தொகுதிகள்

திருத்துறைப்பூண்டி(தனி): கூட்டணி கட்சிகளுக்குள் போட்டி

27th Feb 2021 04:36 PM | ஏ. ரவி

ADVERTISEMENT


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதி, திருத்துறைப்பூண்டி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி.  

உலக புகழ்பெற்ற முத்துப்பேட்டை(லகூன்) அலையாத்திக் காடுகள், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் ஆகிய சுற்றுலாத் தலங்களையும், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில், தில்லைவிளாகம் ராமர் கோவில்,  திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில், ஜாம்பவானோடை தர்கா உள்ளிட்ட சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களையும் உள்ளடக்கியுள்ளது இத்தொகுதி.

வாக்காளர்கள் எண்ணிக்கை: ஆண்கள் - 1,17,209; பெண்கள் - 1,21,924; மூன்றாம் பாலினத்தவர் -3; மொத்தம் 2,39,136.

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோயில்

நில அமைப்பு: வடக்கில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியாலும், கிழக்கே வேதாரண்யம் தொகுதியாலும், மேற்கே பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி தொகுதிகளாலும் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் தெற்கே வங்கக் கடல் உள்ளது.

திருத்துறைப்பூண்டி நகராட்சியின் 24 வார்டுகளையும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளையும், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 32 ஊராட்சிகளையும், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளையும், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது இத்தொகுதி.

சாதி, தொழில் அமைப்பு:  ஆதிதிராவிடர், அகமுடையர், முத்தரையர் பெரும்பான்மை சமூகத்தினர். வெள்ளாளர், நாயுடு, யாதவர், செட்டியார்,  இஸ்லாமியர்கள் பரவலாக வசிக்கின்றனர். இது முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தொகுதி.

முத்துப்பேட்டை அலையாத்திக் காடு

கடந்த தேர்தலில் வென்றவர்கள், 2 ஆம் இடம் பெற்றவர்கள்:

1962 - சுப்பையா (இந்திய கம்யூனிஸ்ட்) : வேதையன் (காங்கிரஸ்)
1967 - என். தர்மலிங்கம் (திமுக) : மணலி சி. கந்தசாமி (இந்திய கம்யூனிஸ்ட்)
1971 - மணலி சி. கந்தசாமி (இந்திய கம்யூனிஸ்ட்) : தாயுமானவன் (காங்கிரஸ்)
1977 - பி. உத்திராபதி (இந்திய கம்யூனிஸ்ட்) : என். குப்புசாமி (திமுக)
1980 - பி. உத்திராபதி (இந்திய கம்யூனிஸ்ட்) : வேதையன் (காங்கிரஸ்)
1984 - பி. உத்திராபதி (இந்திய கம்யூனிஸ்ட்) : அர்ஜூனன் (அதிமுக)
1989 - ஜி. பழனிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்) : குப்புசாமி (திமுக)
1991 - ஜி. பழனிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்) : வேதையன் (காங்கிரஸ்)
1996 - ஜி. பழனிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்) : கோபால்சாமி (காங்கிரஸ்)
2001 - ஜி. பழனிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்) : எம். பூங்குழலி (திமுக)
2006 - கே. உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்) : ஏ. உமாதேவி (அதிமுக)
2011 - கே. உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்) : பி. செல்வதுரை (காங்கிரஸ்)
2016 - பா. ஆடலரசன் (திமுக) : உமா மகேஸ்வரி (அதிமுக)

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரும்புக் கோட்டையாகக் கருதப்பட்டது இத்தொகுதி. 1971 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 10 முறை வென்று, சுமார் 45 ஆண்டுகள் இத்தொகுதியை தன் வசம் வைத்திருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.  ஏதேனும் ஒரு திராவிடக் கட்சிகளுடன் தேர்தல் பயணங்களைத் தொடர்ந்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இருபெரும் திராவிடக் கட்சிகளையும் தவிர்த்து மக்கள் நலக் கூட்டணி அமைத்து களம் கண்டது. இதனால், 45 ஆண்டு காலமாக தன் வசம் வைத்திருந்த திருத்துறைப்பூண்டி தொகுதியை திமுகவிடம் பறிகொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

முத்துப்பேட்டை, ஜாம்பவனோடை தர்கா

திமுக கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இத்தொகுதியை மீண்டும் தங்கள் வசமாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளது. அதேநேரத்தில், 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் வசமான இத்தொகுதியை இழக்கக் கூடாது என்ற நிலைப்பாடு திமுகவுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் அதிமுக நேரடியாக களம் காணவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், முத்துப்பேட்டை பகுதியில் பாஜகவுக்கு உள்ள செல்வாக்குக் காரணமாக அதிமுக அணியில் இத்தொகுதியை பாஜக விரும்பி கோர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரச்னைகள்:

திருத்துறைப்பூண்டி தொகுதியின் நீண்டகால பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது போக்குவரத்து நெருக்கடி. இங்கு நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண 5 ஆண்டுகளுக்கு முன்பு நாகை, திருவாரூர், மன்னார்குடி சாலைகளை இணைக்கும் புறவழிச் சாலை திட்டம் தொடங்கப்பட்டது.

ADVERTISEMENT

இத்திட்டப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது, பிறவிமருந்தீசர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் சந்தை மதிப்பு தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையால் தொடக்க நிலையிலேயே பணிகள் தடைபட்டுவிட்டன. இதனால், தொடர்ந்து வரும் போக்குவரத்து நெருக்கடி இங்கு பெரும் பிரச்னையாக உள்ளது.

நகரில் உள்ள 32 குளங்களுக்குமான நீர் வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் குளங்கள் பொதுமக்களுக்கு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. எரிவாயு தகன மேடை அமைக்க ரூ. 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணிகள் பாதியிலேயே தடைபட்டுள்ளன. புதை சாக்கடைத் திட்டம் அறிவிப்புடன் கைவிடப்பட்டுள்ளது.

கோடியக்கரை - வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி வழியே தஞ்சாவூருக்குச் செல்லும் 110 கி.மீட்டர் தொலைவு சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும் என்ற திட்டம், அறிவிப்புடன் தடைபட்டுள்ளது. நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் உள்ள 72 ரயில்வே கேட்டுகளுக்கு கேட் கீப்பர்கள் நியமிக்கப்படாததால் தொலை தூர ரயில் சேவை எட்டாக்கனியாகவே உள்ளது.

எதிர்பார்ப்புகள்: 

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி, சிடி ஸ்கேன் பிரிவு, இருதய மற்றும் சிறுநீரக இயல் சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு.

அறிவிக்கப்பட்டபடி, முத்துப்பேட்டையைத் தனி வட்டமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள்(லகூன்) பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையிலும், இப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு உரிய எந்த கட்டமைப்பையும் இதுவரை பெறாமல் உள்ளது. இங்கு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை விரைந்து மேற்கொண்டு, அரசுக்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய சுற்றுலாத் தலமாக இப்பகுதியை மாற்ற வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.  

தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெறும் இப்பகுதியில் கயிறு தொழிற்சாலையும், தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையும், வைக்கோல் மூலம் அட்டைப் பெட்டிகள் தயார் செய்யும் தொழிற்சாலையையும் அரசு ஏற்படுத்தி, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், இப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளன.
 

Tags : election 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT