தொகுதிகள்

நான்குனேரி: தொகுதியை தக்கவைக்குமா அதிமுக?

சி.நா.கிருஷ்ணமாச்சாரியார்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள நான்குனேரி தொகுதியில் களக்காடு புலிகள் காப்பகம், 108 வைணவத் தலங்களான நான்குனேரி வானமாமலைப் பெருமாள் கோயில், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில், விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைத் தளம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், களக்காடு தலையணை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இத்தொகுதியில் உள்ள களக்காடு, திருக்குறுங்குடி பகுதியில் விளையும் ஏத்தன் ரக வாழைத்தார்கள் கேரளத்தினரால் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விவசாயத் தொழிலாளர்கள், கால்நடை வளர்ப்போர், பீடி சுற்றும் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. இங்குள்ள இரு பஞ்சாலைகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

சமூக நிலவரம்: 2019-இல் இடைத் தேர்தல் நடைபெற்ற நான்குனேரி தொகுதி தமிழகத்தில் பேசப்படும் தொகுதியாக மாறிவிட்ட நிலையில், இத்தொகுதியில் உள்ள களக்காட்டில் அண்மையில் நடைபெற்ற அதிமுக மகளிரணி கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டபின் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

2006 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தற்போதைய ராதாபுரம் தொகுதியில் உள்ள வள்ளியூரின் ஒரு பகுதி இத்தொகுதியில் இருந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் வள்ளியூர், ராதாபுரம் தொகுதிக்குச் சென்றது. பாளையங்கோட்டை ஒன்றியத்தின் 90 சதவீத ஊராட்சிகள் நான்குனேரி தொகுதிக்குள் சேர்க்கப்பட்டதால், நாடார் சமுதாயத்தினர் பெரும்பான்மையினராக உள்ள இத்தொகுதியில், மறவர் சமுதாய வாக்குகளும் கணிசமான அளவுக்கு உயர்ந்துவிட்டன.

இத்தொகுதியில் நாடார், தாழ்த்தப்பட்டோர், மறவர், யாதவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் சமுதாய வாக்குகள் கணிசமான அளவில் உள்ளன.

1952 முதல் 2016 வரையிலான சட்டப்பேரவைத் தேர்தல், ஹெச். வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் 2019-இல் நடைபெற்ற இடைத்தேர்தல் என 16 தேர்தல்களில் அதிமுக 1980, 1984, 1991, 2001, 2011, 2019 என 6 முறையும், காங்கிரஸ் 1952, 1957, 1962, 1967, 2006, 2016 என 6 முறையும், 1971, 1989-இல் திமுகவும், 1977-இல் ஜனதா கட்சியும், 1996-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 

இத்தொகுதியில் 2019 அக்டோபரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ரூபி ஆர். மனோகரன் 61,932 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

கடந்த தேர்தல்களில் வென்றவர்கள்; 2 ஆம் இடம் பெற்றவர்கள்

1957: எம்.ஜி. சங்கர்(காங்கிரஸ்);  மாடசாமி (சுயேச்சை)

1962:  எம்.ஜி. சங்கர்(காங்கிரஸ்);  மாடசாமி (சுதந்திரா)

1967: துரை பாண்டியன்(காங்கிரஸ்); கணபதி நாடார் (திமுக) 

1971: கணபதி(திமுக); தவசிக்கனி(காங்கிரஸ்)

1977: ஜான் வின்சென்ட்(ஜனதா); டி. வெள்ளையா(திமுக)

1980: ஜான் வின்சென்ட்(அதிமுக); ஜே. தங்கராஜ்(காங்கிரஸ்)

1984: ஜான் வின்சென்ட்(அதிமுக); இ. நம்பி(திமுக)

1989: ஆச்சியூர் மணி(திமுக); ப. சிரோன்மணி(காங்கிரஸ்)

1991: நடேசன் பால்ராஜ்(அதிமுக); ஆச்சியூர் மணி(திமுக)

1996: எஸ். வி. கிருஷ்ணன்(கம்யூ.); கருணாகரன்(அதிமுக)

2001: எஸ். மாணிக்கராஜ் (அதிமுக); வி. ராமச்சந்திரன்(ம.த.தே.)

2006: எச். வசந்தகுமார் (காங்கிரஸ்); எஸ். பி.சூரியகுமார் (அதிமுக)

2011: ஏ. நாராயணன்(அதிமுக); எச். வசந்தகுமார் (காங்கிரஸ்)

2016 : எச். வசந்தகுமார் (காங்கிரஸ்); மா. விஜயகுமார்(அதிமுக) 

2019 இடைத்தேர்தல்: வெ. நாராயணன்(அதிமுக); ரூபி ஆர். மனோகரன்(காங்கிரஸ்)

வாக்காளர்கள்: நான்குனேரி தொகுதியில் 1,35,803 ஆண் வாக்காளர்கள், 1,40,544 பெண் வாக்காளர்கள். 9 திருநங்கைகள் என மொத்தம் 2,76,356 வாக்காளர்கள் உள்ளனர்.

அரசியல் நிலவரம்: நாடார் சமூகத்தினரே பெரும்பான்மையினராக உள்ள தொகுதி என்பதால் அந்த சமுதாயத்தினரே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெறும் தொகுதி. விதிவிலக்காக 1989-இல் யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆச்சியூர் மணி (திமுக), 1996-இல் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.வி. கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் வெற்றி பெற்ற பெருமையும் உண்டு.

நிறைவேறிய, நிறைவேறாத திட்டங்கள்:

இத்தொகுதியில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தூர்வாரப்படாத குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 2019 இடைத்தேர்தலுக்குப் பின் தொகுதியில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் வாக்குறுதிகளான களக்காடு கீழப்பத்தை, சிதம்பரபுரம் புறவழிச்சாலை திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.

இது தவிர்த்து கடந்த 15 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவிதமான திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தொழில் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பெயரளவுக்குக் கூட தொழில்சாலைகள் தொடங்கப்படவில்லை.

வேலைவாய்ப்புக்கு வழியில்லாததால் இப்பகுதி மக்கள் திருப்பூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வேலைதேடிச் செல்லும் நிலையே உள்ளது.

நான்குனேரி வழியாக 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து சென்றாலும் அவைகளில் பெரும்பாலானவை அங்கு நின்று செல்வதில்லை. பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. மலையடிவாரத்தில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தும் நிலை கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் சுற்றுலாப் பகுதியாக அறிவிக்கப்பட்டும் அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. தொகுதிக்குள் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தும் அதிக மக்கள்தொகையைக் கொண்ட களக்காடு பேரூராட்சிப் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் உவர்ப்பு நீரே குடிநீராக விநியோகிக்கப்படுகிறது.

இதனால் மக்கள் தனியார் லாரிகளில் விற்பனைக்கு வரும் குடிநீரை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கும் நிலை நிலவுகிறது. இத்தொகுதியில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் ஏக்கரில் 30 லட்சம் வாழைகள் பயிரிடப்படுகிறது. களக்காட்டில் வாழைத்தார் சந்தை, பதப்படுத்துதல் மையம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வாழை விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இப்பகுதியில் வாழைத்தார்களை பதப்படுத்தி மதிப்புக் கூட்டும் பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். நான்குனேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் தொடங்க தொழில் முனைவோர்களுக்கு அரசு வாய்ப்பை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யும் என்ற தேர்தல் கால வெற்று வாக்குறுதிகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

அரசியல் சூழல்:

இத்தொகுதியில் போட்டியிட அதிமுகவும், காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகின்றன.  காங்கிரஸ் கட்சியில் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ரூபி ஆர். மனோகரன் மீண்டும் போட்டியிடுவார் என பரவலாக பேசப்படுகிறது. அதற்கு அச்சாரமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரூபி மனோகரன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் அணுகி பிரச்னைகளை கேட்டறிந்து வருகிறார். இவருக்கு ஈடு கொடுக்கும் வகையில், தொகுதியில் உள்ள சாலை, பாலம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளை உற்றுநோக்கி அதனை தீர்த்து வைக்கும் முயற்சியில் தற்போதைய எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணனும் ஈடுபட்டு வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT