தொகுதிகள்

பாளையங்கோட்டை: உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா?

தொகுதியின் சிறப்பு

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமையைக் கொண்டது பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு சித்த மருத்துவக் கல்லூரி, நூற்றாண்டு பழமை வாய்ந்த கலை அறிவியல் கல்லூரிகள், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் அதிகம் உள்ளன. 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சரக டிஐஜி அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் என்று பல்வேறு முக்கிய அரசுத்துறை அலுவலகங்களும் இத்தொகுதிக்குள் இருக்கின்றன.

செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்துடன் கூடிய அண்ணா விளையாட்டு மைதானம், வ.உ.சி. மைதானம்,  திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் திருநெல்வேலிக்கான பல்வேறு அடையாளங்களும் பாளையங்கோட்டை நகருக்குள்ளேயே உள்ளன.

தொகுதி அமைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தின் மிகச்சிறிய சட்டப்பேரவைத் தொகுதியாகவும், மாநகராட்சிப் பகுதிகளைக் கொண்டதாகவும் பாளையங்கோட்டை தொகுதி உள்ளது.

பாளையங்கோட்டை, சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், மேலப்பாளையம், வண்ணார்பேட்டை, தியாகராஜநகர், மகாராஜநகர், வீரமாணிக்கபுரம், குலவணிகர்புரம், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

பாளையங்கோட்டை மத்திய சிறை

சமூக நிலவரம்

மேலப்பாளையம் பகுதியில் 97 சதவீதம் முஸ்லிம்களே வசிக்கின்றனர். இதுபோல் பாளையங்கோட்டை நகர்ப்புற பகுதியில் பெருமளவுக்கு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.

நாடார், பிள்ளைமார், யாதவர், தேவர் சமூகத்தினர் எண்ணிக்கையில் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர். அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. இதுதவிர பீடி தொழிலாளர்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளன.

வாக்காளர் விவரம்: இத்தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 193 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 38 ஆயிரத்து 511 பெண் வாக்காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 725 வாக்காளர்கள் உள்ளனர்.  389 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கடந்த தேர்தல்கள்

1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னர் இது பாளையங்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது. 1977 முதல் 2016 வரை இத் தொகுதியில் நடைபெற்ற 10 சட்டப்பேரவை தேர்தல்களில் 7 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. 2001, 2006, 2011, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் திமுக உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு வெற்றி பெற்றதன் மூலம் அமைச்சர் அந்தஸ்தைப் பெற்றார் டி.பி.எம்.மைதீன்கான்.

இதுவரை வென்றவர்கள்

1977 கே.மனோகரன் (அதிமுக)
1980 வீ.கருப்பசாமி பாண்டியன் (அதிமுக)
1984 ஷம்சுல் ஆலம் (திமுக)
1989 எஸ்.குருநாதன் (திமுக)
1991 பி.தர்மலிங்கம் (அதிமுக)
1996 முகமது கோதர் மைதீன் (திமுக)
2001 டி.பி.எம்.மைதீன்கான் (திமுக)
2006 டி.பி.எம்.மைதீன்கான் (திமுக)
2011 டி.பி.எம்.மைதீன்கான் (திமுக)
2016 டி.பி.எம்.மைதீன்கான் (திமுக)

மக்களின் எதிர்பார்ப்பு

தென் தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மத்திய, மாநில அரசுகள் பாளையங்கோட்டையில் திறந்துள்ளன. இதுதவிர பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.500 கோடிக்கும் மேலான பணிகள் பாளையங்கோட்டையில் நடைபெற்று வருகின்றன. இவை ஆளுங்கட்சியின் பிரசாரத்திற்கு பலம் சேர்க்கும்.

இத்தொகுதியின் நீண்ட நாள் பிரச்னைகளும் தீர்க்கப்படாமல் தொடர்ந்து வருகின்றன. முக்கிய போக்குவரத்து பகுதியான குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

தியாகராஜநகர் ரயில்வே பாலப்பணியும் முழுமையடையவில்லை. நகர்ப்புற பகுதிகளில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளால் மழைக் காலங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும் போதிய மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படாமல் உள்ளன.

போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்

இத்தொகுதியில் இம்முறையும் அதிமுக - திமுக நேரடியாக களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினர் மற்றும் அரசு ஊழியர்கள் வாக்கு வங்கியால் வெற்றிக்கனியை எளிதாக பறிக்க முடியும் என்பதால் திமுகவில் பலத்த போட்டி நிலவி வருகிறது. அதேநேரத்தில் கடையநல்லூரில் கடந்த தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமின்றி, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சி ஆகியவையும் பாளையங்கோட்டை தொகுதிக்கு ஆசைப்படுகின்றன. குறிப்பாக எஸ்டிபிஐ மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தங்களின் பிரதிநிதிகள் உதயசூரியன் சின்னத்தில்கூட போட்டியிட தயாராகியுள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிட இப்போதைய எம்.எல்.ஏ. டி.பி.எம்.மைதீன்கான், மாவட்டச் செயலர் மு.அப்துல்வஹாப் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேநேரத்தில் வழக்கம்போல் இல்லாமல் கிறிஸ்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

கிறிஸ்தவர்களில் இளைஞரணியைச் சேர்ந்த ஆரோக்கிய எட்வின், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன் ஆகியோர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர். மேலும், திமுகவின் வெற்றி உறுதி என்ற சூழல் நிலவுவதால் உதயநிதி ஸ்டாலின் இத்தொகுதியில் போட்டியிட வேண்டுமென இளைஞரணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிமுகவினரும் இத் தேர்தலில் வெற்றி வாகை சூடும் முனைப்பில் உள்ளனர். முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலர் ஜெரால்டு, மகபூப்ஜான் உள்ளிட்டோர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர். தொடர்ந்து 5 ஆவது முறையாக திமுக வெற்றி வாகை சூடுமா அல்லது திமுகவின் தொடர் வெற்றியை அதிமுக தட்டிப்பறிக்குமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT