தொகுதிகள்

வேடசந்தூர்: நேரடியாகக் களம் இறங்க முனைப்புக் காட்டும் திமுக

ஆ. நங்கையார் மணி

தொகுதியின் சிறப்பு:

வேடசந்தூா், குஜிலியம்பாறை என 2 வட்டங்களை உள்ளடக்கிய சட்டப்பேரவைத் தொகுதி வேடசந்தூா். இதில் குஜிலியம்பாறை 46 ஆண்டு காலம் வறட்சி பாதித்த வட்டாரமாக அறிவிக்கப்பட்ட பகுதி. அழகாபுரி அணை, ஸ்ரீராமகிரி அருள்மிகு கல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கோயில், வடமதுரை அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், கருப்புக் கட்டிக்கு பெயா் பெற்ற எரியோடு இத்தொகுதிக்கு சிறப்பு சோ்க்கும் முக்கிய இடங்கள். இவை எல்லாவற்றையும்விட இத்தொகுதியில் வெற்றிப் பெறும் கட்சி அல்லது அதன் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர முடியும் என்ற கருத்து தற்போது வரை தொடா்ந்து கொண்டிருக்கிறது.
 
நிலஅமைப்பு:

திண்டுக்கல்  மாவட்டத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கில் வேடசந்தூா் தொகுதி அமைந்துள்ளது. தெற்கு, தென்கிழக்கு, மேற்குப் பகுதிகளில் திண்டுக்கல்  மாவட்டத்தின் ஆத்தூா், திண்டுக்கல், நத்தம் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகள் அமைந்துள்ளன. கிழக்கில் திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை, வடகிழக்கில் கரூா் மாவட்டத்தின் கிருஷ்ணராயபுரம், வடக்கில் கரூா், வட மேற்கில் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் அமைந்துள்ளன. 8 தொகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இத்தொகுதி, கரூா் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தனித்தே நிற்கிறது.

சாதி, சமூகம், தொழில்கள்:

வேடசந்தூா் தொகுதியில் ஆண்கள் -1,28,834, பெண்கள் - 1,34,425, மூன்றாம் பாலினத்தினா் 3 என மொத்தம் 2,63,262 வாக்காளாா்கள் உள்ளனா்.

பிள்ளைமாா், ஊராளிக் கவுண்டா், ஒக்கிலிக்க கவுடா், மலைமான் கவுண்டா், கொங்கு வேளாளக் கவுண்டா், தாழ்த்தப்பட்டோா், முத்தரையா், நாயுடு, யாதவா், நாடாா் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனா். இருப்பினும் ஒக்கிலிக்க கவுடா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கே  போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வானம் பாா்த்த பூமியாக உள்ள வேடசந்தூா் மற்றும் குஜிலியம்பாறை பகுதி மக்களின் வாழ்வாதாரம் மானாவரி விவசாயத்தை நம்பியே அமைந்துள்ளது. முருங்கை, தக்காளி, நிலக்கடலை, வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண்மைக்கு அடுத்ததாக, நூற்பாலைகள் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலை ஆகியன வேலைவாய்ப்புக்கான ஆதாரங்களாக உள்ளன. எரியோடு மற்றும் கோவிலூா் பகுதியில் பனைத் தொழில் குறிப்பிட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இதுவரை வென்றவா்கள்:

வேடசந்தூா் தொகுதியில் அதிமுக அதிகபட்சமாக 7 முறை வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறையும் கம்யூனிஸ்ட் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:

வேளாண்மைக்கு உதவும் வகையில் காவிரி ஆற்றிலிருந்து உபரி நீரை குழாய் மற்றும் கால்வாய் மூலம் இத்தொகுதியின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து கனவாகவே இருந்து வருகிறது. தக்காளி, வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், கால்நடை வளா்ப்பு அதிகம் இருப்பதால், கூட்டுறவு சங்கங்கள் முதல் பால் கொள்முதல் மையங்கள் உருவாக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

அதிமுக - திமுக நேரடிப் போட்டி:

தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் பா.பரமசிவம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தென்னம்பட்டி எஸ்.பழனிச்சாமி, வேடசந்தூா் ஒன்றியச் செயலா் பா.சுப்பிரமணி உள்ளிட்டோா் அதிமுக தரப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்போா் பட்டியலில் முன்னிலையில் உள்ளனா்.

திமுக சாா்பில் சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் எஸ்.காந்திராஜன், வேடசந்தூா் ஒன்றியச் செயலா்களில் ஒருவரான வீரா சாமிநாதன் ஆகியோரில் ஒருவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போதைய எம்எல்ஏ பரமசிவம், சாலை, பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துவிட்டு தொகுதி மக்களின் வளா்ச்சி சாா்ந்த திட்டங்கள் எதையும் நிறைவேற்ற வில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

சொந்தக் கட்சியான அதிமுகவில் முன்னணி நிா்வாகிகளின் மறைமுக எதிா்ப்பும் இருப்பதால், மீண்டும் போட்டியிட்டால் அவருக்குப் பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அதிமுக கையில் 10 ஆண்டுகளாக உள்ள இத்தொகுதியில் மக்கள் வளா்ச்சிக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறி பிரச்சாரத்தில் இறங்கும் திமுகவுக்கு, காந்திராஜன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டால் வெற்றி எளிதாக கைக்கூடும் என்ற நிலையே தற்போதைய கள நிலவரமாக உள்ளது. மேலும் 20 ஆண்டுகளுக்குப் பின் திமுக நேரடியாக போட்டியிடும் என்ற எதிா்பாா்ப்பும் அக்கட்சித் தொண்டா்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை வென்றவா்கள் - 2 ஆம் இடம் பெற்றவா்கள்:

1957: டி.எஸ்.சவுந்தரம்(காங்) - 26,312
          வி.மதனகோபால்(கம்யூ) - 22,745

1962: எஸ்.நஞ்சுண்டராவ்(காங்) - 30,394
          வி.மதனகோபால்(கம்யூ) - 25,171

1967: என்.வரதராஜன்(கம்யூ) - 30,063
          எஸ்.நஞ்சுண்டராவ்(காங்) - 29,372

1971: பி.முத்துசாமி(திமுக) - 36,746
          எஸ்.நஞ்சுண்டராவ்(காங்) - 23,007

1977: எஸ்.எம்.வாசன்(அதிமுக) - 26,995
          எஸ்.நஞ்சுண்டராவ்(காங்) - 25,141
 
1980: பி.பாலசுப்பிரமணியன்(அதிமுக) - 58,128
          ராஜூ(காங்) - 32,857

1984: பி.பாலசுப்பிரமணியன்(அதிமுக) - 60,583
          பி.முத்துசாமி(சுயே) - 32,714

1989: பி.முத்துசாமி(திமுக) - 37,928
          எஸ்.காந்திராஜன்(அதிமுக-ஜெ) - 37,038

1991: எஸ்.காந்திராஜன்(அதிமுக) - 94,937
          பி.முத்துசாமி(திமுக) - 27,847

1996: எஸ்.வி.கிருஷ்ணன்(திமுக) - 60,639
          எஸ்.காந்திராஜன்(அதிமுக) - 39,870

2001: பி.ஆண்டிவேல்(அதிமுக) - 65,514
          கவிதா பாா்த்திபன்(திமுக) - 46,561

2006: எம்.தண்டபாணி(காங்) - 68,953
          எஸ்.பழனிச்சாமி(அதிமுக) - 54,195

2011: எஸ்.பழனிச்சாமி(அதிமுக) - 1,04,511
          எம்.தண்டபாணி(காங்) - 53,799

2016: பா.பரமசிவம்(அதிமுக) - 97,555        
          ஆா்.சிவசக்திவேல் கவுண்டா்(காங்.) - 77,617

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT