தொகுதிகள்

விளாத்திகுளம்: அதிமுகவின் எஃகு கோட்டையை கைப்பற்றுமா திமுக?

எஸ். சங்கரேஸ்வரமூர்த்தி

தொகுதியின் சிறப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கும் விளாத்திக்குளம், புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சில பகுதிகளை உள்ளடக்கிய விளாத்திக்குளம் தொகுதியில் பிராதன தொழில் மானாவாரி விவசாயம் மட்டுமே.

இதுதவிர, வேம்பார் முதல் தருவைகுளம் வரை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரையும், மீன்பிடித் தொழில், உப்பளத் தொழில் நடைபெற்று வருகின்றன. மேலும், நெசவுத் தொழில், கரிமூட்டம் தொழில் என பன்முகத்தன்மையுடன் தொகுதி பரந்து விரிந்து கிடக்கிறது.

கடந்த தேர்தல்கள்

இதுவரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் 1977, 1980, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 என 8 முறையும், 2019 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு முறையும் என மொத்தம் 9 முறை அதிமுக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. திமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் அசைக்க முடியாத எஃகு கோட்டைகளில் ஒன்றாக விளாத்திகுளம் பேரவைத் தொகுதி இருந்து வருகிறது.

இதுவரை வென்றவர்கள்

விளாத்திக்குளம் பேரவைத் தொகுதியில் கடந்த 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி. செல்வராஜ் வெற்றி பெற்றார். 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எம். ரத்தினசபாபதி வெற்றி பெற்றார்.

1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.கே. பெருமாளும், 1984 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எஸ். குமரகுருபர ராமநாதனும் வெற்றி பெற்றனர். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரனும், 1991 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த கனகவள்ளியும் வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கே. ரவிசங்கர் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2001 தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த என்.கே. பெருமாளும், 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பி. சின்னப்பனும், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஜீ.வி.மார்க்கண்டேயனும், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே. உமா மகேஸ்வரியும் வெற்றி பெற்றனர். மேலும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பி. சின்னப்பன் வெற்றி பெற்று தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

கட்சிகளின் வாக்கு வங்கி 

விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட நாகலாபுரம், குளத்தூர், வேம்பார், சூரன்குடி, வைப்பாறு உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலையோர கிராமப் பகுதிகள் அனைத்தும் திமுக வாக்கு வங்கி உள்ள பகுதிகள். புதூர் பேரூராட்சி, விளாத்திகுளம் பேரூராட்சி மற்றும் பசுவந்தனை ஆகிய பகுதிகள் அதிமுக வாக்கு வங்கி உள்ள பகுதிகள். எட்டயபுரம் பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமமுக வாக்கு வங்கி உள்ள பகுதியாக உள்ளது.

மக்களின் கோரிக்கைகள்

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பது வெங்காயம், மிளகாய் வத்தல், மல்லி மற்றும் சிறுதானியப் பயிர்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும். கீழ வைப்பாறு, சிப்பிகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளது. அப்பகுதிகளை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் உள்ளிட்டவை ஆகும்.

இதுதவிர, வேம்பாரை சுற்றுலாத் தலமாக அறிவித்து கடல் பொருள்கள் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு கடற்கரையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கவும் மற்றும் ரத்த வங்கி வசதி ஏற்படுத்த வேண்டும். எட்டயபுரத்தை மையமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். விளாத்திகுளத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். நாகலாபுரம், புதூர் பகுதிகளை உள்ளடக்கி நாகலாபுரத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். விளாத்திகுளத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.

அரசியல் நிலவரம்

ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால் இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பி. சின்னப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், மாவட்டச் செயலராக உள்ள அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தனது நண்பரின் மகளான ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சித் தலைவி ஆர். சத்யாவை தொகுதியில் நிறுத்த முயற்சி செய்து வருகிறார். இதுதவிர, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் காந்தி என்ற காமாட்சியும் சீட் கேட்டு முயற்சி செய்து வருகிறார்.

திமுக சார்பில் அண்மையில் அக்கட்சியில் இணைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் மட்டுமே களத்தில் உள்ளார். அவரும் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் சூழல் உள்ளது.

இதுதவிர, அமமுக சார்பில் சீனிச்செல்வி, பூலோக பாண்டியன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அமமுக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைந்தால் நாடார் மற்றும் நாயக்கர் சமுதாய வாக்குகளை கவரும் வகையில் நடிகை ராதிகா சரத்குமாரை இந்தத் தொகுயில் களம் இறக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் விவரம்

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 548 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 991 பெண் வாக்காளர்களும், 4 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT