தொகுதிகள்

அணைக்கட்டு: வெற்றிக்கு அடித்தளமாகும் சாதி வாக்குகள்

3rd Mar 2021 05:03 PM | என். தமிழ்ச்செல்வன்

ADVERTISEMENT

வேலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிரிபுரம் தங்கக் கோயில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் ஆகியவற்றை அடையாளமாக கொண்டுள்ளது அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதி.

பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பேரூராட்சி, வேலூர், அணைக்கட்டு ஒன்றியத்திலுள்ள கிராம ஊராட்சிகள் என கிராமங்களை பின்னணியாகக் கொண்ட மிகவும் பின்தங்கிய தொகுதியாகும். அணைக்கட்டு ஒன்றியத்தில் மலைப்பகுதியில் உள்ள குருமலை, பீஞ்சமந்தை, பலாம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

தொழில்: பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்துள்ள அணைக்கட்டு தொகுதியில் நெல், கொய்யா, வாழை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. மலைக்கிராமங்களில் பழ வகைகள், தேன், பயிறு, தினை வகைகள் பயிரிடப்படுகின்றன. அத்துடன், கால்நடை வளர்ப்பும் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது.

கடந்த தேர்தல்கள்:

1962 இல் விரிஞ்சிபுரம் தொகுதியாகவும், 1967 முதல் 1977 வரை கணியம்பாடி தொகுதியாகவும் இருந்த இந்த தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு அணைக்கட்டு தொகுதியாக உருவாக்கப்பட்டது.

இந்த தொகுதியில் 1977 இல் ஆர்.மார்க்கபந்து (அதிமுக), 1980 இல் ஜி.விசுவநாதன் (அதிமுக), 1984 இல் வி.ஆர்.கிருஷ்ணசாமி (அதிமுக), 1989 இல் எஸ்.பி.கண்ணன் (திமுக), 1991 இல் கே.தர்மலிங்கம் (அதிமுக), 1996 இல் சி.கோபு (திமுக), 2001இல் கே.பாண்டுரங்கன் (அதிமுக), 2006 இல் கே.பாண்டுரங்கன் (அதிமுக), 2011 இல் கலையரசு (பாமக), 2016இல் ஏ.பி.நந்தகுமார் (திமுக) ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரச்னைகள்: அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட அணைக்கட்டு வட்டமானது 2013இல் ஏற்படுத்தப்பட்டது. எனினும், இதுவரை ஒரு வட்ட தலைநகருக்கு உரிய அந்தஸ்துகள் ஏற்படுத்தப்படாதது தொகுதியின் முக்கிய குறையாகும். குறிப்பாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட போதிலும், அதற்குரிய வசதிகள், மருத்துவர்கள், செலவிலியர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.

விவசாயம் பிரதானமாக நடைபெறும் நிலையில் விளைபொருள்களை சந்தைப்படுத்துவதற்குரிய மொத்த சந்தை, உழவர் சந்தை, வாணிபக் கிடங்கு போன்ற வசதிகளும் செய்து தரப்படவில்லை. தவிர, காவல் உட்கோட்டம், சார்பு நீதிமன்றம், அணைக்கட்டில் பேருந்து நிலையம் போன்றவை அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கையாகும். மலைக் கிராமங்களில் அதிகளவில் நடைபெறும் கள்ளச் சாராய விற்பனை முழுமையாக கட்டுப்படுத்தப்படாததும் தொகுதியின் மிக முக்கிய பிரச்னையாகும்.

5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மலைப்பகுதிகளிலுல்ள குருமலை, பீஞ்சமந்தை, பலாம்பட்டு ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.5 கோடியில் சாலை வசதி, 2 நடுநிலைப் பள்ளிகள், விளை பொருள்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த பயிற்சி மையம், கூட்டுறவு வங்கி போன்ற ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதும், அகரம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி, நாகநதியின் குறுக்கே பாலம் அமைப்பு, சாராய விற்பனையைத் தடுக்க அதிகளவில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை ஆகியவை முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

சாதி வாக்குகள்

அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதியைப் பொருத்தவரை சுமார் 40 சதவீத அளவுக்கு வன்னியர்கள் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஆதிதிராவிடர், அருந்ததியர்கள் சுமார் 25 சதவீத மும், இஸ்லாமியர்கள் 7 சதவீத அளவுக்கும், முதலியார்கள், நாயுடு, ரெட்டியார், செட்டியார் கிறிஸ்தவர்கள் தலா 5 சதவீத அளவுக்கும், மலைசாதியினர் (எஸ்டி) ஒரு சதவீதமும், இதர சாதியினர் 2 சதவீத அளவுக்கும் உள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலவரம்

அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதும், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு 10.5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதும் இந்த தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. அதன் காரணமாகவே கூட்டணிக்குள்ளேயே இத்தொகுதியை கைப்பற்றிட அதிமுகவும், பாமகவும் போட்டி போடுகின்றன. அதேசமயம், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரசு மீது நிலவும் அதிருப்திகள், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்டுள்ள திட்டப் பணிகள் போன்றவை திமுகவுக்கு பலம் சேர்க்கும் என அக்கட்சியும் கருதுகிறது.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியை அதிமுக கூட்டணியில் பாமக எதிர்நோக்கியுள்ளது. அவ்வாறு பாமகவுக்கு ஒதுக்கப்பட்டால் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் இளவழகன் போட்டியிடவும், அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டால் ஆவின் தலைவர் த.வேலழகன் ஆகியோர் போட்டியிடவும் வாய்ப்புள்ளது.

திமுகவை பொருத்தவரை தொகுதியை ஒதுக்கும்படி கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலர் பாபு கோரி வருகிறார். அதேசமயம், தற்போதைய எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் மீண்டும் போட்டியிடவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்குள் நிலவும் உள்கட்சி பூசலும் தொகுதியில் திமுகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இக்கட்சிகள் தவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டியிட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT