தொகுதிகள்

திருவெறும்பூர்: மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு

3rd Mar 2021 04:08 PM | ஆர்.எஸ். கார்த்திகேயன்.

ADVERTISEMENT

தொகுதி அறிமுகம்: 

மாவட்ட புறநகர்ப் பகுதிகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலும் திருவெறும்பூர் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மாநகராட்சியைப் பொருத்தவரையில் ஏற்கெனவே 7, 27, 28, 29, 30, 31, 32, 36  என 8 வார்டுகள் இருந்தன. தற்போது 61 முதல் 65 வரை புதிதாக சேர்க்கப்பட்ட 5 வார்டுகளுடன் சேர்ந்து மொத்தம் 13 வார்டுகளுடன், துவாக்குடி நகராட்சியையும், கூத்தைப்பார் பேரூராட்சியையு கொண்டுள்ளது. ஊரகப் பகுதியில்,  ஒரு ஊராட்சி ஒன்றியத்துடன் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான துப்பாக்கித் தொழிற்சாலை, எச்ஏபிபி எனப்படும் கனரக படைக்கலன் பிரிவு தொழிற்சாலை உள்ளிட்ட முக்கியமான தொழிற்சாலைகள் இந்த தொகுதியில்தான் உள்ளன.

என்ஐடி எனப்படும் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்ப கழகம், இந்திய மேலாண்மை நிறுவனமான (ஐ.ஐ.எம்), இந்திய தகவல் மேலாண்மை நிறுவனமான (ஐ.ஐ.ஐ.டி), பாரதிதாசன் பல்கலைக்கழகம், அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்களும் இந்த தொகுதிக்குள்பட்டவையே. மலைக்கோயில் எனப்படும் எறும்பீஸ்வரர் கோயில், திருநெடுங்களநாதர் கோயில் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வி. சுவாமிநாதன் வெற்றி பெற்றார். அதன்பிறகு 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸிடமிருந்து தொகுதியை கைப்பற்றியது திமுக. இதன்பிறகு, திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன.

ADVERTISEMENT

   பெல் நிறுவனத்தின் உள்ளே ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்  

இதுவரை வெற்றி பெற்றவர்கள்:

1967ல் வி, சுவாமிநாதன் (காங்கிரஸ்),  1971ல் காமாட்சி (திமுக), 1977ல் முருகேசன் (அதிமுக), 1980ல் குருசாமி என்கிற அன்னதாசன் (அதிமுக), 1984 பாப்பா உமாநாத் (மார்க்சிஸ்ட்), 1991ல் டி. ரத்தினவேலு (அதிமுக), 1995ல்  கே. துரை (திமுக), 2001ல் கே. என் சேகரன் (திமுக), 2006ல் மீண்டும் கே.என். சேகரன்(திமுக), 2011ல் எஸ்.செந்தில்குமார் (தேமுதிக- அதிமுக கூட்டணி), 2016ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக).

இரண்டாம் தலைநகர்: தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர்,  திருவெறும்பூர் தொகுதிக்குள்பட்ட நவல்பட்டு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக அண்ணா நகர் என்ற பெயரில் மிகப்பெரிய நவீன அடிப்படை கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கினார். திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்ற திட்டத்தையும் கொண்டு வந்து அரசு அலுலகங்களை நிர்மானம் செய்ய முடிவு செய்திருந்தார். பின்னர், இது கனவுத் திட்டமாகவே மாறிப்போனது. இதேபோல, முதல்வராக இருந்த ஜெயலிலதாவும், நவல்பட்டு அண்ணாநகரில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதுவும் நிறைவேறாமல் போனது.

திருச்சி என்.ஐ.ஐ.டி.

தொகுதியின் தேவைகள்: போக்குவரத்து நெருக்கடி, உயிர்ப்பலி வாங்கும் விபத்துக்களைத் தவிர்க்க பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கி.மீ. நீளத்துக்கு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் தீர்க்கப்படவில்லை. திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்பதில்லை. அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கு மாற்றம் செய்ய வேண்டும். அரைவட்டச் சாலைப் பணிகள் முழுமை பெறவில்லை என்பது தொகுதி மக்களின் புகார் பட்டியலில் முக்கிய இடம் பெறுகின்றன. பெல் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் குறைந்ததால், இதனைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டன என்பது தொழில்முனைவோரின் ஆதங்கமாக உள்ளது.

மும்முனைப் போட்டி: வரும் தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி களம் காணவுள்ளார். அதிமுக சார்பில், முன்னாள் எம்பி-யும், தெற்கு அதிமுக மாவட்டச் செயலருமான ப. குமார் போட்டியிடுகிறார். இதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலர் எம்.முருகானந்தமும் தொகுதியை குறி வைத்துள்ளதால் கண்டிப்பாக மும்முனைப் போட்டிதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இதனை உறுதிபடுத்தும் வகையில் வேட்பாளர்கள் என எதிர்பார்க்கும் மூவருமே, அண்மையில் நடைபெற்ற சூரியூர் ஜல்லிக்கட்டில் ஒரே மேடையில் அணி வகுத்து காட்சியளித்தனர். இதுமட்டுமின்றி தொகுதி முழுவதையும் சுற்றி வந்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இவர்களைத் தவிர, கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளும் இந்தத் தொகுதியை தங்களுக்கு கேட்கலாம் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போதைய வாக்காளர்கள்:

ஆண்- 1,43,229, பெண்- 1,48,609, மூன்றாம்பாலினம்-  53, மொத்தம்- 2,91,891.

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT