தொகுதிகள்

ஆலங்குடி: மல்லுக்கு வரும் கூட்டணிக் கட்சிகள்

2nd Mar 2021 01:30 PM | அ. பார்த்திபன்

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி சட்டப் பேரவைத் தொகுதியை அதிமுக, திமுக மட்டுமல்லாது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்த முறை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தொகுதியை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றனர். 

தொகுதியின் அமைப்பு, சிறப்புகள்

ஆலங்குடி தொகுதியில் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் முன்பு ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை உள்ளது. தொகுதியின் அடையாளச் சின்னமாக உள்ள இந்தக் கோயிலானது, குதிரைக் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.

தொகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஏதும் இல்லை என்பதால், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. மழைநீரையும், நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பி இப்பகுதியில் சாகுபடிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இப்பகுதியில், நெல், வாழை, சோளம், கடலை உள்ளிட்ட பயிர்களும், மல்லிகை, காட்டுமல்லி, சம்மங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களும் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மா, பலா, தென்னை உள்ளிட்ட மரங்களும் அதிகளவில் இருந்தன. கஜா புயலின் கோரதாண்டவத்தில் இத்தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான மரங்கள் அழிந்தன. மேலும், குளிர், மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையும் எனக் கூறப்பட்டு வந்த மிளகு பயிரை, சமவெளிப் பகுதியான இத்தொகுதிக்கு உள்பட்ட வடகாடு, மாங்காடு, அணவயல் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து அதிகளவிலான விளைச்சலை பெற்று சாதித்துக் காட்டியுள்ளனர். 

திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளும், ஆலங்குடி, கீரமங்கலம் ஆகிய  2 பேரூராட்சிகளும், அறந்தாங்கி வட்டத்தில்  உள்ள அரசர்குளம் வருவாய்சரகம், பூவற்றக்குடி வருவாய்ச்சரகம், சிலட்டூர் வருவாய்ச்சரகங்களில் இருந்து 32 ஊராட்சிகளும் இணைந்துள்ளன.

சமூக நிலவரம்

தொகுதியில் முத்தரையர் சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்தபடியாக முக்குலத்தோர் உள்ளனர். கணிசமான எண்ணிக்கையில் இஸ்லாமியர், தலித், யாதவர், உடையார், நகரத்தார்கள் உள்ளிட்ட சமூகத்தினர் உள்ளனர்.

அரசியல் நிலவரம்

தொகுதியில் 1962-க்குப் பிறகு நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் பெற்ற வாக்குகள்-72,992. அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஞான.கலைச்செல்வம் பெற்ற வாக்குகள்-63,051.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மருத்துவர் சதீஷை இத்தொகுதியின் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. ஆனால்,  பல்வேறு போராட்டங்களை நடத்தி சிவ.வீ.மெய்யநாதன் போட்டியிடும் வாய்ப்பை பெற்று வெற்றி பெற்றார். தற்போதும், கட்சித் தலைமை தனக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சிவ.வீ.மெய்யநாதன்.

கடந்த முறை அறிவிக்கப்பட்டு வாய்ப்பை இழந்த மருத்துவர் சதீஷ், ஒன்றியச்செயலர் ஞான. இளங்கோவன் உள்ளிட்டோரும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

   குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட
ஐயனார் கோயில் குதிரை சிலை   

இதற்கிடையில், திமுக கூட்டணியில், ஆலங்குடி தொகுதியை மதிமுகவிற்கு பெற்றுவிடுவார் வைகோ என்ற நம்பிக்கையில்  அக்கட்சியின் மாவட்டச் செயலர் க.சந்திரசேகரன் தேர்தல் வேலைகளை முன்பே தொடங்கி விட்டார் என்று மதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல, முன்பு வெற்றி பெற்றுள்ள தொகுதி என்று இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியும் இத்தொகுதியை எதிர்பார்த்துள்ளனர். அதிமுகவில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த ஞான.கலைச்செல்வம், முன்னாள் அமைச்சர் அ.வெங்கடாசலத்தின் மகன் ராஜபாண்டி, குழ.சண்முகநாதன், வழக்குரைஞர் நெவளிநாதன், காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் அதிமுகவில் இணைந்த தர்ம.தங்கவேல் உள்ளிட்டோரும் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளனர்.

இதற்கிடையில், இத்தொகுதியில், 2011-ல் திமுக கூட்டணியில் வாய்ப்பை பெற்றும், 2016-ல் தனித்து நின்று, 2 முறையும்  தோல்வியடைந்த பாமக  துணைப்பொதுச்செயலர் எஸ். அருள்மணி, மீண்டும் பாமகவிற்கு இத்தொகுதி கிடைத்துவிடும் என நம்பிக்கையில் உள்ளார்.

தொகுதியின் தேவைகள்

தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிகளிவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுறது. ஆண்டின் சில மாதங்கள் தவிர பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால்,விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால், இப்பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க திருவரங்குளம் வனப்பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள தைலமரங்களை அகற்றிவிட்டு, அப்பகுதியில் பல்லுயிர்க் காடுகள் உருவாக்க வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி, அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்ட காவிரி-குண்டாறு-வைகை இணைப்புத் திட்டத்தில் ஆலங்குடி பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அம்புலி ஆற்றை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை தொகுதி மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

தற்போதைய வாக்காளர்கள்: ஆண்- 1,06,955, பெண்- 1,09,971, மூன்றாம் பாலினம்- 4, மொத்தம்- 2,16,930.

இதுவரை வென்றவர்கள்

1962: முருகையன் (தி.மு.க.) - 31,438 (வெற்றி)
           மங்கப்பன் (காங்)    - 18,472  

1967: கே.வி.சுப்பையா (தி.மு.க.)  - 32,984 (வெற்றி)
          டி.ஏ.எஸ்.தங்கவேல் (காங்) - 32,148

1971: கே.வி.சுப்பையா (தி.மு.க.) - 43,279 (வெற்றி)
          டி.ஏ.எஸ்.தங்கவேல் (காங் ) - 35,397

1977: டி.புஷ்பராஜ் (காங்)  -  37,634 (வெற்றி)
         பி.திருமாறன் (அ.தி.மு.க.)  -    27,059

1980: பி.திருமாறன் (அ.தி.மு.க.)- 56,206 (வெற்றி)
          டி.புஷ்பராஜ் (காங்) -  44,605

1984:  ஏ.வெங்கடாசலம் (அ.தி.மு.க.) - 74,202 (வெற்றி)
           ஏ.பெரியண்ணன் (தி.மு.க.) - 37,173

1989: கே.சந்திரசேகரன் (தி.மு.க.)- 37,361 (வெற்றி)
          டி.புஷ்பராஜ் (காங்)  - 33,141

1991: எஸ்.சண்முகநாதன் (அ.தி.மு.க.)- 88,684 (வெற்றி)
         எஸ்.சிற்றரசு (தி.மு.க.) - 38,983

1996: ஏ.வெங்கடாசலம் (சுயேச்சை)- 35,345 (வெற்றி)
          எஸ்.ராஜசேகரன் (கம்யூ)- 34,693

2001: ஏ.வெங்கடாசலம் (அ.தி.மு.க.) -  59,631 (வெற்றி)
           எஸ்.ஏ.சூசைராஜ் (தி.மு.க.) -  42,900

2006: எஸ்.ராஜசேகரன் (இ.கம்யூ)-   60,122 (வெற்றி)
          ஏ.வெங்கடாசலம் (அ.தி.மு.க.) -  50,971.

2011: கு.ப. கிருஷ்ணன்(அதிமுக) -  57,250(வெற்றி).
           எஸ். அருள்மணி(பாமக) - 52,123.  

2016:  சிவ.வீ. மெய்யநாதன்(திமுக)  -72,992  (வெற்றி)
           ஞானகலைச்செல்வன் (அதிமுக) - 63,051

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT