தொகுதிகள்

கடலூர்: அமைச்சருக்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?

எஸ்.​ முத்​துக்​கு​மார்

தொகுதியின் சிறப்பு

விவசாயம், மீன்பிடித் தொழில், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என்று பல்வேறு வகையான தொழில் அமைப்புகளைக் கொண்டது கடலூர் சட்டப்பேரவைத் தொகுதி. மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் கடலூர், பாரம்பரியமான தொகுதியாக 1952 ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது. இங்கு இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.

தொகுதி, சமூக நிலவரம்

கடலூர் நகராட்சியின் 45 வார்டுகளும், கடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் பெரும்பகுதிகளும் இந்த தொகுதிக்குள் உள்ளடங்கியது. இதனால், நகர்ப்புறத்தில் அனைத்து ஜாதி, மதத்தினரும் பரவலாகவே உள்ளனர். கிராமப்புறங்களில் வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்களும், கடற்கரையோரப் பகுதிகளில் மீனவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். சில கிராமங்களில் ரெட்டியார்கள் மற்றும் பிற சாதியினரும் உள்ளனர். 

வாக்காளர் நிலவரம்

கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,38,364 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள்-1,14,616, பெண்கள்-1,23,701, இதரர்- 47 பேர்.

கடந்த தேர்தலில் வென்றவர்கள்

1957: பி.ஆர்.சீனிவாச படையாட்சி (காங்கிரஸ்) - 21,100
          சம்பந்தம் (சிஆர்சி) - 17,044

1962: பி.ஆர்.சீனிவாச படையாட்சி (காங்கிரஸ்) - 27,557
         ஆர்.சாம்பசிவ ரெட்டியார் (திமுக)- 21,147

1967: இரா.இளம்வழுதி (திமுக) - 35,093
         பி.ஆர்.சீனிவாச படையாட்சி (காங்கிரஸ்) - 27,846

1971:  ஆர்.கோவிந்தராஜ் (திமுக) - 35,219
           பி.ஆர்.சீனிவாச படையாட்சி (காங்கிரஸ் (ஓ)) - 30,909

1977:  கே.அப்துல்லத்தீப் (அதிமுக) - 24,107
           பாபுகோவிந்தராஜன் (திமுக) - 22,280

1980: பாபுகோவிந்தராஜன் (திமுக) - 40,539
         ஏ.ரகுபதி (அதிமுக) - 37,398

1984: வி.சி.செல்லப்பா (காங்கிரஸ்) - 53,759
         வி.கிருஷ்ண மூர்த்தி (திமுக)   - 37,063

1989: இள.புகழேந்தி (திமுக ) - 42,790
          பி.ராதாகிருஷ்ணன் (காங்.) - 22,408

1991: பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் (காங்.) - 51,459
          இள.புகழேந்தி (திமுக) - 36,284

1996: இள.புகழேந்தி (திமுக ) - 74,480
         கே.வி.ராஜேந்திரன் (காங்.) - 25,853

2001: இள.புகழேந்தி (திமுக) - 54,671
         பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் (தமாகா) - 54,637

2006: கோ.ஐயப்பன் (திமுக ) - 67,003
          ஜி.ஜெ.குமார் (அதிமுக) - 60,737

2011: எம்.சி.சம்பத் (அதிமுக) - 85,953
         இள.புகழேந்தி (திமுக) -  52,275

2016:

1. எம்.சி.சம்பத்  (அதிமுக)   - 70,922
2. இள.புகழேந்தி (திமுக)    - 46,509
3. பழ.தாமரைக்கண்ணன் (பாமக) - 16,905
4. ஏ.எஸ்.சந்திரசேகரன் (மநகூ) - 20,608

பதிவான மொத்த வாக்குகள் - 1,72,688
வெற்றி வித்தியாசம் - 24,413

 

கட்சிகளின் செல்வாக்கு

தொகுதியைப் பொருத்தவரையில் திமுக 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்த அதிமுக அதன்பின்னர் 2011, 2016 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது. தொகுதியில், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கணிசமான செல்வாக்குடன் திகழ்கின்றனர். இவர்கள் வெவ்வேறு கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் ஓட்டு பரிமாற்றம் வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கும்.

தேர்தல் வாக்குறுதிகள்

கடந்த தேர்தலின்போது அமைச்சராக போட்டியிட்ட எம்.சி.சம்பத் 10 வாக்குறுதிகளை அளித்தார். அதில், 4 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்ட நிலையில் மீதமுள்ளவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. தொழில்துறை அமைச்சராக உள்ள போதிலும் மாவட்டத்திற்கென எந்த புதிய தொழிற்சாலையும் கொண்டு வராமல் இருப்பது, கடலூர் தொகுதியில் போதுமான சாலை வசதி இல்லாதது, தொகுதி வளர்ச்சி இல்லாதது, வெளிவட்டச் சாலை இல்லாதது, புதைசாக்கடைத் திட்டம் முழுமையாக முடிக்கப்படாமை போன்றவை பெரிய குறைகளாக உள்ளன.

தொகுதியின் பிரச்னைகள்

ஆங்கிலேயர்கள் கடலூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தபோதிலும் இங்கு போதுமான வளர்ச்சி இல்லையென்றே சொல்லலாம். சுமார் 5 மாவட்டங்களின் வடிகாலாக கடலூர் இருப்பதால் இயற்கை பாதிப்புகளை அடிக்கடி சந்திக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு நிரந்தர திட்டம் தீட்டப்படவில்லை. செய்த சில பணிகளும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் பணம் வீணானதோடு கூடுதல் தொல்லையை அளித்து வருகிறது. சுமார் 10 ஆண்டுகளாக அமைச்சரின் தொகுதியாக இருந்த போதிலும் வளர்ச்சி என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. முந்திரி, பலா போன்றவை அதிகமாக உற்பத்தியாகும் நிலையிலும் அதனை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்பாட்டில் இல்லை. கடலூர் தொகுதியை முன்மாதிரியாக மாற்ற நினைப்பவர்களையே தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போட்டியிட வாய்ப்புள்ளவர்கள்

தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணியில் மீண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் அதிமுகவில் போட்டியிடலாம் அல்லது அவரது மகன் பிரவீனை களம் இறக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் மற்ற கட்சியினர் பெரும்பாலும் கடலூரை விரும்பவில்லை. எனினும், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஒதுக்கீடு செய்யப்பட்டால் வேறு வழியின்றி நிற்கும் நிலையே கூட்டணிக் கட்சிக்கு உள்ளது.

திமுக கூட்டணியில், திமுகவில் பலத்த போட்டி நிலவுகிறது. சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், இள.புகழேந்தி, நிர்வாகிகள் இர.விஜயசுந்தரம், விஎஸ்எல்.குணசேகரன் உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர். எனினும், புதுமுகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

திமுக கூட்டணியிலும் மற்ற கட்சியினர் பெரிய அளவில் கடலூருக்கு விருப்பம் தெரிவிக்கவில்லையென்றே கூறப்படுகிறது. இதனால், அதிமுக-திமுக இடையே நேரடிப் போட்டியே நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மூன்றாவது முறையாக அதிமுகவிற்கு எம்.சி.சம்பத் வெற்றியைத் தேடித் தருவாரா என்பதை வரப்போகும் தேர்தல் முடிவுகள் தெரிவித்துவிடும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT