தொகுதிகள்

அம்பாசமுத்திரம்: தொகுதியை தக்கவைக்குமா அதிமுக?

DIN


தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரவருணி, மணிமுத்தாறு, கோறையாறுகள் அம்பாசமுத்திரம் தொகுதியில்தான் உள்ளன. பாபநாசம், பாபநாச சாமி கோவில், திருப்புடைமருதூர், மன்னார்கோவில் குலசேகர ஆழ்வார் கோவில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்கள் இங்குள்ளன. பாபநாசம் அகஸ்தியர் அருவி, முண்டந்துறை புலிகள் காப்பகம், காரையாறு, மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், சேர்வலாறு மற்றும் பாபநாசம் நீர் மின் நிலையங்கள், திருநெல்வேலியின் முதன்மையான அணைக்கட்டுகளான காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைக்கட்டுகள், விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ், சேரன்மகாதேவி சன் காகித ஆலை உள்ளிட்டவை தொகுதியில் அடங்கியுள்ளன.

விவசாயம் தொகுதியின் முதன்மையான தொழிலாக உள்ளது. அம்பாசமுத்திரத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம் 1937 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு இதுவரை சுமார் 20 புதுவகை நெல்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அம்பை 16 விவசாயிகள் அதிகம் விரும்பிப் பயிரிடும் நெல் ரகமாகும்.

பாபநாசம் சிவன் கோயில்

மேலும், கூனியூரில் மண்பாண்டத் தொழிலும், பத்தமடையில் பாய் தொழிலும், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் நெசவுத் தொழிலும் பிரதானமாக உள்ளது. பத்தமடை பாய் உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். அம்பாசமுத்திரம் தொகுதியில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய இரு நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம் ஆகிய ஏழு பேரூராட்சிகள் அமைந்துள்ளன.

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி மற்றும் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளன. அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் அயன் திருவாலீஸ்வரம், அடையக்கருங்குளம், அயன்சிங்கம்பட்டி,  பிரம்மதேசம், ஜமீன் சிங்கம்பட்டி, கோடாரங்குளம், மன்னார்கோவில், சிவந்திபுரம், தெற்கு பாப்பான்குளம், சிவந்திபுரம், வாகைக்குளம், வைராவிகுளம், வெள்ளங்குளி ஆகிய ஊராட்சிகளும், சேரன்மகாதேவி ஒன்றியத்தில் வெங்கட்ரங்கபுரம், கரிசல்பட்டி, உலகன்குளம்,  திருவிருத்தான்புள்ளி, கூனியூர், வடக்குக் காருக்குறிச்சி, புதுக்குடி, தெற்கு அரியநாயகிபுரம், வீரவநல்லூர், மலையான்குளம், பொட்டல், மூலச்சி ஆகிய ஊராட்சிகளும், பாப்பாக்குடி ஒன்றியத்திற்குள்பட்ட அரிகேசவநல்லூர், திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், சாட்டுப்பத்து ஆகிய ஊராட்சிகளும் உள்ளன. அம்பாசமுத்திரம் தொகுதியின் எல்லையாக திருநெல்வேலி, ஆலங்குளம், நான்குனேரி தொகுதிகளின் எல்லைகள் அமைந்துள்ளன.

மணிமுத்தாறு அணை

தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றவர்கள்:

1952 - சொக்கலிங்கம் (சுயேச்சை)
1957 - ஜி. கோமதி சங்கர தீட்சிதர் (காங்கிரஸ்)
1962 - ஜி. கோமதி சங்கர தீட்சிதர் (காங்கிரஸ்)
1967 - ஜி. கோமதி சங்கர தீட்சிதர் (காங்கிரஸ்)
1971 - என். சங்குமுத்துத் தேவர் (காங்கிரஸ்)
1977 - ஈஸ்வரமூர்த்தி என்ற சொர்ணம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
1980 - ஈஸ்வரமூர்த்தி என்ற சொர்ணம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
1984 - பாலசுப்பிரமணியன் (அதிமுக)
1989 - கு. ரவி அருணன் (காங்கிரஸ்)
1991 - ரா. முருகையாபாண்டியன் (அதிமுக)
1996 - இரா. ஆவுடையப்பன் (திமுக)
2001 - எம். சக்திவேல் முருகன் (அதிமுக)
2006 - இரா. ஆவுடையப்பன் (திமுக)
2011 - இசக்கி சுப்பையா (அதிமுக)
2016 - ஆர். முருகையாபாண்டியன் (அதிமுக)

2016 தேர்தலில் பதிவான வாக்குகள்:

ஆர். முருகையாபாண்டியன் (அதிமுக - வெற்றி) வாக்குகள் - 78,555
இரா. ஆவுடையப்பன் (திமுக) வாக்குகள் - 65,389
வித்தியாசம்-13,166

மணிமுத்தாறு அருவி

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு:

1952 -இல் சுயேட்சை வெற்றி பெற்ற நிலையில் 1957, 1962, 1967, 1971, 1989 ஆகிய ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1977, 1980 ஆகிய இரண்டு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 1996, 2006 ஆகிய இரண்டு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 1984, 1991, 2001, 2011, 2016 ஆகிய ஐந்து ஆண்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

கட்சிகளின் வெற்றி வாய்ப்பு:

அம்பாசமுத்திரம் தொகுதியில் இதுவரை அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளன. திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளன. ஆனால் 1996 முதல் அதிமுக - திமுகவிற்கு இடையே மட்டுமே நேரடி போட்டி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 2021 தேர்தலிலும் அதிமுக - திமுகவிற்கு இடையே நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலையில் 2021 தேர்தலில் திமுக கூட்டணியுடன் இருப்பது திமுகவிற்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால்  2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து தொகுதியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் அதிமுக தீவிரமாக உள்ளது. ஆனால் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். முருகையா பாண்டியன் தனது உடல்நிலை காரணமாக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்தான் அதிமுகவின் வெற்றியை தீர்மானிப்பார் என்ற நிலையே உள்ளது. இந்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைப்பதாக நம்பிக்கையும் வாக்காளர்களிடையே உள்ளது.

தொகுதியின் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள்:

அம்பாசமுத்திரம் தொகுதியின் முதன்மைத் தொழிலாக விவசாயம் உள்ள நிலையில் விவசாயம் சார்ந்த எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன. அம்பாசமுத்திரத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம், காய்கறி மற்றும் பூக்கள் சேகரித்து வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட நிலையங்கள், ஆண்டு தோறும் ஜூன் முதல் தேதி பாபநாசம் அணையிலிருந்து விவசாயத்திற்கு தவறாமல் தண்ணீர் திறந்துவிடப்படுவது, விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை உறுதிப்படுத்துவது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மதுரா கோட்ஸ் ஆலையில் நிரந்தரப் பணியாளர்கள் குறைக்கப்பட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகரித்த நிலையில் ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பே உள்ளது. கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் பகுதிகளில் கைத்தறி நெசவு நலிந்த நிலையில் நெசவாளர்களின் வாரிசுகள் வேலை வாய்ப்பிற்காக பெரு நகரங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. கூனியூரில் நடைபெறும் மண்பாண்டம் மற்றும் பத்தமடை பாய் உள்ளிட்ட தொழில்களுக்கு அரசு அங்கீகாரம், இணைய வழியில் பொருள்களை விற்பனை செய்ய உதவி வழங்க வேண்டும். மொத்தத்தில் விவசாயம், நெசவு உள்ளிட்டத் தொழில்கள் நசிந்து வரும் நிலையில் இந்தத் தொகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கனவாகவே உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிந்த நிலையில் தென்காசியில் இயங்கி வந்த மாவட்டத் தலைமை மருத்துவமனையை அம்பாசமுத்திரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்வதோடு, சிகிச்சைக்கான நோய்ப் பிரிவுகள் அதிகரிப்பதால் அதற்கான மருத்துவர்களின் எண்ணிக்கை மற்றும் வார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2021 தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்: தொகுதியில் அதிமுக, திமுக பிரதான கட்சிகளாக உள்ளன. கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியிலும், பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியிலும் இருப்பதால் அவை வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை.

நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு மோ.செண்பகவள்ளி என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட பார்வர்டு பிளாக், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை தேர்தலில் கூட்டணி அமைப்பதை பொருத்து வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்புள்ளது.

அம்பாசமுத்திரம் தொகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களான பாபநாசம், காரையாறு, மணிமுத்தாறு, மாஞ்சோலை ஆகியவை உள்ளன. ஆனால் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இதுவரை எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. மாஞ்சோலை வனப்பகுதியில் 1929 முதல் தனியார் தேயிலைத் தோட்டம் செயல்பட்டு வரும் நிலையில் அதன் ஒப்பந்தம் 2028 ஆம் ஆண்டு நிறைவடைகிறது. இதையடுத்து தேயிலைத் தோட்டத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்பது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காரையாறு அணையில் நீண்ட நாள்களாக இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்தை மீண்டும் இயக்க வேண்டும், காரையாறு, சேர்வலாறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களான காணி இன மக்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ள நிலையில் பட்டா வழங்கி அவர்கள் வனப்பகுதியில் குடியிருப்பதை உறுதிப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காணி இன மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை: 2021 ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி அம்பாசமுத்திரம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,44,048 ஆகும். 1,18,443 ஆண் வாக்காளர்களும், 1,25,601 பெண் வாக்காளர்களும், 4 மற்றவர்களும் உள்ளனர். தொகுதியில் 294 வாக்குச் சாவடிகள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT