தொகுதிகள்

திருவள்ளூர்: தொகுதியை தக்க வைக்குமா திமுக?

2nd Mar 2021 05:38 PM | எஸ். பாண்டியன்

ADVERTISEMENT

தொகுதியின் சிறப்புகள்

திருவள்ளூர் நகராட்சி மற்றும் 108 வைணவத் தலங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோயில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்டவைகளை கொண்டது திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியாகும். 

அதுமட்டுமின்றி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சென்னையின் குடிநீர்த் தேவையை கணிசமாக பூர்த்தி செய்யக்கூடிய பூண்டி நீர்த்தேக்கம் ஆகியவையும் இந்த தொகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இடம் பெற்றுள்ள பகுதிகள்

ADVERTISEMENT

திருவள்ளூர் சட்டப்பேரவைத் தொகுதி, மாவட்டத் தலைநகரான திருவள்ளூர், திருவள்ளூர் வட்டத்தின் பெரும்பகுதி மற்றும் திருத்தணி வட்டத்தின் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அடங்கியதாகும். 

திருவள்ளூர் வட்டத்தில் அட்சன்புரம், பிளேஸ்பாலையம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாலையம், தோமூர், திருப்பேர்,  அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை,  மூவூர், நெய்வேலி, இராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு,  சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரனிசாம்பேட்டை, குன்னவலம், பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர், திருவள்ளூர்,  பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர்,

வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர்,  நயம்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அகரம், பானம்பாக்கம், ராமன் கோயில்,  மடத்துக்குப்பம், செஞ்சி,தென்காரணை, சிற்றம்பாக்கம்,  காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்கலம், அழிஞ்சிவாக்கம்,  மப்பேடு,  கீழ்ச்சேரி, கொண்டஞ்சேரி,  பேரம்பாக்கம், நரசிங்கபுரம்,  இருளஞ்சேரி,  குமாரஞ்சேரி, கூவம், பிள்ளையார்குப்பம்,  கோவிந்தமேடு,  உளுந்தை, தொடுகாடு, வயலூர், கொட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர்,  புதுப்பட்டு, சேலை மற்றும் திருப்பந்தியூர் கிராமங்கள். திருவள்ளூர் நகராட்சி மற்றும் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி.

திருவள்ளூர் நகர் பகுதி

திருத்தணி வட்டத்தில் அருங்குளம், மாமண்டூர்,  அரும்பாக்கம், குப்பம்,  ஆற்காடு, நெடம்பரம், பணப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி,  முத்துகொண்டபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராஜபுரம்,  அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு,  வியாசாபுரம், பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மபுரம், மணவூர்,  கபுலகண்டிகை, மருதவள்ளிபுரம், அரிச்சந்திரபுரம், ஜே.எஸ்.ராமபுரம்,  பெரிகளகத்தூர், ஒரத்தூர், லக்ஷ்மிவிலாஸபுரம், பாகசாலை,  சின்னமண்டலி மற்றும் களம்பாக்கம் கிராமங்கள்.

சமூக வாக்குகள்

ஆண் வாக்காளர்கள் - 130092, பெண்- 136620, திருநங்கைகள்- 22 என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் தாழ்த்தப்பட்டோர், வன்னியர் கணிசமாகவும், அதற்கடுத்த நிலையில் நாயுடு, முதலியார், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு சமுதாய அளவிலான வாக்குகள் சம அளவில் இருந்தாலும், தேர்தல் நேர வாக்குறுதி மற்றும் கூட்டணி அமைவதை பொருத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.

திருவள்ளூர் தொகுதியின் ஒரு பகுதி, நகர்ப்பகுதியாக உள்ளதால் வணிக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இத்தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. அதனால் நெல், கரும்பு, வாழை, மணிலா, மா மற்றும் கொய்யா உள்ளிட்ட பழப்பயிர்களும் அதிகளவில் சாகுபடி செய்யும் பகுதியாக உள்ளது.

பூண்டி நீர்த்தேக்கம்

நிறைவேற்றப்பட்ட பணிகள்

இத்தொகுதியில் பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொசஸ்தலை ஆற்றில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 தடுப்பணைகள், இவை தவிர பல்வேறு இடங்களில் பள்ளிக் கட்டடங்கள், சாலை உள்ளிட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பிரச்னைகள், எதிர்பார்ப்பு

திருவள்ளூர் மாவட்டத் தலைநகராக விளங்கும் திருவள்ளூர் நகராட்சியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடைத் திட்டம் நடந்து வருகிறது. இன்னும் முடிந்த பாடில்லை. அதேபோல் நாள்தோறும் திருவள்ளூர் நகருக்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் ஆண்டுகள் பல கடந்தும் அதற்கான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

திருவள்ளூர் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டமும் கிடப்பில் உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படாமல் உள்ளது. மேலும், மாவட்டத் தலைநகரில் அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கும் திட்டமும் கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. மேலும், கடந்த 8 ஆண்டுகளாக கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பது போன்ற இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள் உள்ளனர்.

கடந்த தேர்தல்கள்

1951முதல் 1957 வரையில் நடைபெற்ற இரு தேர்தல்களில் இத்தொகுதிக்கு இரட்டைத் தொகுதியாக இருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 1951 முதல் 2016 வரையில் நடந்த 15 தேர்தல்களில், 6 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும், 2 முறை காங்கிரஸும், தலா ஒரு முறை கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியும், த.மா.காவும் வெற்றி பெற்றுள்ளன.

இதில், கடந்த 2011- இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் பி.ரமணா போட்டியிட்டு 91,337 வாக்குகளுடன் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 2016- இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் 80 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கமாண்டோ அ.பாஸ்கரன் 75 ஆயிரத்து, 335 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

தற்போதைய நிலையில் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வரும் முன்னாள் நகராட்சித் தலைவர் மற்றும் கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கமாண்டோ பாஸ்கரன், திமுகவில் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சு.மணியின் மகனும், நகரச் செயலாளருமான சி.சு.ரவிசந்திரன், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் கொண்டஞ்சேரி ரமேஷ் ஆகியோர் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளனர்.

இதுவரை வென்றவர்கள், 2 ஆம் இடம் பெற்றவர்கள் விவரம்

இதில் 1951 முதல் 1957 வரையில் இரு தேர்தலில் இத்தொகுதிக்கு இரட்டை தொகுதியாக இருந்தது.

1951- எம்.தர்மலிங்கம் (கிஷான் மஸ்தூர் பிரஜா கட்சி),
          வி.கோவிந்தசாமி நாயுடு(கிஷான் மஸ்தூர் பிரஜா கட்சி)

1957- ஏகாம்பரமுதலியார்(காங்கிரஸ்);  வி.எஸ்.அருணாச்சலம்(காங்கிரஸ்)

1962- வி.எஸ்.அருணாச்சலம்(காங்கிரஸ்); எம்.துரைராஜ்(திமுக)

1967- எஸ்.எம்.துரைராஜ்(திமுக); வி.எஸ்.அருணாச்சலம்(காங்கிரஸ்)

1971- எஸ்.எம்.துரைராஜ்(திமுக); வி.எஸ்.அருணாச்சலம் (காங்கிரஸ்)

1977- எஸ்.பட்டாபிராமன்(அதிமுக); முனிரத்தினம் நாயுடு(ஜனதா கட்சி)

1980- எஸ்.பட்டாபிராமன்(அதிமுக); ஆர்.புருஷோத்தமன்(காங்கிரஸ்)

1984- எஸ்.பட்டாபிராமன்(அதிமுக); ஆர்.முனிரத்தினம்(திமுக)

1989- ஆர்.முனிரத்தினம்(திமுக);  எம்.செல்வராஜ்(அதிமுக- ஜெ)

1991- சக்குபாய் தேவராஜ்(அதிமுக); சு.சுப்பிரமணி(திமுக)

1996- சுப்பிரமணி என்கிற சி.சு.மணி(திமுக); ஜி.கனகுராசு(அதிமுக)

2001- டி.சுதர்சனம்(த.மா.கா); வி.ஜி.ராஜேந்திரன்(புதிய நீதி கட்சி)

2006- பி.சிவாஜி(திமுக); பி.ரமணா(அதிமுக)

2011- பி.வி.ரமணா(அதிமுக); பி.சிவாஜி(திமுக)

2016- வி.ஜி.ராஜேந்திரன்(திமுக); அ.பாஸ்கரன்(அதிமுக)            

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT