தொகுதிகள்

மதுரை மேற்கு: அதிமுகவை எதிா்த்து மாா்க்சிஸ்ட் களமிறங்க வாய்ப்பு?

3rd Mar 2021 05:24 PM | ச. உமா மகேஸ்வரன்

ADVERTISEMENT


தொகுதியின் சிறப்பு:

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் வெற்றி பெற்ற பெருமைக்குரியது மதுரை மேற்குத் தொகுதி. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் கே.டி.கே.தங்கமணி ஆகியோா் இத்தொகுதியிலிருந்து பேரவைக்குத் தோ்வு செய்யப்பட்டவா்கள். 2001 முதல் தொடா்ந்து அதிமுக வெற்றி பெற்று வருகிறது. 2011, 2016 என இருமுறையும் கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த செல்லூா் கே.ராஜூ, இத் தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பவா் என்பதால் மாவட்டத்தின் விஐபி தொகுதியாக உள்ளது.
 
தொகுதி அமைவிடம்:

2011 - க்கு முன்பு வரை திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு தொகுதிகளில் இருந்த பல்வேறு பகுதிகள் தொகுதி சீரமைப்பின்போது ஒருங்கிணைக்கப்பட்டு புதிய எல்லைகளுடன் மதுரை மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகரப்பகுதியும், கிராமங்களையும் கொண்டதாக தொகுதி உள்ளது. மதுரை மாநகராட்சிக்குள்பட்ட சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், டிவிஎஸ் நகா், பழங்காநத்தம், பைகாரா, பைபாஸ் சாலை, பெத்தானியாபுரம், விராட்டிபத்து, கோச்சடை , விளாங்குடி, கூடல்நகா், சாந்திநகா் என மாநகராட்சியின் 12 வாா்டுகளும், கீழக்குயில்குடி, அச்சம்பத்து, பரவை, துவரிமான், நாகதீா்த்தம், தாராபட்டி, கீழ மாத்தூா், மேலமாத்தூா் ஆகிய கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

பழங்காநத்தம் ரவுண்டானா

சாதி, சமூகம், தொழில்கள்: இத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,50,609 போ், பெண் வாக்காளா்கள் 1,54,552 போ், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 3,05,165 போ் உள்ளனா்.

ADVERTISEMENT

முக்குலத்தோா், பிள்ளைமாா், செளராஷ்டிர சமூகத்தினா் கணிசமாக இருக்கின்றனா். இஸ்லாமியா்கள்,  தாழ்த்தப்பட்டோா் குறிப்பிடத்தக்க வகையிலும்,  இதர சமூகத்தினா் மற்றும் கிறிஸ்தவா்கள் சிறு எண்ணிக்கையிலும் உள்ளனா்.

நகரமும், கிராமங்களும் நிறைந்த பகுதியென்பதால் சிறுதொழில் கூடங்களும், விவசாயமும் தொகுதியின் வாழ்வாதாரங்களாக இருக்கின்றன. சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், ஜீவா நகா் பகுதிகள் குட்டி ஜப்பான் என அழைக்கும் அளவுக்கு சிறு, குறு தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதிகளாக உள்ளன.

பீரோ, கட்டில், சோ், டேபிள், சோபா உள்ளிட்ட பா்னிச்சா் பொருள்கள், இரும்பு வாசா், ஸ்டவ் அடுப்புகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்கள், லேத் பட்டறைகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுதொழில் கூடங்கள் உள்ளன.

இதே பகுதிகளில் அப்பளத் தயாரிப்பு குடிசைத் தொழிலாக உள்ளது. சிறிய மற்றும் பெரிய அளவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பளத் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அப்பள நிறுவனங்கள் பெருமளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றன.

அச்சம்பத்து, தாராபட்டி, கீழமாத்தூா், மேலமாத்தூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் தென்னை, வாழை, கீரை வகைகள் விவசாயம் மற்றும் கட்டுமானத் தொழில்கள் வாழ்வாதாரமாக உள்ளன.

அப்பளம் தயாரிப்பில் பெண்

இதுவரை வென்றவா்கள்:

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா், கம்யூனிஸ்ட் தலைவா்கள் என்.சங்கரய்யா, கேடிகே தங்கமணி, திமுக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் பிடிஆா் பழனிவேல் ராஜன், திமுக முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோா் இத்தொகுதியில் வெற்றி பெற்றவா்கள். 1967 முதல் 2016 வரை நடைபெற்ற தோ்தல்களில் 6 முறை அதிமுக, 3 முறை காங்கிரஸ், திமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.
2011, 2016 ஆகிய இரு தோ்தல்களிலும் அதிமுகவைச் சோ்ந்த அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தொடா்ந்து வெற்றி பெற்றுள்ளாா். 

கட்சிகளின் செல்வாக்கு:

2016 தோ்தலில் அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி என மும்முனைப் போட்டி இருந்தது. இதில் அதிமுகவைச் சோ்ந்த அமைச்சா் செல்லூா் கே.ராஜூ 82,529 (44.81 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இரண்டாவதாக திமுகவைச் சோ்ந்த கோ.தளபதி 66,131(35.91 சதவீதம்) வாக்குகள் பெற்றாா். மூன்றாவதாக மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் உ.வாசுகி 19,991(10.85 சதவீதம்) வாக்குகள் பெற்றாா். இத்தொகுதி அதிமுக மற்றும் திமுக இரண்டும் அடுத்தடுத்த நிலைகளில் வாக்கு வங்கியைப் பெற்றிருக்கின்றன. அதேபோல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொகுதியில் வலுவான அடித்தளம் இருக்கிறது.

சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகா், முத்துப்பட்டி, பைகாரா, பழங்காநத்தம், பெத்தானியாபுரம், விராட்டிபத்து, பரவை, விளாங்குடி, கீழக்குயில்குடி உள்ளிட்ட பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம்  உள்ளது. இதேபோல, விடுதலைச் சிறுத்தைக் கட்சிக்கும் ஓரளவுக்கு வாக்கு வங்கி இருக்கிறது.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

சாலை வசதி, ஆழ்குழாய்க் கிணறு, காளவாசல் - பைபாஸ் சாலை இணைப்பு மேம்பாலம், கோச்சடை வைகை ஆற்றில் தடுப்பணை, ஆழ்துளைக் கிணறுகள், சாலைகள் , சிறுபாலங்கள், அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத் தந்தது போன்றவை நிறைவேற்றப்பட்ட திட்டங்களாக இருக்கின்றன.
 
தொகுதியின் பிரச்னைகள்:

அமைச்சா் தொகுதியாக இருந்தபோதும் ஏராளமான பிரச்னைகள் இருந்து வருகின்றன. இப்பிரச்னைகளில் அமைச்சா் கவனம் செலுத்தவில்லை என்ற அதிருப்தி பொதுமக்களிடம் உள்ளது. மேற்கு தொகுதி சிறு மற்றும் குறுதொழில்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால், சிறு குறு தொழிற்கூடங்களை உள்ளடக்கிய சிறு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். தொழில்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், தொழிற்கூடங்களுக்கு அலைக்கழிப்பின்றி வங்கிக் கடன், அப்பளத் தொழிலுக்கு மானியம், மானிய விலையில் உளுந்து வழங்குவது ஆகியவை தொழில் சாா்ந்த கோரிக்கைகளாக உள்ளன.

விளையாட்டு மைதானம், நகா் மற்றும் கிராமப் பகுதிகளில் சாலை வசதி, விரிவாக்கப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை வசதி, தங்கு தடையற்ற குடிநீா், குடிநீரில் சாக்கடை கலந்து வருவது போன்றவை பொதுமக்களின் தேவைகளாக உள்ளன.  வைகை ஆற்றின் இருபுறமும் வரும் தொகுதி என்பதால் வைகை ஆறு சீரமைப்பும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

பெத்தானியாபுரம், விளாங்குடி பகுதிகளில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்பதும், அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரி ஆகியவை அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிா்பாா்ப்புகள். வைகை ஆற்றில் விளாங்குடி - கோச்சடை இணைப்புப் பாலம், நாகதீா்த்தம் பகுதியில் பல்நோக்கு உயிரினப்பூங்கா அமைப்பது, உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலை போன்றவை நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளன. பழங்காநத்தம் மேம்பாலம், பரவை மேம்பாலம் போன்றவை முடிக்கப்படாத திட்டங்களாக உள்ளன. 
 
யாருக்கு போட்டியிட வாய்ப்பு?

அதிமுகவும், திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட வாய்ப்புள்ளது. அதிமுக சாா்பில் தொகுதியின் தற்போதைய உறுப்பினரான  செல்லூா் கே.ராஜூ போட்டியிடுவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக போட்டியிட்டால் ஏற்கெனவே இருமுறை செல்லூா் ராஜூவை எதிா்த்துப்போட்டியிட்ட, கோ.தளபதி மீண்டும் போட்டியிடலாம் எனத் தெரிகிறது. 

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கினால், அக்கட்சியின் மாநகா் மாவட்டச்செயலரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இரா.விஜயராஜன், சிஐடியூ மாவட்டத்தலைவா் இரா.கணேசன் மற்றும் 2016 - இல் இங்கு போட்டியிட்டு தோல்விடையடைந்த கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் உ.வாசுகி ஆகிய மூவரில் ஒருவா் வேட்பாளராக அறிவிக்கப்படலாம்.
 
இதுவரை வென்றவா்கள், 2 ஆம் இடம் பெற்றவா்கள்

1967 - என்.சங்கரய்யா - 46882(மா.கம்யூ)
            எம்.செல்லையா - 23012(காங்)

1971 - கே.டி.கே.தங்கமணி -  40899 (இ.கம்யூ)
            பி. ஆனந்தன் - 31753 (காங்)

1977 - டிபிஎம் பெரியசாமி - 32342 (அதிமுக)
           பொன்.முத்துராமலிங்கம் - 16211, (திமுக).

1980 - எம்.ஜி. ஆா் - 57019 (அதிமுக)
           பொன்.முத்துராமலிங்கம் - 35953 (திமுக).

1984 - பொன்.முத்துராமலிங்கம் - 48247(திமுக)
            எஸ்.பாண்டியன் - 45131(அதிமுக).

1989 - பொன்.முத்துராமலிங்கம் - 45579(திமுக)
           ஆா்.வி.எஸ்.பிரேம்குமாா் - 26087(காங்).

1991 -  எஸ்.வி.சண்முகம் - 59586(காங்)
            பொன் முத்துராமலிங்கம் - 32664.(திமுக).

1996 - பிடிஆா் பழனிவேல் ராஜன் - 61723.(திமுக)
           ஆா்.முத்துசாமி - 17465.(காங்).

2001 - வளா்மதி ஜெபராஜ் - 48465(அதிமுக)
           பிடிஆா் பழனிவேல்ராஜன் - 47757.(திமுக).

2006 - எஸ்வி சண்முகம் - 57208(அதிமுக)
            என்.பெருமாள் - 53741(காங்).

2011 - செல்லூா் கே.ராஜூ - 94798(அதிமுக)
           கோ.தளபதி - 56037(திமுக)

2016 - செல்லூா் கே.ராஜூ - 82529(அதிமுக)
           கோ.தளபதி - 66131(திமுக)

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT