தொகுதிகள்

விராலிமலை: அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

2nd Mar 2021 12:48 PM | சி. உதயகுமார்

ADVERTISEMENT


சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், இருமுறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால் நட்சத்திரத் தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ளது விராமலை சட்டப்பேரவைத் தொகுதி.

இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 1971 முதல் 2016 வரை அதிமுக 8 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிகமுறை வென்று அதிமுகவின் கோட்டை என்ற பெயரையும் தக்க வைத்துள்ளது அக்கட்சி. வரும் தேர்தலில் மூன்றாவது முறையும் அதிமுக வெற்றி பெற்று சி. விஜயபாஸ்கர், மீண்டும் அமைச்சர் மகுடம் சூடுவாரா? என்பதே தொகுதி முழுவதும் பரவியுள்ள ஒன்றைக் கேள்வியாக உள்ளது.

தொகுதி நிலவரம் 

பெரும்பகுதி ஊரகப் பகுதிகளை கொண்டுள்ள இத்தொகுதியில், விராலிமலை, அன்னவாசல் என 2 ஒன்றியங்கள், அன்னவாசல், இலுப்பூர் பேரூராட்சி. விராலிமலை வட்டம் (கோமங்கலம் தவிர) குளத்தூர் வட்டம் (பகுதி) மணப்பாறை வட்டம் (திருச்சி மாவட்டம், பகுதி) மற்றும் விராலிமலை ஒன்றியம் 45 ஊராட்சிகள், அன்னவாசல் ஒன்றிய 34 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன, சுப்பிரமணியர் மலைக் கோயில், சித்தன்னவாசல், கொடும்பாளூர் மூவர் கோயில், முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர் பள்ளிவாசல், விராலிமலை, இலுப்பூர் தேவாலயம் என மும்மத வழிபாட்டுத் தலங்களையும், அதிக அளவு தொழிற்சாலைகளையும், கல்குவாரிகளையும் கொண்டுள்ளது. 

ADVERTISEMENT

இத்தொகுதியில் முக்குலத்தோர், ஊராளி கவுண்டர், தலித், முத்தரையர் மற்றும் இதர பிரிவினர், முஸ்லிம்கள் என அனைத்துப் பிரிவினரும் உள்ளனர்.

கடந்த தேர்தல்கள்

1977 இல் நடைபெற்ற  மறுசீரமைப்பில் குளத்தூர் தனி தொகுதியானது. பின்னர், 2009 மறுசீரமைப்பில் மீண்டும் விராலிமலை பொதுத் தொகுதியானது. குளத்தூர் தொகுதியாக இருந்தபோது இங்கு திமுகவைச் சேர்ந்த வீ.சா. இளஞ்செழியன், ரா.சு. கவிதைபித்தன் என்ற செல்வராஜ் ஆகியோரும் (இருமுறை), காங்கிரஸைச் சேர்ந்த  சின்னையா ஒரு முறையும், அதிமுகவைச் சேர்ந்த த.மாரிமுத்து தொடர்ந்து இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 

விராலிமலை தொகுதியில் டி.சி.வி.ராஜூ(1989), சி. குழந்தைவேல்(1991), ஆ. கருப்பாயி(2001), ந. சுப்பிரமணியன் (2006), சி. விஜயபாஸ்கர்(2011,2016) என அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 1996 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கவிதைப்பித்தன் வெற்றி பெற்றார். 

விராலிமலை தொகுதிக்குள்பட்ட இலுப்பூரைச் சேர்ந்த விஜயபாஸ்கர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். விராலிமலை தொகுதி எம்எல்ஏவாகவும், தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் உள்ள இவர், கடந்த 2011 தேர்தலில் திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதியை 39 ஆயிரத்து 309 வாக்குகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றார்.

நிறைவேற்றப்பட்டவை

கடந்த 10 ஆண்டுகளில்  விராலிமலையை தனி வட்டமாக ஏற்படுத்தியது, இலுப்பூரை கல்வி மாவட்டமாக்கியது, விராலிமலை முருகன் கோயிலுக்கு 4 கோடியில் மலைப்பாதை அமைத்தது, திருநல்லூர் கோரையாற்றின் குறுக்கே 9.25 கோடியில் பாலம், புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி, விராலிமலையில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், விராலிமலை - திருச்சி சாலையை சுமார் 6 கோடி செலவில் அகலப்படுத்தியது, விராலிமலையில் 3.18 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், இலுப்பூர், அன்னவாசலில் புதிய பேருந்து நிலையம், இலுப்பூரில் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், விராலிமலையில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். 

போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்

அதிமுக சார்பில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மூன்றாவது முறையாக களம் காணவுள்ளார். திமுக சார்பில் போட்டியிடலாம் என்று தொகுதி மக்கள் கூறி வரும் எம். பழனியப்பன், கடந்த 2 முறை விராலிமலை தெகுதியில் விஜயபாஸ்கரிடம் தோல்வியுற்றவர். தென்னலூர் என்று அழைக்கப்படும் திருநல்லூரைச் சேர்ந்த இவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

2011 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 15 ஆயிரத்து 383 வாக்குகள் பெற்று தோல்வி கண்டவர். கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது திமுகவில் இணைந்த எம். பழனியப்பன் 2016 பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் களம் கண்டு விஜயபாஸ்கரிடம் மீண்டும் 8 ஆயிரத்து 447 வாக்குகள் பின் தங்கி தோல்வி கண்டார்.  

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வரும் இவரின் பலம் தொகுதியில் உள்ள அனைவரிடமும் நன்கு அறிமுகமாகி அவர்களின் நல்லது கெட்டதுகளில் உறுதுணையாக இருப்பது, கடந்த இரண்டு முறை தோல்வியை தழுவியது என்பதையே தற்போது பலமாக கருதுகிறார்.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்

பல்வேறு பணிகள் விராலிமலை பேரவை தொகுதிக்குள் நடைபெற்று இருந்தாலும் மக்களின் கனவு திட்டமான புதிய ரயில் வழித்தடப் பாதை, அரசு கலைக்கல்லூரி, தேசியபறவையான மயில்கள் சரணாலயம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான விராலிமலையில் தீயணைப்பு நிலையம், விராலிமலை கிழக்கு பகுதி நான்கு வழிச்சாலையை குடைந்து 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்றுவர சிறு பாலம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றவில்லை, மேலும் 3 அரசு பொது மருத்துவமனை தொகுதிக்குள் இருந்தாலும் போதிய மருத்துவர்கள் இல்லாதது, போதிய உபகரணங்கள் இல்லாதது இப்பகுதி வாக்காளர்களிடம் குறையாக கூறப்பட்டு வருகிறது.

அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறுமா, 1996ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை 2021இல் திமுக மீண்டும் நிலை நிறுத்துமா என்ற யுத்த களம்தான் விராலிமலையில் தயாராகியுள்ளது. மற்ற கட்சிகள் ஆடுகளத்துக்கு மட்டுமே வரலாம்.

தற்போதைய வாக்காளர்கள்: ஆண் 1,10,810, பெண் 1,13,723, மூன்றாம் பாலினம்- 17, மொத்தம்:- 2,24,550.

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT