாலம், பேர்ணாம்பட்டில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, தொழிற்கல்வி நிலையம்.  பேர்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டு-கோட்டையூர் வழியாக ஆந்திர மாநிலம்  கடப்பநத்தம் செல்லும் வனப்பகுதியில் சாலை அமைத்தல், அரவட்லா மலைக்  கிராமத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லிபட்லா வரை 4 கிமீ தூரம் வனப்பகுதியில் சாலை அமைக்கும் திட்டம் இதுவரை நிறைவேறாத கோரிக்கைகளாக உள்ளன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: திமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற இடதுசாரிகள் ஆர்வம் காட்டுகின்றன. அதேநேரத்தில், தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் திமுகவினரும் ஆர்வமாக உள்ளனர். அதிமுக கூட்டணியில், அதிமுக நேரடியாக களம் காணவே வாய்ப்பு அதிகம் எனப்படுகிறது.

தன்னிறைவு எதிர்பார்ப்பு: நகரம், ஊரகப் பகுதிகளை சமமாக உள்ளடக்கியது குடியாத்தம்(தனி)தொகுதி. இத்தொகுதி, ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் ஆட்சியாளர்களின் போதுமான கவனம் இத்தொகுதியின்பால் ஈர்க்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கம். போதுமான சாலை வசதி, கல்வி வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத்  தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து, தன்னிறைவு பெற்ற தொகுதியாக இத்தொகுதியை வார்த்தெடுக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

Tags : election 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT