தொகுதிகள்

திருச்செந்தூர்: தொகுதியைத் தக்க வைக்கத் துடிக்கும் திமுக

27th Feb 2021 04:19 PM | கே. சுப்பிரமணியன்

ADVERTISEMENT

முருகனின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகியவற்றை உள்ளடக்கியது திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி.

திருச்செந்தூர் பேரூராட்சி உட்பட 7 பேரூராட்சிகள், காயல்பட்டினம் மூன்றாம் நிலை நகராட்சி, 17 கிராம ஊராட்சிகளைக் கொண்ட திருச்செந்தூர் பேரவைத் தொகுதியில் மீனவ கிராமங்கள், நெல் விவசாயம், வாழை விவசாயம், வெற்றிலை விவசாயம், முருங்கை விவசாயம், உப்பு உற்பத்தி என பன்முகத் தன்மைகளை கொண்ட தொழில்கள் உள்ளன.

கடந்த தேர்தல்கள்:

இந்தத் தொகுதியில் கடந்த 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் விவசாயத் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.டி. ஆதித்தன் வெற்றி பெற்றார். அதன்பிறகு 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எஸ். செல்வராஜன் வெற்றி பெற்றார். 1967 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த இ. பெர்னான்டோவும், 1971 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஜி.ஆர். எட்மன்டும் வெற்றி பெற்றனர்.

ADVERTISEMENT

அதன்பிறகு 1977 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆர். அமிர்தராஜியும், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எஸ். கேசவ ஆதித்தனும், 1984 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தனும் வெற்றி பெற்றனர்.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கே.பி. கந்தசாமி வெற்றி பெற்றார். அதன்பிறகு 1991 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஏ. செல்லத்துரை வெற்றி பெற்றார். 1996 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எஸ். ஜெனிபர் சந்திரன் வெற்றி பெற்று மீன்வளத் துறை அமைச்சரானார்.

அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அமைச்சரானார். பின்னர் திமுகவுக்கு சென்ற அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல், 2011 மற்றும் 2016 ஆண்டு பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றவர் என்ற சாதனைக்குரியவராகத் திகழ்ந்து வருகிறார்.

மக்களின் பிரச்னைகள்:

கோயில் நகரமான திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி வசதிகள், போதுமான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி என அனைத்தும் காணல் நீராகவே உள்ளன.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப்பணி, கழிவு நீரோடை இல்லாதது, ஹோட்டல்களின் கழிவுகள் கடலில் கலப்பது என சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதேபோன்ற நிலைதான் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும், தசரா விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இங்கு கழிவறை என்பதே கேள்விக்குறியான ஒன்று.

தாமிரவருணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் அணைக்கு உள்பட்ட தென்கால் கால்வாய் மூலம் திருச்செந்தூர் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 13 குளங்களுக்கு தண்ணீர் வருகிறது. இதன் மூலம் நெல், வாழை, வெற்றிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. உடன்குடி பகுதியில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகிறது.

ஆத்தூர் வெற்றிலை கொடி விவசாயம் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் போதுமான தண்ணீர் இல்லாதது, குளப்பாசனம் போன்றவை குறைந்த காரணத்தால் தற்போது குறைவான அளவிலேயே வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது.

தங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கையைத் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அரசு இதுவரை தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்று கூறுகின்றனர் வெற்றிலை விவசாயிகள்.

உடன்குடியில் தமிழக அரசு அமைத்து வரும் அனல்மின் நிலையம் அமையும் போது அப்பகுதியை சேர்ந்தோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கும் இப்பகுதி மக்கள், குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் கூடுதலாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் வளர்ச்சி அடையும் என காத்திருக்கின்றனர்.

உடன்குடி அனல்மின் நிலையம் மற்றும் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக கூறுகின்றனர் மீனவர்கள். உடன்குடி பகுதிக்கு என தாமிரவருணி ஆற்றில் இருந்து தனி கால்வாய் அமைத்து குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கின்றனர் உடன்குடி பொதுமக்கள். நாசரேத்தில் மூடியே கிடக்கும் அரசு நூற்பாலையை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பல ஆண்டாக இருந்தும் இதுவரை நிறைவேற்றப்படாத நிலை உள்ளது.

அரசியல் நிலவரம்:

தொடர்ச்சியாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வரும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தனது தேர்தல் கால வாக்குறுதியாக புதை சாக்கடை திட்ட நிறைவேற்றம், திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோவில் மாற்றம், உடன்குடி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக புதிதாக குளம், இதற்காக தாமிரவருணி ஆற்றில் இருந்து தனியாக கால்வாய் அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தபோதிலும் இவை அனைத்தும் தற்போது வரை வாக்குறுதியாகவே உள்ளதாக தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இருப்பினும், திமுக சார்பில் 2021 தேர்தலிலும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனே களமிறங்குவார் என அக்கட்சி நிர்வாகிகள் அடித்துக் கூறுகின்றனர். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரை விட 26 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதால் இந்த முறையும் வெற்றிக் கனியை பறித்து தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற முழு வீச்சில் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஈடுபட்டு  வருகிறார். மேலும், இஸ்லாமியர் அதிகமுள்ள காயல்பட்டினம் இந்தத் தொகுதிக்குள் வருவதால் திமுகவுக்கு ஆதரவு நிலை நீடித்து வருகிறது.

அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதி முன்னாள் செயலர் வடமலை பாண்டியன், தற்போதைய மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ளது. கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் கட்சிக்கு புதியவர், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது போன்றவற்றை கட்சியின் தலைமைக்கு சுட்டிக்காட்டும் பணியில் உள்ளூர் வாசிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இருப்பினும், மாவட்டத்தில் இந்தத் தொகுதியை பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கும் பட்சத்தில் அங்கு மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சசிகலா புஷ்பா போட்டியிட வாய்ப்பு உள்ளது. அமமுக சார்பில் தற்போதைய மாவட்டச் செயலரான பி.ஆர். மனோகரன் களம் இறங்க முயிற்சி செய்து வருகிறார்.

திருச்செந்தூர் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 69 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 268 பெண் வாக்காளர்களும், 38 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 375 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags : election 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT