தொகுதிகள்

வால்பாறை(தனி): தொகுதி த.மா.காவுக்கு ஒதுக்கப்படுமா?

என்.ஆர்.மகேஷ்குமார்

கோவை மாவட்டத்தில் எழில் கொஞ்சும் நிலப் பகுதிகளை உடைய தொகுதி வால்பாறையாகும். வால்பாறை வட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால், மலைப்பகுதியில் 25 சதவீத வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதூர் போன்ற சமவெளிப் பகுதிகளிலேயே உள்ளனர். அதுபோல, மலைப் பகுதியையும், சமவெளிப் பகுதியையும் ஒருங்கே கொண்ட சட்டப்பேரவை தொகுதி வால்பாறை. பொள்ளாச்சி தொகுதியுடன் இரட்டைத் தொகுதியாக இருந்த வால்பாறை, கடந்த 1962 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வால்பாறை வட்டம் முழுவதும். பொள்ளாச்சி வட்டத்தில் நாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஆத்துப் பொள்ளாச்சி, மார்ச்சிநாயக்கன்பாளையம், சிங்காநல்லூர், வெக்கம்பாளையம், பெத்தநாய்க்கனூர், எஸ்.நல்லூர், பில்சின்னம்பாளையம், சோமந்துறை, தென்சித்தூர், பெரியபோடு, காளியாபுரம், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கம்பாளப்பட்டி, அர்த்தநாரிபாளையம், ஜல்லிப்பட்டி, தொரயூர், அங்காலகுறிச்சி கிராமங்கள்.

ஆனைமலை (பேரூராட்சி), ஓடையகுளம் (பேரூராட்சி), வேட்டைக்காரன்புதூர் (பேரூராட்சி), கோட்டூர் (பேரூராட்சி) முழுவதும்.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 98,617, பெண்கள் - 1,06,699, மூன்றாம் பாலினத்தவர் -19, மொத்தம் - 2,05,335.

தொழில், சமூக நிலவரம் 

தேயிலைத் தொழிலை நம்பியே வால்பாறை உள்ளது. பல முன்னணி நிர்வாகத்தினருக்கு சொந்தமான பெரிய எஸ்டேட்கள் தவிர 20 சிறிய எஸ்டேட்களும் உள்ளன. இதனால், மலைப் பகுதியில் உள்ள வாக்காளர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தோட்டத் தொழிலாளர்கள். இந்தத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான வியாபாரிகள் உள்ளனர். சமவெளிப் பகுதிகளில் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தால் தென்னை, நெல் விவசாயம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில், டாப்சிலிப் மலைப்பகுதி, யானைகள் வளர்ப்பு முகாம், பல்வேறு அணைக்கட்டுகள் என சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. வால்பாறை தொகுதியில் உள்ள ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, ஆழியாறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
 
முந்தைய தேர்தல்கள்

கடந்த 1962 முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்தத் தொகுதியில் இதுவரை அதிமுக அதிகபட்சமாக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட்  2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
 
1962   - பொன்னய்யா (காங்கிரஸ்)
1967   - இ.ராமசாமி (திமுக)
1971   -இ.ராமசாமி (திமுக)
1977   - ஆர்.எஸ்.தங்கவேலு (அதிமுக)
1980   - ஏ.டி.கருப்பையா (இ.கம்யூ.)
1984   - வி.தங்கவேலு (காங்கிரஸ்)
1989   - பி.லட்சுமி (அதிமுக. ஜெ)
1991   - ஏ.ஸ்ரீதரன் (அதிமுக)
1996   - வி.பி.சிங்காரவேலு (திமுக)
2001   - கோவை தங்கம் (த.மா.கா.)
2006   - கோவை தங்கம் (காங்கிரஸ்)
2011   - மா.ஆறுமுகம் (இ.கம்யூ.)
2016  - வி.கஸ்தூரிவாசு (அதிமுக)

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த வி.கஸ்தூரி வாசு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் த.பால்பாண்டியை 8,244 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை தனி வட்டமாக பிரிக்கப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்த தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்துக்குச் சொந்தமான எஸ்டேட் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. படகு இல்லம், தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வால்பாறையில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி. திட்டம் உருவாகக் காரணமாக இருந்த வி.கே.பழனிச்சாமி கவுண்டருக்கு ஆழியாறில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தொகுதி முழுவதும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆழியாறு அணை தூர்வாரப்பட்டுள்ளது. குடிமராமத்துத் திட்டம் மூலம் பல்வேறு கால்வாய்கள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத நீண்ட நாள் கோரிக்கைகள்

வால்பாறையில் கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கப்பாதை, நல்லமுடி காட்சி முனை, நீராறு அணை, ஆழியார் அணை, சோலையாறு அணை போன்ற பல்வேறு சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட பகுதிகள் அமைந்துள்ளன. வால்பாறைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் வால்பாறை இதுவரையிலும் சுற்றுலாத் தளமாக அறிவிக்கப்படவில்லை.

வால்பாறை ஷேக்கல்முடி, ஹைபாரஸ்ட், வால்பாறையின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளை சந்திக்க கோவைக்கு செல்ல 100 கி.மீக்கும் மேல் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட்டால் வால்பாறை மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எண்ணுகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படவில்லை. கேரளத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 408 தினக்கூலி வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் ரூ. 336 மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்த ரூ. 5 கூலி உயர்வு இரண்டு ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை. கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த ஆறுமுகம் பயன்படுத்திய அலுவலகத்தை கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் பொதுமக்கள் எம்எல்ஏவிடம் மனு கொடுக்க முடியாமலும் குறைகளைக் கூற முடியாமலும் இருக்கின்றனர்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

வரும் தேர்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக அணியில் அதிமுகவே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர். அதிமுகவே போட்டியிடுமானால் தற்போதைய எம்எல்ஏ கஸ்தூரி வாசுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். அதேநேரம் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸும் இந்த தொகுதியை கேட்டு வருகிறது. அந்த கட்சி சார்பில் இந்தத் தொகுதியில் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்துள்ள கோவை தங்கம் போட்டியிட வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியுற்ற தற்போதைய நகர பொறுப்பாளர் த.பால்பாண்டியுடன், திப்பம்பட்டி ஆறுச்சாமி, கோவை தளபதி இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகின்றனர். ஒருவேளை கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்டுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்த அக்கட்சியின் பொருளாளர் ஆறுமுகத்துக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT