தொகுதிகள்

கரூர்: அதிமுக - திமுக நேரடிப் போட்டி

3rd Mar 2021 04:32 PM | ஏ. அருள்ராஜ்

ADVERTISEMENT

தொகுதி அறிமுகம்: 

கரூரில்தான் (கருவூர்) உலகின் படைப்புத் தொழில் உருவானதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. சங்ககால சேரர்களின் தலைநகரமாக (வஞ்சி மாநகரமாக) விளங்கி, அக்காலத்தில் நகரின் மையப்பகுதியில் ஓடும் ஆம்பிராவதி எனும் அமராவதி ஆற்றின் மூலம் ரோம், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு பொன் வணிகத்தில் ஈடுபட்ட நகரமாக இருந்ததற்கு இன்றளவும் அமராவதி நதியில் கிடைக்கும் நாணயங்கள் சான்றாக உள்ளன.

ஜவுளி ஏற்றுமதித் தொழிலை பிரதான தொழிலாகக் கொண்டு ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி அன்னிய செலாவணியை ஈட்டித் தருகிறது. காவிரி, அமராவதி என இரு ஆறுகள் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து தொகுதியை வளமாக்குவதுடன் கரூர் பசுபதீஸ்வரர், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், நெரூர் சதாசிவம் பிரமேந்திராள் கோயில், சங்ககால சேரர்களின் அரசவைக்கு வந்த சமணர்கள் தங்கிய புகளூர் குகை போன்றவையும் உள்ளன.

கரூர் அருங்காட்சியகம்

நில அமைப்பு: கரூர் நகராட்சி, கரூர், தாந்தோணி ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களையும், கரூர் வருவாய் வட்டத்தையும் கொண்டுள்ளது இந்த தொகுதி. ஈரோடு, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் எல்லைகளையொட்டி அமைந்துள்ளது.

ADVERTISEMENT

சாதி, சமூகம், தொழில்கள்:  கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள், வேட்டுவக் கவுண்டர்கள், தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக செங்குந்த முதலியார், பிள்ளைமார், நாயக்கர்கள் உள்ளிட்ட சமூகத்தினரும் பரவலாக உள்ளனர்.

கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள், தாழ்த்தப்பட்டோர், வேட்டுவக் கவுண்டர்கள் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன. வீட்டு உபயோக ஜவுளிகளான குஷன், திரைச்சீலை, கால்மிதியடி, கையுறை உள்ளிட்டவை இங்கு உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கரூர் நகர்ப்பகுதி

மேலும், பேருந்துகளுக்கு கூண்டு கட்டுதல், கொசுவலை உற்பத்தியிலும் இந்த தொகுதி சிறந்து விளங்குகிறது. காவிரிக் கரையோரம் வெற்றிலை, வாழை, நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இதுவரை வென்றவர்கள்: அதிமுக, திமுகதான் இங்கு அதிகமுறை வென்றிருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1952 இல் முதல் தேர்தலை சந்தித்து வரும் தொகுதிகளில் 2011 தேர்தலில் 83.63 சதவீத வாக்குகள் பதிவாகி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பதிவான தொகுதியாக முத்திரை பதித்தது இந்த தொகுதி.

1952 முதல் 15 பேரவைத் தேர்தலை சந்தித்துள்ள இந்த தொகுதியில் 1952 இல் காங். சார்பில் போட்டியிட்ட தன்னாசியும், பின்னர் 1957, 1962, 1967களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.எம்.நல்லசாமியும் வென்றுள்ளனர். 1971இல் முதன்முதலாக திமுகவின் நல்லசாமி கரூர் தொகுதியை வென்றார். 1977இல் முதன்முதலாக அதிமுகவின் கு.வடிவேல் வென்றார். 1977, 1980, 1984களில் அதிமுகவும், பின்னர் 1989ல் திமுகவும், 1991இல் அதிமுகவும், 1996இல் திமுகவும், 2001இல் மீண்டும் காங்கிரசும், 2006 முதல் 2016 வரை அதிமுகவும் வென்றுள்ளன. 7 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வென்றுள்ள இந்தத் தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றத் தொகுதியாகும்.

கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தன்னை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பேங்க் கே.சுப்ரமணியனை 441 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 406 கோடியில் கதவணை அமைக்க நிதி ஒதுக்கீடு, ரூ.306 கோடியில் பிரமாண்டமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரூர் நகராட்சிக்கு ரூ. 68 கோடியில் காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம், நகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தார்சாலை, புதைவழி சாக்கடை வசதி, ரூ.1 கோடியில் பாப்புலர் முதலியார் வாய்க்காலை வெட்டியது, காதப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவை நிறைவேறிய திட்டங்கள்.

இவைத் தவிர, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.28.80 கோடியில் அம்மா திட்ட சாலை, நகரின் பழைய அமராவதி பாலத்தை ரூ.1 கோடியில் நடைமேடை பூங்காவாக மாற்றியது, வெண்ணைமலை முருகன் கோயிலை சுற்றுலாத் தலமாக உருவாக்கியது, மீண்டும் ஆசாத் பூங்காவை சீரமைத்தது, தமிழகத்திலேயே அதிகளவில் முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை பெற்றுக்கொடுத்த மாவட்டமாக உருவாக்கியது என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தொகுதிமக்களின் எதிர்பார்ப்பு:

தொகுதியின் வளர்ச்சிக்கு மூலாதாரமாக இருக்கும் ஜவுளித்தொழிலுக்கு ஒருங்கிணைந்த சாயப்பூங்கா அமைத்துக் கொடுக்கும் கோரிக்கை நீண்டகால கனவாகவே இருந்து வருகிறது. கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு மாயனூர் கதவணை கைகொடுத்தாலும், அமராவதி ஆற்றங்கரையோரம் விவசாயிகள் நீரின்றி அவதியுறுவதற்கு, அமராவதி ஆற்றில் 18 இடங்களில் தடுப்பணைக் கட்டித்தர வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவில் பேருந்து நிலையம் அமைப்பது, நகரின் ஜவுளித்தொழிலை அடையாளப்படுத்தும் வகையில் ராட்டைச் சின்னம் நினைவுத்தூண் நகரின் மையப்பகுதியில் அமைப்பது போன்றவை தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நேரடிப் போட்டி: இம்முறை அதிமுக சார்பில் மீண்டும் தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்ஆர்.விஜயபாஸ்கர் களமிறக்கப்படுவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வேளையில் இம்முறை வி.செந்தில்பாலாஜி திமுக மாவட்ட பொறுப்பாளராக இருப்பதால் அவருக்குத்தான் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இம்முறை அதிமுக, திமுக நேரிடையாக மோத வாய்ப்புள்ளது.

தற்போதைய வாக்காளர்கள்: ஆண்- 1,15,834, பெண்- 1,28,321, மூன்றாம் பாலினம்- 19, மொத்தம் 2,44,174 வாக்காளர்கள்.

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT