தொகுதிகள்

ஜயங்கொண்டம் தொகுதி: சாதிய ஓட்டுகள் யாருக்கு?

சி.சண்முகவேல்


அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் அதிக பரப்பளவும், அதிக வாக்காளர்களையும் கொண்டது ஜயங்கொண்டம் தொகுதி. வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மறைவிற்குப் பிறகு சந்திக்க போகும் முதல் சட்டப் பேரவைத் தேர்தல் இது.

தொகுதியின் சிறப்பு: ராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்டு யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கட்டடக் கலையின் சான்றாக விளக்கும் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை உள்ளடக்கியது இத்தொகுதி. இத்தொகுதிக்கு இன்னொரு சிறப்பு நிலக்கரி(கருப்புத் தங்கம்). மேலும் சிமெண்ட் ஆலையில் அதிகம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

நில அமைப்பு: கொள்ளிட கரையின் அமைந்துள்ள தா.பழூர், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது இந்த ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதி. காவிரி பாசன டெல்டா பகுதியாக உள்ள இந்த தொகுதியில், நெல், முந்திரி சாகுபடிகள் அதிகம் . அடுத்தப்படியாக கரும்பு, மக்காச் சோளம், பருத்தி, மலர் சாகுபடிகள் செய்யப்படுகிறது. கைத்தறி நெசவு, முந்திரிக் கொட்டையை பிரித்தெடுப்பது பிரதான தொழிலாளாக உள்ளது. கடலூர் மாவட்டத்தின் அருகிலுள்ள தொகுதியாகும் இந்த ஜயங்கொண்டம்.

உள்ளாட்சிகள் அமைப்புகள்: இந்த தொகுதியில் உடையார்பாளையம் பேரூராட்சி, வரதராஜன்பேட்டை பேரூராட்சி, ஜயங்கொண்டம் நகராட்சி மற்றும் , ஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு ஆண்டிமடம் தொகுதி ஜயங்கொண்டம் தொகுதியில் சேர்க்கப்பட்டது.

வாக்காளர்கள்: ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,31,663 ஆண் வாக்காளர்கள், 1,34,347 பெண் வாக்காளர்கள், 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,66,013 வாக்காளர்கள் உள்ளனர்.

சாதி, சமூகங்கள்: இந்த தொகுதியில் 30 சதவீதம் வன்னியர்களும், 28 சதவீதம் தலித்துகளும் அளவில் உள்ளனர். இது தவிர, முதலியார், உடையார், மூப்பனார் ஆகிய சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். காலங்காலமாக வன்னிய மக்களின் கோட்டையாக உள்ளதால் தேர்தல்களில் வன்னியப் பின்புலம் பலமாக உள்ள வேட்பாளர்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அப்படி வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது, அங்கு வாக்கு வங்கிகள் பிரிகிறது. இதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கியே வெற்றியை தீர்மானிக்கிறது. அதிமுக, திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு குறிப்பிட்டத் தகுந்த அளவில் வாக்கு வங்கி உள்ள தொகுதி ஜயங்கொண்டம்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்கள்: 

1951-ல் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி வேட்பாளர் அய்யாவு வெற்றி பெற்றார். 1952-இல் சுயேச்சை வேட்பாளர் கே.ஆர். விஸ்வநாதன் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். 1957-ல் காங்கிரஸ் வேட்பாளர் விசுவாதன் வெற்றி பெற்றார். அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2011-இல் பாமக வேட்பாளர் ஜெ.குரு வெற்றி பெற்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டபேரவைத் தேர்தலில், பாமக சார்பில் போட்டியிட்ட மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை, அதிமுக வேட்பாளர் ராமஜெயலிங்கம் 22,934 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் 3 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: ஜயங்கொண்டம் பேருந்து நிலையம் விரிவாக்கம், ஜயங்கொண்டத்தில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வந்தது. ஆண்டிமடம் தனி வருவாய் வட்டம் உருவாக்கியது, சோழகங்கம் ஏரியை குடிமராமத்துப் பணி மூலம் தூர்வாரியது, அரசின் நலத் திட்டங்களை செய்லபடுத்தியது போன்றவை சாதனையாக உள்ளது.

தீர்க்கப்படாத பிரச்னைகள்: இங்குள்ள முக்கியப் பிரச்னையே நிலக்கரிதான். அரசின் நிலக்கரி திட்டத்திற்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள். நிலக்கரிக்கு அடுத்தபடியாக ஜயங்கொண்டம், புதுக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் சமீபத்தில் கால்பதித்த பாறை எரிவாயு திட்டம் கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்: ராஜேந்திர சோழனின் சோழகங்கம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து நீர் வழித்தடம் அமைக்க வேண்டும். ஜயங்கொண்டத்தில் ராஜேந்திரன் சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அரியலூரில் இருந்து ஜயங்கொண்டம், மீன்சுருட்டி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி வழியாக சிதம்பரத்துக்கு ரயில்வே இரும்புப் பாதை அமைக்க வேண்டும்.

அதே போல் ஜயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணத்துக்கும் ரயில்வே இரும்புப் பாதை அமைக்க வேண்டும். ஜயங்கொண்டம் அனல்மின் திட்டத்திற்கு நிலம், வீடு வழங்கிய அனைவருக்கும் நீதிமன்ற உத்தரவின்பேரில் உடனடியாக பணம் வழங்க வேண்டும். முந்திரி தொழிற்சாலை அமைத்து, முந்திரி, முந்திரி பழத்தை கொள்முதல் செய்யவேண்டும். நெசவு தொழிலாளர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி நெசவுத் தொழிலை காக்க வேண்டும்.

குறைந்த விலையில் தடையற்ற நூல் கிடைக்கவும், நெசவு செய்த துணிகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழகங்கம் எனும் பொன்னேரியை ஆழப்படுத்தி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை. பொன்னேரிக்கும், சுத்தமல்லி நீர்த்தேக்கத்திற்கும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வழித்தடம் ஏற்படுத்துவதுடன் தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும்.

தொகுதியை பெறுவதில் கூட்டணி கட்சிகளிடையே போட்டி:

அதிமுக மாவட்ட துணைச் செயலாளரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். அதேசமயம் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலர் கவிதா ராஜேந்திரன், இளைஞரணி துணைச் செயலர் சிவசுப்பிரமணியன், ஒன்றியச் செயலர் தங்கபிச்சமுத்து, நகர செயலர் செல்வராஜ் ஆகியோர் விருப்ப மனு அளிக்க உள்ளனர்.

ஒருவேளை இந்த தொகுதி கூட்டணி கட்சி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டால் வைத்தி, திருமாவளவன், சின்னதுரை, மீன்சுருட்டி ராஜேந்திரன், வழக்குரைஞர் திருமாவளவன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக சார்பில் அக்கட்சியின் சட்டதிருத்த குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், ஒன்றியச் செயலர் கண்ணன், தனசேகரன், மறைந்த வெற்றிகொண்டான் மகன் கருணாநிதி ஆகியோர் வாய்ப்பு கேட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் கட்சி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சட்டப் பேரவை உறுப்பினர் மாசிலமணி, மாவட்டத் தலைவர் சங்கர் ஆகியோர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜயங்கொண்டம் தொகுதியில் பாமக, காங்கிரஸுக்கு நேரடி போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT