தொகுதிகள்

பவானிசாகர்(தனி): அதிமுக 7 முறை வென்ற தொகுதி

டி. சாம்ராஜ்


1957 ஆம் ஆண்டு உருவாகிய சத்தியமங்கலம் தொகுதி, மறுசீரமைப்பில் 2011 ஆம் ஆண்டு பவானிசாகர் தனித் தொகுதியாக மாறியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் தமிழ்நாடு - கர்நாடகத்தை இணைக்கும் பாலமாக இந்த தொகுதி உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் நீர் ஆதாரமான பவானிசாகர் அணை, பண்ணாரி அம்மன் கோயில் போன்றவை இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
 
தொகுதியில் அமைந்துள்ள பகுதிகள்

சத்தியமங்கலம் வட்டம் (பகுதி): அருளவாடி, மல்லன்குழி, தொட்டகாஜனூர், சிக்க காஜனூர், தாளவாடி, மரூர், இக்கலூர், திங்களூர், கூத்தம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர், ஹாசனூர், நெய்தாளபுரம், தெய்கனாரை, கரளவாடி, மடஹள்ளி, பையண்ணபுரம், பனகஹள்ளி, ஏரகனஹள்ளி, தொட்ட முதுக்கரை, கெட்டவாடி, கொங்கஹள்ளி, தலமலை, தாசரிபாளையம், சிக்கரசம்பாளையம், பட்டவர்த்தியம்பாளையம், ராஜன்நகர், புதுப்பீர் கடவு, புங்கர், கொத்தமங்கலம், இக்கரைத்தத்தப்பள்ளி, பகுத்தாம்பாளையம், இக்கரைநெகமம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை, சதமுகை, கோணமுலை, அக்கரை நெகமம், பூசாரிபாளையம், அக்கரை தத்தப்பள்ளி, தொட்டம்பாளையம், முடுக்கந்துரை, தொப்பம்பாளையம், கரைதொட்டம்பாளையம், செண்பகப்புதூர், இண்டியம்பாளையம், மாக்கினாம்கோம்பை, அரசூர், உக்கரம், வின்னப்பள்ளி, குரும்பபாளையம், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, பனையம்பள்ளி, சுங்ககாரன்பாளையம், புங்கம்பள்ளி, தச்சுபெருமாபாளையம், நல்லூர், மாராயிபாளையம், மாதம்பாளையம், புஞ்சை புளியம்பட்டி கிராமங்கள்.

பண்ணாரி அம்மன் கோவில்

கெம்பநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), சத்தியமங்கலம் (நகராட்சி), அரியப்பம்பாளையம் (பேரூராட்சி), பவானிசாகர் (பேரூராட்சி), புஞ்சை புளியம்பட்டி (நகராட்சி).

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,26,755, பெண்கள் - 1,32,355, மூன்றாம் பாலினத்தவர் 8, மொத்தம் - 2,59,118.

சமூக, பொருளாதார நிலவரம்

பவானிசாகர் தொகுதியில் மூன்றில் இரண்டு பங்கு இடம் மலைப் பகுதி கிராமங்களை உள்ளடக்கியது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் சந்தன கடத்தல் வீரப்பன், அவனது கூட்டாளிகள் பதுங்கி வாழ்ந்துள்ளனர். காடகநல்லி, நெய்தாளபுரம், கெத்தேசால் ஆகியவை வீரப்பனால் பாதிக்கப்பட்ட கிராமங்கள். சந்தன வீரப்பன் நடமாட்டத்தால் மலைவாழ் மக்களுக்கு பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு, பிழைப்புத்தேடி சமவெளி பகுதிக்குச் சென்றனர்.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு இங்குள்ள விளைநிலங்களின் விலை பன்மடங்காக உயர்ந்தது. தற்போது மலைவாழ் மக்கள் விவசாயத்தை முக்கியத் தொழிலாக செய்து வருகின்றனர். தாளவாடி, கடம்பூர், கேர்மாளம் மலைப் பகுதியில் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, மலை காய்கறிகள் அதிக அளவில் விளைகின்றன. பவானி சாகர் பகுதியில் வாழை, மல்லி, முல்லைப் பூக்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுடி செய்யப்படுகின்றன. பிற பகுதிகளில் கால்நடை வளர்ப்பு, நெசவுத் தொழில்கள் நடைபெறுகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானி சாகர் அணை, பண்ணாரி அம்மன் கோவில் போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

தொகுதி வாக்காளர்களில் 25 சதவீதம் பேர் அருந்ததியர்கள். ஒக்கிலிய கவுடர், நாயக்கர், வேட்டுகவுண்டர் இன மக்கள் தலா 10 சதவீதம் உள்ளனர். 5 சதவீதம் பேர் பழங்குடியினர். பிற இனத்தவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

பவானிசாகர் அணை

கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள்

இந்தத் தொகுதியில் அதிமுக அதிகபட்சமாக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக நான்கு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

1967  - வி.கே.இராமராசன் - திமுக
1971 - வி. கே. இராமராசன் - திமுக     
1977  -வி. கே. சின்னசாமி  - அதிமுக
 1980 - ஜி. கே. சுப்ரமணியம்  - அதிமுக 
1984 - வி. கே. சின்னசாமி  - அதிமுக
1989 - வி. கே. சின்னசாமி  -அதிமுக 
1991 - வி. கே. சின்னசாமி - அதிமுக 
1996 - வி. ஏ. ஆண்டமுத்து - திமுக 
2001 - பி. சிதம்பரம் - அதிமுக 
2006 - ஓ. சுப்ரமணியம்  -திமுக 
2011 - பி. எல். சுந்தரம்  -  இந்திய கம்யூனிஸ்ட் 
2016 - சு. ஈஸ்வரன் - அதிமுக

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள்

பவானி சாகர் தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் சாலை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பவானி சாகர் அணையின் குறுக்கே ரூ.8 கோடி செலவில் புதிய பாலம், பவானி ஆற்றில் 8 தடுப்பணைகள், மலைப் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 1261 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், பவானி சாகரில் ரூ.8 கோடி செலவில் அருங்காட்சியகம் ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

தொகுதியின் பிரச்னைகள்

பவானி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மலையாளி இன மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்கப்பட வேண்டும், அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி வசதி போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஈஸ்வரன், மாவட்ட மகளிரணி துணைச் செயலர் தமிழ்ச்செல்வி, சத்தியமங்கலம் பகுதி மாணவரணித் தலைவர் ஆடிட்டர் சிவகுமார் ஆகியோர் வாய்ப்பு கேட்டு வருகின்றனர் எதிரணியில் திமுக சார்பில் உக்கரம் பகுதிச் செயலர் யு.சி.நாகேஷ், ராஜநகர் கிளைச் செயலர் குணசேகரன் உள்ளிட்டோர் வாய்ப்பு கேட்டிருக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அந்தக் கட்சியும் இந்தத் தொகுதியை எதிர்பார்த்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

SCROLL FOR NEXT