தொகுதிகள்

பாபநாசம்: தொகுதியை தக்க வைக்குமா அதிமுக?

கே.வீரமணி

கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட பாபநாசம் தொகுதியில் நெல், காய்கறி, வெற்றிலை, கரும்பு பிரதான சாகுபடியாக உள்ளன. தவிர, வெல்லம் உற்பத்தி, உலோகச் சிலைகள் தயாரிப்பு, மரத்தேர்கள் தயாரிப்பு, பாய் தயாரிப்பு, கைத்தறி, பட்டு நெசவுத் தொழில் போன்றவையும் இத்தொகுதியில் பிரபலமானவை.

பாபநாசம் பாலைவனநாதர் கோயில், நாயக்கர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் உள்ளிட்டவை வரலாற்றுச் சிறப்புப் பெற்றவை.

இந்தத் தொகுதி 1957 ஆம் ஆண்டில் மட்டும் இரட்டைத் தொகுதியாக இருந்தது. இந்தத் தொகுதிக்கு உள்பட்ட கபிஸ்தலம் என்ற கிராமமே காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சொந்த ஊர். காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்த இந்தத் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக வெற்றி பெற்று வருகிறது. 1971 ஆம் ஆண்டில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. இந்தத் தொகுதியில் ஜி.கே. மூப்பனார் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சமூக அமைப்பு:

இத்தொகுதியில் வன்னியர், மூப்பனார் சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதேபோல, பட்டியலின மக்களும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இஸ்லாமியர்கள் உள்பட பிற சாதியினரும் கணிசமான அளவில் வசிக்கின்றனர்.  

எல்லைகள்:

பாபநாசம் வட்டத்தில்  வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, உம்பளப்பாடி,  பெருமாள் கோவில், சருக்கை, சத்தியமங்கலம், திருவைகாவூர், கொந்தகை, ஓலைப்பாடி, ஆதனூர், அலவந்திபுரம், தியாகசமுத்திரம், கூனஞ்சேரி, துரும்பூர்,திருமண்டங்குடி, உமையாள்புரம், ராமானுஜபுரம், கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், உள்ளிக்கடை, கணபதிஅக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரபுரம், ஈச்சங்குடி, இலுப்பக்கோரை, பசுபதிகோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி,  வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டாரவாடை, ராஜகிரி,  கோபுராஜபுரம், திருவையாத்துக்குடி, தேவராயன்பேட்டை, வடக்கு மாங்குடி, செருமாக்கநல்லூர், வேம்புகுடி, வையச்சேரி, பெருமாக்கநல்லூர்,  காவலூர், அகரமாங்குடி, மேலசெம்மங்குடி, சுரைக்காயூர், ஒன்பத்துவேலி,  திருக்கருக்காவூர், இடையிருப்பு, விழுதியூர், இரும்புத்தலை, கோவத்தக்குடி,  அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, மேலகளக்குடி, ஆலங்குடி, புலவர்நத்தம், நெல்லிதோப்பு, குமிழக்குடி, நல்லவன்னியன்குடிகாடு, எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், சாலியமங்கலம், பூண்டி, ராராமுத்திரக்கோட்டை, கத்திரிநத்தம்,   அருமலைக்கோட்டை, செண்பகபுரம், திருபுவனம், நெய்குன்னம், மகிமாலை, உக்கடை, நெடுவாசல், கீழக்கோவில்பத்து, வடபாதி, சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், புளியக்குடி, கருப்பமுதலியார் கோட்டை.

கும்பகோணம் வட்டத்தில் (பகுதி) நாகக்குடி, வலையப்பேட்டை,  திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளப்பிள்ளையாம்பேட்டை,  திருவலஞ்சுழி தட்டுமால், பட்டீசுவரம், வாணியக்கரம்பை கிராமங்கள், சுவாமிமலை (பேரூராட்சி).

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்துக்குப் புதிய கட்டடம்  திறப்பு, பாலிடெக்னிக் கல்லூரி தொடக்கம், கணபதி அக்ரஹாரத்தில் காவிரி-அரசலாற்றிலும், திருமலைராஜனாறிலும் புதிய பாலம், அண்டக்குடி - சுந்தரபெருமாள்கோவில் புதிய பாலம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பிரச்னைகள்:

இத்தொகுதியில் வேளாண் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, அரசுக் கலைக் கல்லூரி போன்றவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. மிகப்பெரிய வட்டங்களில் ஒன்றான பாபநாசம் தலைமையிடத்திலுள்ள அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படாமல் உள்ளதால் மக்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்குச் செல்கின்றனர்.

பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரக கோயில்கள், பரிகாரக் கோயில்கள் போன்ற ஆன்மிகத் தலங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, பாபநாசத்தை மையமாக வைத்து சுற்றுலாத் தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இக்கோயில்களுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் அதிக அளவில் வருவதால், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம், கார், ஆட்டோ உள்ள வாடகை வாகனப் போக்குவரத்து சேவை மேம்படவும், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு பெருகவும் வாய்ப்புள்ளது. ஆனால், இதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என்பது பெரும் குறையாக இருந்து வருகிறது.

பாபநாசம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட புறவழிச்சாலை திட்டமும் முடிக்கப்படாமல் உள்ளது. நீண்டகால கோரிக்கையான குடிகாடு - மேல ராமநல்லூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டவில்லை. அமைச்சர் தொகுதியாக இருந்தாலும், அதற்கேற்ப இத்தொகுதி பெரிய அளவில் முன்னேற்றத்தை எட்டவில்லை என்ற புகாரும் மேலோங்கியுள்ளது.

அரசியல் கட்சிகளின் நிலை:

இத்தொகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக சார்பில் போட்டியிட்ட இரா. துரைக்கண்ணு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். எனவே, இத்தொகுதி 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக கோட்டையாக இருந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற துரைக்கண்ணு, பின்னர் வேளாண் துறை அமைச்சரானார். கடந்த 2020 ஆம் ஆண்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் காலமானார். இவரது மறைவால் இத்தொகுதியில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றாலும், துரைக்கண்ணுவின் மகன் அய்யப்பன், ஒன்றியச் செயலர் ஏ.வி. சூரியநாராயணன் உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்து காத்துக் கிடக்கின்றனர்.

ஆனால், இத்தொகுதியை தமாகாவும் முழுவீச்சில் கோரி வருகிறது. ஜி.கே. வாசனின் சொந்த ஊரை உள்ளடக்கிய இந்தத் தொகுதியை இம்முறை அதிமுக கூட்டணியில் வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளனர் அக்கட்சியினர். எனவே, இத்தொகுதி தமாகாவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் இருக்கின்றனர். இதனிடையே, பாமகவும் இத்தொகுதியைக் கேட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே இத்தொகுதியில் போட்டியிட்டு வந்தது. இந்த முறை திமுக போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சியினர் உள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சியிலும் சிலர் இத்தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வருகின்றனர். 

வாக்காளர்கள்:

மொத்த வாக்காளர்கள்: 2,60,339
ஆண்கள்: 1,27,049
பெண்கள்: 1,33,275
மூன்றாம் பாலினத்தவர்: 15

இதுவரை வெற்றி பெற்றவர்கள்:

1952 - சுயம்பிரகாசம் (சுயேச்சை)

1957 - வெங்கடாசல நாட்டார் (காங்கிரஸ்)
           கே. சுப்பிரமணியம் (காங்கிரஸ்)

1962 - திட்டை ஆர். சுப்பிரமணியன் (காங்கிரஸ்)

1967 - ஆர். செüந்தராஜ மூப்பனார் (காங்கிரஸ்)

1971 - என். கணபதி (திமுக)

1977 - ஆர்.வி. செüந்தரராஜன் (காங்கிரஸ்)

1980 - எஸ். ராஜாராமன் (காங்கிரஸ்)

1984 - எஸ். ராஜாராமன் (காங்கிரஸ்)

1989 - ஜி.கே. மூப்பனார் (காங்கிரஸ்)

1991 - எஸ். ராஜாராமன் (காங்கிரஸ்)

1996 - கருப்பண்ண உடையார் (தமாகா)

2001 - எம். ராம்குமார் (தமாகா)

2006 - இரா. துரைக்கண்ணு (அதிமுக)

2011 - இரா. துரைக்கண்ணு (அதிமுக)

2016 - இரா. துரைக்கண்ணு (அதிமுக) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT